பாஜகவின் சூழ்ச்சிக்கு இளையராஜா இரையாகமாட்டார்!

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி
இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எப்போதும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பவர். மிகவும் நிதானமாகவும், அதேநேரத்தில் மனதில்பட்டதை பளிச்செனவும் பேசுபவர். இளையராஜாவை நியமன எம்பி-யாக அங்கீகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பிலிருந்து அறிவிப்புகள் வெளியான அந்த தருணத்தில் காமதேனு மின்னிதழுக்காக முத்தரசனிடம் பேசினோம். அந்த உரையாடலில் இருந்து...

இளையராஜா
இளையராஜா

இளையராஜாவை மத்திய அரசு நியமன எம்பி-யாக அங்கீகரித்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இளையராஜா கெளரவிக்கப்பட வேண்டியவர்தான். உயரிய பதவிகளைப் பெறுவதற்கும் அவர் தகுதியுள்ள நபர் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அவரது பாடல்களோடு தூங்கச் செல்லும் மனிதர்கள் அதற்குச் சாட்சி. ஆனால், இந்த பதவி அவரது தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உள்நோக்கத்துடன் அவருக்குக் கொடுத்துள்ளனர். அம்பேத்கரோடு மோடியை ஒப்பிட்டு இந்தியாவிலேயே யாரும் பேசியதும், எழுதியதும் இல்லை. அதை இளையராஜா செய்தார். அதற்கான பரிசாகவே இந்த அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கக்கூடும்.

மத்திய அரசால் நியமிக்கப்படும் நியமன எம்பி-க்கள் ஆளும் கட்சியில் சேர்ந்துவிடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்களே?

இளையராஜா பாஜகவின் இந்த சூழச்சிக்கு இரையாக மாட்டார் என நம்புகிறேன். ஏன், தமிழக மக்களும்கூட அவர் இரையாகக் கூடாது என்றுதான் விரும்புகிறார்கள். இளையராஜா மீது மக்களுக்கு இருக்கும் நல் அபிப்ராயம் தான் அதற்குக் காரணம். அந்த அபிப்ராயத்தின் மதிப்பை அவரும் உணரவேண்டும். அதையும் மீறி இளையராஜா, பாஜகவுக்கு இசைவு கொடுத்தால் அவர் தன் பெயரையும் புகழையும் பலிகொடுக்கும் அபாயம் உள்ளது. அதனால் அவர் அந்தத் தவறைச் செய்யமாட்டார்.

அக்னிபத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறீர்கள். ஆனால், லட்சக் கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனரே?

நாடு முழுவதும் பல லட்சம் பேர் வேலை கிடைக்காத சூழலில் தவிக்கின்றனர். படித்தவர்களும், இப்போது படித்துக் கொண்டிருப்பவர்களும் வேலை, எதிர்காலம் குறித்து மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இப்படியான சூழலில்தான் வேலை கிடைக்காத நெருக்கடியை தவறான முறையில் பாஜக பயன்படுத்தப் பார்க்கிறது.

ஒரு விவசாயி விளைபொருளை உற்பத்தி செய்யும் போது, அரசு அதற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்து கொடுக்கவேண்டும். அதுதான் உற்பத்தி செய்பவனின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும். அப்படி அரசு கொடுக்காதபோது, வெளியில் இருக்கும் வியாபாரி, விவசாயியிடம் இருந்து விளைபொருளை குறைந்த விலைக்கு வாங்குவார். அது விவசாயிக்கு இழைக்கப்படும் அநீதி. இந்த வியாபாரியின் மனநிலையில் தான் இப்போது ஒன்றிய அரசு செயல்படுகிறது.

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என மக்களுக்கு இருக்கும் நெருக்கடிகளைப் பயன்படுத்தி அக்னிபத் என்ற தூண்டிலைப் போடுகின்றது ஒன்றிய அரசு. நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைதான் அக்னிபத் திட்டத்திற்கு அதிகமானோர் விண்ணப்பிக்கக் காரணம். அக்னிபத் மிக மோசமானத் திட்டம் என்பதே எங்களின் உறுதியான நிலைப்பாடு.

அதிமுகவுக்குள் நிலவும் உள்கட்சிக் குழப்பத்தைக் அவதானிக்கிறீர்களா?

அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை, அக்கட்சி சொல்வது போல் ஒன்றரைக் கோடித் தொண்டர்கள்கூட இருக்கலாம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ஓபிஎஸ், ஈபிஎஸ் என யார் இருந்தாலும் அந்த இயக்கம் சுதந்திரமாகவும், சுயமாகவும் செயல்படவில்லை. மற்றொரு கட்சியின் தலையீடுதான் அந்தக் கட்சிக்குள் அதிகமாக இருக்கிறது. ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போதும் சரி... அதிமுகவால் சுயமாகச் செயல்பட முடியவில்லை. எந்த ஒரு கட்சியின் நிலைப்பாட்டையும் செயலையும் இன்னொரு கட்சி தீர்மானிக்கமுடியாது. இருந்தும் பிரதான எதிர்கட்சியைப் பலவீனப்படுத்தும் வேலையை பாஜக திட்டமிட்டுச் செய்கிறது. அதனால் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சசிகலாவும் இன்னொரு பக்கம் தனியாக தொண்டர் தரிசனம் செய்துவருகிறாரே..?

சுற்றுப்பயணம் செய்யும் சசிகலா, அமமுகவை நடத்தும் டிடிவி தினகரன், பிரிந்து நிற்கும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என ஆளுக்கொரு பக்கமாக நின்றாலும் இவர்களின் அடிப்படை அதிமுகதான்! நான்கு எருதுகள் ஒற்றுமையாக இருந்தபோது ஒரு சிங்கத்தையே வீழ்த்தியதும், எருதுகள் பிரிந்தபோது சிங்கம் அவர்களை வீழ்த்தி, பசியாறியதும் தொடக்கப் பள்ளியிலேயே கதையாகப் படித்திருக்கிறோம். அதுதான் இப்போது அதிமுகவுக்குள் நடக்கிறது.

அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை, ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, தினகரன் என அனைவருமே சூழ்ச்சிக்கு இரையாகிறார்கள். கோடநாடு வழக்குத் தொடங்கி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்கிற மிரட்டல்கள் வரை தங்களுக்குள்ளேயே புழுதிவாரித் தூற்றிக் கொள்கின்றனர். ஒவ்வொருவருமே தங்களைத் தற்காத்துக் கொள்ள தங்களுக்குள்ளேயே யுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆளும் திமுகவை கடுகளவும் விமர்சனம் செய்வது போல் தெரியவில்லையே? கூட்டணி தர்மம் என்னும் பெயரில் மக்களுக்கான அரசியலில் இருந்து இடதுசாரிகளும் நழுவுகிறார்களோ?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அது தொடர்கிறது. இனியும் தொடரத்தான் போகிறது. ஓராண்டு ஆட்சியில் தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி யிருக்கிறார்கள். அதேசமயம், திமுகவிடம் நியாயமான மக்கள் பிரச்சினைகளுக்கு நாங்கள் குரல் கொடுத்தும் வருகிறோம்.

ஒன்றிய அரசின் தொழிலாளர் திருத்தச் சட்டத்தை அனுமதித்து தமிழக அரசு இரையாகிவிடக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்கக் கோருவது, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது, குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது ஆகிய கோரிக்கைகளுக்காகத் தொடர் இயக்கங்கள் நடத்தி தமிழக அரசை வலியுறுத்தியே வருகிறோம்.

ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஊடங்கங்கள் கொடுக்கும் மிகு வெளிச்சம், எளிய மக்களுக்கான குரலாக ஒலிக்கும் எங்களின் மேல் அவ்வளவாகப் படுவதில்லை. அதனால்தான் இந்தக் கேள்வி எழுகிறது என நினைக்கிறேன். நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கும் அதேசமயத்தில் தமிழகத்தில் வகுப்புவாதம் தலைதூக்கக்கூடாது என்பதற்காக உறுதியாகத் திமுகவை ஆதரிக்கிறோம்.

தமிழகத்தை இரண்டாகப் பிரிப்போம் என்கிறாரே பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன்?

ஆ.ராசாவின் பேச்சை அதற்கு நயினார் நாகேந்திரன் மேற்கோள் காட்டுகிறார். ஆ.ராசா கட்சியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பேசியது அது. அந்தக் கூட்டத்தில் அவர் ஒன்றிய, மாநில உறவுநிலையையெல்லாம் விளக்கிச் சொல்லிவிட்டு ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு செய்யவேண்டிய கடமையில் இருந்து விலகியதால் திராவிட நாடு கோஷம் முன்பு எழுந்தது என்றார். மீண்டும் அப்படியான காலம் உருவாகிவிடக்கூடாது என்ற தொனியில் அவர் பேசினார்.

ஆனால், அந்தப் பேச்சில் நயினார் நாகேந்திரனுக்கு புரிதல் இல்லை. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டிலுமே முதல்வர் ஆவோம் என்று சொல்வதில் இருந்தே நயினார் நாகேந்திரன் அகம்பாவத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in