இதுவே அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் அமைதியாக இருந்திருப்பீர்களா?

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

வெறும் சமூக வலைதள கணக்கிருந்தால் போதும், உள்ளூர் முதல் உலக அரசியல் வரையில் அதிலேயே செய்துவிட முடியும் என்கிற காலத்திலும், கள அரசியலில் முன்னிலையில் நிற்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஹைதராபாத்தில் நடந்த அக்கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் முக்கியமான பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுடன் ஒரு பேட்டி.

இந்தியாவிலேயே முதன்முறையாக 100 சதவீத பார்வை மாற்றுத் திறனாளி, செங்கல்பட்டு மாவட்ட சிபிஎம் செயலாளராகத் தேர்வாகியிருக்கிறார். எப்படி நடந்தது இந்தப் புரட்சி?

மாவட்ட மாநாடுகளில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த மாவட்டக் குழு, மாவட்ட செயலாளரைத் தேர்ந்தெடுக்கும். அப்படித்தான் பாரதி அண்ணாவும் தேர்வு செய்யப்பட்டார். இது சலுகையல்ல. அவரது திறமைக்கும், உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம். சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலேயே இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்தவர். பிறகு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றி, 22 வயதிலேயே மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளரானார்.

சிறு வயதிலிருந்தே அதீத பார்வையிழப்பு பிரச்சினையை எதிர்கொண்டாலும், கட்சிப் பணிகளில் எந்தத் தேக்கமும் இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்கினார். இடையில் வழக்கறிஞராகி, பல வழக்குகளில் திறம்பட வாதாடியிருக்கிறார். முழுமையான பார்வையுள்ளவர்களுக்கு இணையாக வாசிப்பு, களப்பணி, போராட்டம் என்று பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் பாரதி அண்ணா. 100 சதவீத பார்வையிழப்புக்கு ஆளானவர், மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினையைப் புரிந்துகொண்டு, அந்தச் சங்கத்திலும் மாநில நிர்வாகியாக திறம்படச் செயல்பட்டிருக்கிறார். ஏற்கெனவே இருந்த மாவட்ட செயலாளர் 3 முறை பதவியில் இருந்துவிட்டதால், இந்த முறை மாவட்ட நிர்வாகிகள் இவரைத் தேர்வுசெய்து சமவாய்ப்பும், சமூக நீதியையும் நிலைநாட்டியிருக்கிறார்கள்.

மருத்துவ உயர் படிப்பில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு தந்தவர் மோடிதான் என்கிறாரே அண்ணாமலை?

(சிரிக்கிறார்) மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றாததால்தான், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றமோ அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது. உடனே, ‘மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா’ சார்பில் ஒன்றிய அரசானது, ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்தது. சலோனி குமார் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கு முடிந்த பிறகுதான், இந்தப் பிரச்சினையை விவாதிக்க முடியும் என்று சொன்னார்கள். அதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, சலோனி குமார் வழக்கின் தீர்ப்புக்காக இந்த வழக்கை ஒத்திவைத்தார்கள்.

ஆனால், உச்ச நீதிமன்றமோ அந்த வழக்குக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை. சென்னை உயர் நீதிமன்றமே இந்த வழக்கை முடிவு செய்யலாம் என்று தீர்ப்பு கொடுத்தார்கள். அதன்பிறகுதான் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, 4 பேர் கொண்ட குழு அமைத்து முடிவெடுக்கச் சொன்னது. குழு அமைத்தார்கள். ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, ஒன்றிய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இதன்மீது முடிவெடுக்கும்வரையில், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையையே நிறுத்திவைத்தார்கள். கூடவே, அதுவரையில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டையும் அமலாக்கக்கூடாது என்றும் சொல்லிவிட்டார்கள்.

