ராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித்ஷா!

காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் பேட்டி
ராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித்ஷா!

"வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள்... தோல்வியோ அனாதை!" என்பார்கள். அதை நிரூபிப்பது போலவே, 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் நமக்கு வழக்கமாக பேட்டி தரும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பின்வாங்கினார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளருமான எம்.கிறிஸ்டோபர் திலக் மட்டும் திறந்த மனதுடன் பேசினார். அவருடன் உரையாடியதில் இருந்து...

5 மாநிலத் தேர்தலில் காங்கிரசுக்கு இவ்வளவு மோசமான தோல்வி கிடைக்க என்ன காரணம்?

ஒரு கட்சியின் வெற்றிக்கு 4 அடிப்படையான அம்சங்கள் தேவை. கொள்கை, தலைமைத்துவம், கட்சிக் கட்டமைப்பு, களப்பணி. பாஜகவின் கொள்கை அதிதீவிர இந்துத்துவா, அதிதீவிர முதலாளித்துவம், அதிதீவிர தேசியவாதம். இதற்கு காங்கிரஸ் கட்சியிடமும் சரியான மாற்று இருக்கிறது. சோசலிஸத்துக்கும், கேப்பிடலிஸத்துக்கும் நடுவில் மிதமான முதலாளித்துவம், இந்துக்களுக்கான மரியாதையுடன் கூடிய மத நல்லிணக்கம், மிதமான தேசியவாதம் இதெல்லாம் காங்கிரசில் இருக்கிறது. ஆனால், இதைச் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க கட்சி தவறிவிட்டது.

தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்டால், ராகுல்காந்தி நல்ல மனிதர் என்று மக்களிடம் பெயர் வாங்கியிருக்கிறார். ஆனால், வலிமையான அரசியல்வாதியாக மக்கள் இன்னும் அவரை முழுமையாக உணரவில்லை. அடுத்தது, கட்சி கட்டமைப்பு. மீனிருக்கிற குளத்தில் பக்காவாக வலைவிரித்து காத்திருந்து, வலையை வெளியே எடுக்கும்போது அதில் ஒரு மீன்கூட இல்லை என்றால் என்ன அர்த்தம், வலை ஓட்டை. அதுதான் உபியில் நடந்தது.

பிரியங்கா காந்தி வியூகம் வகுத்தார், கடுமையாக உழைத்தார், ஆனால், ஓட்டு விழவில்லை. காரணம், அங்கே கட்சி கட்டமைப்பு சுத்தமாக இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால், ஆட்சி நிர்வாகத்தில்தான் கவனம் செலுத்தும். பாஜக அப்படியில்லை. கட்சியை கட்டுவதில்தான் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். காங்கிரஸில் களப்பணிக்குத் தொண்டர்கள் இருக்கிறார்கள். தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கட்சி கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் பலவீனமாக இருப்பதால், அந்தக் களப்பணி பயனற்றுப் போய்விடுகிறது.

கிறிஸ்டோபர் திலக்
கிறிஸ்டோபர் திலக்

உபியில் அகிலேஷ் யாதவுடன் கூட்டணி வைத்து அவர் சம்மதித்த சீட்களில் நின்றிருந்தால், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுவதையாவது தடுத்திருக்கலாம் இல்லையா?

உபி அரசியல் சூழலைப் புரிந்துகொள்ளாமல் கேட்கிறீர்கள். உபியில் தனித்துப் போட்டியிடுவது என்பது, தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கு ஒப்பானது என்பது எங்களுக்கும் தெரியும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராகுல்ஜியை சந்தித்தபோது இதைச் சொன்னேன். "உபியில் என்ன செய்யப் போறீங்க சார்... இந்தியா முழுக்க உபி எலெக்சனைக் கவனிப்பாங்க. சீக்கிரமா அகிலேஷுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டு, பிரியங்கா மேடத்தை உபியை விட்டு வெளியே கொண்டுவந்திடுங்க" என்றேன். காங்கிரஸை தன்னுடைய கூட்டணியில் சேர்க்க அகிலேஷ் தயங்குவதாகவும், காங்கிரசும், பிஎஸ்பியும் சேர்ந்துவந்தால் ஓகே. இல்லையென்றால் பெரிய பயனில்லை என்று நினைப்பதாகவும், ஆனால், அதற்கு மாயாவதி ஒத்துவரவில்லை என்றும் ராகுல் சொன்னார். ஆக, வேறுவழியின்றிதான் நாங்கள் தனித்துப் போட்டியிட வேண்டியதாகிவிட்டது.

"பாஜகவின் நல்லாட்சிக்கும், திட்டங்களுக்கும் மக்கள் கொடுத்த பரிசுதான் இந்த வெற்றி" என்று மோடியும், அமித்ஷாவும் கூறியிருக்கிறார்களே?