இதன் பிறகுதான் ஒன்றிய அரசு பதறிக்கொண்டு, உயர் படிப்பில் 27 சதவீத இடதுக்கீடு தருவதாகச் சொன்னது. இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த ஒதுக்கீட்டை, எவ்வளவு எளிதாக மோடி அரசுதான் கொடுத்தது என்று சொல்கிறார்கள் என்று பாருங்கள். இப்படித்தான் தடுப்பூசியை இலவசமாக வழங்கும் விஷயத்திலும் செய்தார்கள். மோடி தான் இந்த ஒதுக்கீட்டைக் கொடுத்தார் என்றால், அதை 2014-லேயே கொடுத்திருக்கலாமே? எங்கள் எம்பி சு.வெங்கடேசனும், திமுக எம்பி வில்சனும் பாராளுமன்றத்தில் பலமுறை வலியுறுத்தினார்களே, அப்போதாவது கொடுத்திருக்கலாமே? நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குப் பிறகு, விருப்பமே இல்லாமல் கொடுத்துவிட்டு, அதைப் பெரிய சாதனை போலச் சொல்வதற்கு இவர்களுக்குக் கூச்சமே இல்லையா?

பாரதி அண்ணா
பாரதி அண்ணா

5 மாநில தேர்தலில் பாஜகவின் தோல்விதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான நோக்கம் என்று, மார்க்சிஸ்ட் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சொல்லியிருக்கிறார். இதே நிலைப்பாடு பாராளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றும் தேசிய அளவில் காங்கிரசுடன் கரம்கோக்க மார்க்சிஸ்ட் தயாராகிறது என்றும் சொல்லலாமா?

பாஜகவைத் தோற்கடிக்கிற அணி அகில இந்திய அளவில் ஒரே அணியாக அமையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இருப்பதால், அந்தந்த மாநிலத்தில் பாஜகவை வீழ்த்தக்கூடிய ஒரு பெரிய அணியை உருவாக்குகிற, அதிகபட்ச கட்சிகளை ஒன்று சேர்க்கிற பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும். சில மாநிலங்களில் அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கலாம், சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இல்லாமல்கூட போகலாம். உதாரணமாக, கேரளாவில் எங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்தான் பிரதானப் போட்டி. அங்கே, பாஜக ஒரு கட்சியே கிடையாது. எனவே, அங்கு நாங்கள் காங்கிரசுடன் சேர வேண்டிய அவசியமே இல்லையே?

மேற்கு வங்கத்தில் உங்கள் தேர்வு காங்கிரஸா, மம்தாவா?

மேற்கு வங்கத்தில் கண்டிப்பாக மம்தாவின் அணியில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்காது. எனவே, அங்கேயும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த கூட்டணி உருவாகவே வாய்ப்பு அதிகம்.

இந்தியாவிலேயே முதன்முறையாக 11 மருத்துவக் கல்லூரிகள் ஒரே மாநிலத்தில் ஒரே நேரத்தில் திறக்கப்படுவதை, பாஜக ஆட்சியின் சாதனையாகச் சொல்லியிருக்கிறாரே மோடி?

இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப்பெற்றது முதல், கட்டி முடித்தது வரையில் முழுக்க முழுக்க தமிழக அரசின் பணி. அனுமதி கொடுத்தது மட்டும்தான் ஒன்றிய அரசு. இதுவரையில் தமிழ்நாட்டில் எந்த மருத்துவக் கல்லூரி திறப்புக்கும் பிரதமர் வந்ததில்லை. இந்தத் திறப்பு விழாவுக்கும் பிரதமர் வரவேண்டிய தேவையும் இல்லை. இருந்தாலும் அவர் ஆசைப்பட்டார்; பிரதமர் என்ற முறையில் திறந்திருக்கிறார். தப்பில்லை.

நான் என்ன கேட்கிறேன் என்றால், தானே நேரில் வந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினாரே, அதையும் இதே வேகத்தில் கட்டி முடித்து திறப்புவிழாவுக்கு வந்திருந்தார் என்றால், உண்மையிலேயே பாராட்டலாம். 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் அடிக்கல்லுடன் நிற்கிற அந்த மருத்துவமனையை அப்படியே விட்டுவிட்டு, மாநில அரசு கட்டிய கல்லூரிகளைத் திறந்துவைப்பதையும், இதை நான்தான் கட்டினேன் என்று சொல்லிக்கொள்வதையும் என்னவென்று சொல்வது?

ரேஷனில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு குறித்து நிறைய புகார்கள் வருகின்றன. இதற்கு, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணமாகவே செலுத்திவிடலாம் என்ற யோசனையும் சொல்லப்படுகிறது. இது பற்றி ஏழை, அடித்தட்டு மக்களின் கட்சியான சிபிஎம்மின் கருத்து என்ன?

பணமாகக் கொடுப்பதைவிட, நேரடியாகப் பொருட்களாகக் கொடுப்பதுதான் நல்லது. அந்தப் பொருட்களை தரமாகவும், சரியான எடையிலும் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. மொத்தமாகப் பொருட்களை கொள்முதல் செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் தவறுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஒரே நிறுவனத்திடம் எல்லா பொருட்களையும் வாங்க வேண்டுமா? தமிழ்நாடு முழுக்க ஒரே நிறுவனம்தான் பொருட்களை சப்ளை செய்ய வேண்டுமா என்பதை எல்லாம், மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கிறது. அந்தப் பொருட்களின் தரத்தை ஒருமுறைக்கு இருமுறை சோதித்துப் பார்த்து வாங்கியிருந்தால், புகார்களுக்கு இடமிருக்காது. இவ்வளவு பெரிய திட்டத்தை நிறைவேற்றுகிறபோது, தரம் குறையாமல், விநியோகப் பிரச்சினை இல்லாமல் இருப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

திமுக அரசை விமர்சிக்கிற பாஜகவும் சரி, அதிமுகவும் சரி ஒரு கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கின்றன. இதே தவறு எங்கள் ஆட்சியில் நடந்திருந்தால் கம்யூனிஸ்ட்டுகள் எப்படிக் குதித்திருப்பார்கள். இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று. இதற்கு உங்கள் பதில் என்ன?

ஏற்கெனவே அதிமுக அரசு கடுமையான நிதி நெருக்கடியை உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறது. போதாக்குறைக்கு மத்திய அரசும், தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி உள்ளிட நிதிப் பங்கீட்டைத் தராமல் புறக்கணிக்கிறது. வெள்ள நிவாணரமாகக்கூட மற்ற மாநிலங்களுக்குக் கொடுத்த நிதியை தமிழ்நாட்டுக்குத் தரவில்லை. கரோனா நெருக்கடி வேறு.

இந்த மாதிரி சூழலில் எதிர்க்கட்சியாகவே இருந்தாலும், எல்லாப் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்துத்தானே அரசாங்கத்தை விமர்சிக்க முடியும்? கரோனா காலத்தில் நாங்கள் அதிமுக அரசையே தேவையில்லாமல் விமர்சிக்க மாட்டோம், முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றுதான் சொல்லியிருந்தோம். அதேசமயத்தில் திமுக அரசு தவறான முடிவெடுத்தால் சுட்டிக்காட்டவும், போராடவும் நாங்கள் தயங்கியதில்லை. உதாரணமாக, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2022 ஏப்ரலுக்குப் பிறகுதான் கொடுப்போம் என்றார்கள். நாங்கள் தலையிட்டு ஜனவரியிலேயே கொடுக்க வைத்திருக்கிறோம். விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணம் போதாது என்று போராடினோம். மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையைத் திறக்கக் கோரி எங்களது விவசாய சங்கம் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது.

மக்கள் பாதிக்கப்படுகிறபோது, அந்த மக்களுக்காக குரல்கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பாஜகவும், அதிமுகவும் உள்நோக்கத்தோடு திமுகவை விமர்சிக்கிறபோது நாங்களும் சேர்ந்து விமர்சிக்க வேண்டும் என்று சொல்வது நியாயமற்ற வாதம். திமுகவை விமர்சிக்கிற ஒன்றிய பாஜக அரசு, கரோனாவுக்காக தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு பணம் கொடுத்தது, வெள்ள நிவாரணத்துக்கு எவ்வளவு நிதி தந்தது? அவ்வளவு ஏன்... தமிழ்நாடு தந்த ஜிஎஸ்டியில் மாநிலப் பங்குத் தொகையையாவது திருப்பித் தந்ததா? இதற்கெல்லாம் குரல் கொடுக்காமல், சதா மாநில அரசை மட்டும் குறை சொல்வோம் என்றால், அதை எப்படி நாங்கள் ஆதரிக்க முடியும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in