இதில் கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்யும் இருக்கிறது. பாஜக அரசு கொண்டுவந்த ஒவ்வொரு திட்டத்திலும் மோடியின் படத்தைப் போட்டு, அதைச் செய்வது நாங்கள்தான் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள். காங்கிரசுக்கு இதெல்லாம் வராது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்பவர்களிடம் போய் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது யார் என்று கேளுங்கள். கலைஞர் அல்லது ஜெயலலிதா என்பார்கள். மோடி, காங்கிரஸ் அரசு செயல்படுத்திய 31 திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி தன்னுடைய திட்டம் போல, தன்னுடைய படத்தைப் போட்டுச் செயல்படுத்தினார். அதைத் தன்னுடைய சாதனையாகவே மக்களை நம்ப வைப்பதிலும் வெற்றிபெற்றிருக்கிறார். அதுவும் அவர்களது வெற்றிக்குக் காரணம்.

இந்தத் தேர்தல் முடிவுகள் இனி பாஜகவுக்கு மாற்றே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. இனி திமுகவின் பாஜக எதிர்ப்பு மனநிலையில் கூட இது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாஜக அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?

எங்களுக்கு மாற்றே கிடையாது என்று ஒரு ஜனநாயக நாட்டில், ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள் என்றால் அங்கே ஜனநாயகம் செத்துவிட்டது என்றுதான் பொருள். எல்லோரும் எங்ககூட வந்திடுங்க. இல்லை உங்களை குளோஸ் பண்ணிடுவோம் என்று திமுக போன்ற எதிர்க்கட்சிகளை மிரட்டுவதை மக்கள் எப்படி ஏற்பார்கள்?

நேரு குடும்பம்தான் காங்கிரஸ் கட்சியைப்பிடித்த கேடு என்று பாஜக தவிர்த்து இன்னும் சிலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்களே?

பாஜக அளவுக்கு இல்லாவிட்டாலும், காங்கிரசிலும் நிறைய பிற்போக்காளர்கள், சனாதனவாதிகள் இருக்கிறார்கள். அதையும் மீறி காங்கிரஸ் ஓர் முற்போக்கு ஆட்சியைத் தந்ததற்குக் காரணம் நேரு குடும்பம்தான். எனவேதான் காங்கிரசைவிட நேரு குடும்பம் மீது பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்சுக்கும் அதிக கோபம். ஆனால், மற்றவர்களும் அப்படிப் பேசுவது, அவர்களது அறியாமையைக் காட்டுகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேரத் தயார் என்று மம்தா பானர்ஜி கூறியிருப்பது பற்றி?

உபியில் இவர் ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அகிலேஷ் யாதவ் ஜெயித்திருந்தால், இந்தம்மையார் இப்படிப் பேசியிருப்பாரா? கோவாவில் காங்கிரசின் தோல்விக்குக் காரணமே இவரும், ஆம் ஆத்மி கட்சியும்தான். இருப்பினும் 2024-க்கு இணைந்து களம் காண்பது பற்றி கண்டிப்பாக சிந்தித்தே ஆக வேண்டும்.

"நாட்டைக் காப்பாற்ற கட்சி தியாகம் செய்யவேண்டிய நேரமிது. காலம் வழங்கியிருக்கும் கடைசி வாய்ப்பு 2024!" என்று பீட்டர் அல்போன்ஸ் சொல்லியிருக்கிறாரே?

அவர் காங்கிரஸிலும் இல்லாமல், திமுகவிலும் இல்லாமல் நடுவில் இருந்து, தமிழக அரசின் சிறுபான்மை ஆணையத் தலைவர் பொறுப்பைப் பெற்றிருக்கிறார். வயதும் ஆகிவிட்டது. அரசியலின் லாஸ்ட் இன்னிங்ஸில் இருப்பவரிடம் போய் கருத்துக் கேட்டால், இப்படித்தான் சொல்வார்.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து காங்கிரஸார் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் "நெட் ஃப்ளிக்ஸில் என்ன பார்க்கலாம்னு சொல்லுங்க மக்களே..." என்று கார்த்தி சிதம்பரம் ட்விட் போட்டது பொறுப்பான செயலா?

நீங்க ஏன் அதை விளையாட்டுத்தனமாகப் பார்க்கிறீங்க. எம்.ஆர்.ராதா என்றைக்குமே நேரடியாக அரசியல் பேசமாட்டார், எல்லாவற்றையும் ஒரு நக்கல் நையாண்டியோடுதான் பேசுவார். அவரைப் புரிந்துகொண்ட நீங்கள் ஏன், கார்த்தி சிதம்பரத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? அவர் சொல்லவரும் கருத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, சொல்லும் விதத்தை மட்டும் பார்த்தீர்கள் என்றால், எம்.ஆர்.ராதாவும் திமிர்பிடித்தவர்தான்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுலுக்கு விருப்பம் இல்லையென்றால், பிரியங்காவையாவது அந்தப் பதவியில் அமர்த்தலாமே?

பிரியங்காவை முன்னிறுத்த வேண்டிய தேவையே இப்போது இல்லை சார். ராகுல்காந்திதான் கட்சிக்குத் தலைவர். இன்னும் 3, 4 மாதத்தில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்பார். ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ சக்திகளை அவரளவுக்கு எதிர்க்கிற வேறு தலைவர் இந்தியாவிலேயே கிடையாது. அவரது பெரிய ’வீக்னஸ்’ என்று நான் நினைப்பது, பலமான தளபதிகள் இல்லாதது. மோடிக்கு ஒரு அமித்ஷா வாய்த்தது போல ராகுலுக்கு ஒரு துணை கிடைக்கவில்லை. அப்படி ஒருவரையோ பலரையோ தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஓர் எதிர்க்கட்சியின் செயல்பாட்டைக் காட்டுவது அதன் போராட்டங்களும், வலுவான கண்டனக்குரல்களும்தான். காங்கிரசில் அறிவாளிகள், இளைஞர்கள் பலர் இருந்தும், அதிகம் பேசுவதுகூட இல்லையே ஏன்?

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரையில் காங்கிரசை மையப்படுத்திய அரசியல்தான் இங்கே இருந்தது. ஆனால், 2014-க்குப் பிறகு இங்கே பாஜகவை மையப்படுத்தி அரசியல் நடக்கிறது. பாஜக என்ன பேசுகிறது, என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறது என்பதைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள்; எதிர்வினையாற்றுகிறார்கள். மக்களுக்கே அது புரிந்துவிட்டது, காங்கிரசாருக்குப் புரியவில்லை. அவர்கள் இன்னும் பழைய அதிகார தோரணையிலேயே இப்போதும் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆக்டிவிஸ (போராளி) அரசியல் செய்ய முடியாதுதான். எதிர்க்கட்சியாகி 8 வருடமாகியும் நம் தலைவர்கள் அப்படியே இருப்பதற்குக் காரணம், இவர்கள் காங்கிரசை மையப்படுத்திய அரசியலிலேயே பிறந்து வளர்ந்தவர்கள், ரொம்பக் காலம் முதல்வராகவோ, அமைச்சராகவோ, ஆளுங்கட்சி எம்பி, எம்எல்ஏ-க்களாகவோ இருந்தே பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பதுதான்.

தலைவர்கள்தான் அப்படி என்றால், அவர்களது பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களால் கம்யூனிஸ்ட்கள் மாதிரியோ, ஆம் ஆத்மி மாதிரியோ தெருவில் இறங்கிச் சண்டை போட முடியாது. அதற்கான பயிற்சியும் இல்லை. காலம் பூராவும் சொந்தக் கட்சிக்குள் கலகம் செய்யவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. பாஜகவில் இன்று நிர்வாகிகளாக இருப்பவர்கள் எல்லாம் பேசிப் பேசியே இந்த இடத்துக்கு வந்தவர்கள். காங்கிரசின் தலைவர்கள் அப்படியில்லையே, பேசாமல்தான் இந்த இடத்துக்கு வந்தார்கள். அதனால் தான் வாரிசுகள், இளைஞர்களாக இருந்தும்கூட பேசாமலேயே இருக்கிறார்கள்.

பாஜகவில் மோடி என்ன பேசுகிறாரோ அதையே கட்சியின் அத்தனை நிர்வாகிகளும் பேசுகிறார்கள். திமுகவிலும், நாம் தமிழரிலும் கூட அதன் தலைவர் பேசுவதை கட்சிக்காரர்கள் அப்படியே பிரதிபலிக்கிறார்கள். காங்கிரசில் அப்படியான ஆட்கள் குறைவு. பிறகெப்படி யானை பலத்துடன் நிற்கிற பாஜகவை காங்கிரஸால் எதிர்கொள்ள முடியும்?

2024-ல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று நம்புகிறீர்களா?

மோடிக்கு ஒரு அமித்ஷா வாய்த்தது போல, ராகுல்காந்திக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் வாய்க்க வேண்டும். இங்கே எல்லா வேலையையும் நேரு குடும்பத்தினர்தான் பார்த்தாக வேண்டியதிருக்கிறது. களத்தில் அவர்கள் பாடுபட, மற்ற குட்டித் தலைவர்கள் எல்லாம் அதில் கிடைக்கிற லாபத்தை அனுபவிப்பதற்கு மட்டுமே காத்திருக்கிறார்கள். 2024-ல் காங்கிரஸ் தனித்து ஆட்சிக்கு வந்துவிடும் எல்லோரும் மந்திரியாகிவிடலாம் என்ற கற்பனை எல்லாம் எனக்குக் கிடையாது. நான் அதிகபட்சம் எதிர்பார்ப்பது, 2024-ல் 100 எம்பி-க்களையாவது காங்கிரஸ் கட்சி பெற வேண்டும். அதற்கேற்ப சத்தீஷ்கர், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் கவனம் செலுத்து வேலை பார்க்கணும். வெறும் 3, 4 சதவீத ஓட்டுகளை வைத்திருக்கிற உபி, பிஹார், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிஸா மாதிரியான மாநிலங்களை கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பில் விட்டுவிடலாம். இந்த யதார்த்ததைத் புரிந்துகொண்டு கட்சியை பலப்படுத்தினால், 2024-ல் பாஜகவை ஆட்சியில் இருந்து நிச்சயம் அகற்ற முடியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in