திமுக ஆட்சிக்கு 5 மதிப்பெண்கூட போடமுடியாது!

தளவாய் சுந்தரம் தடாலடி பேட்டி
தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினருமான தளவாய்சுந்தரம் மனதில் பட்டதை பட்டெனப் பேசுபவர். அண்மையில், அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவினருடன் சென்று தமிழக ஆளுநரைச் சந்தித்து, திமுக ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து புகார் தந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். அது தொடர்பாக காமதேனு மின்னிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...

திமுக அரசின் செயல்பாடுகள் சரியான திசையில் செல்வதாகப் பலரும் பேசுகிறார்கள். நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அதிமுக அரசு கொண்டுவந்த ஒவ்வொரு திட்டங்களையும் முடக்குகிறார்கள். கிராமப்புற மக்களின் மருத்துவத் தேவைக்கு பெரிதும் உதவிய ‘அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை அடியோடு முடக்கிவிட்டார்கள். உண்மையில், நோயாளிகளுக்கு அருகிலேயே மருத்துவமனையைத் தந்த முத்தான திட்டம் அது. அதை முடக்கிவிட்டு, இல்லம் தேடி மருத்துவம் என மக்களை ஏமாற்றுகிறார்கள். நன்றாக இருப்பவர்களைத் தேடிப்போய் சிகிச்சை வேண்டுமா என்கிறார்கள். இதனால் உண்மையான நோயாளிக்கு கிடைக்க வேண்டிய மருத்துவச் சேவை முடக்கப்பட்டுவிட்டது. இதேபோல், தாலிக்குத் தங்கம் கொடுத்த திட்டம், மகளிருக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் இதையெல்லாம் ஒதுக்கிவிட்டார்கள்.

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள், படிக்காதவர்கள் என இருதரப்பாக திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. ஏழை, எளிய மக்களுக்கு பேருதவியாக இருந்த இப்படியான திட்டங்களை, அரசியல் காழ்புணர்ச்சியுடன் ரத்து செய்வதிலேயே திமுக ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்.

அத்துடன், நாளுக்கு நாள் விலைவாசி உயர்வும் மக்களை பெரும்சுமையில் தள்ளி வருகிறது. அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு ரொக்கமும் கொடுத்தோம். திமுக அதிலும் கைவைத்துவிட்டது. மெல்ல பொதுமுடக்கம் எட்டிப் பார்க்கும் இந்நேரத்தில், பொங்கல் தொகை கொடுத்திருந்தால் ஏழை மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்திருக்கும். இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும் சக்தி திமுகவுக்கு இல்லை.

சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளீர்களே..?

அதிமுக ஆட்சியில் துப்பாக்கிக் கலாச்சாரமே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது, துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி விட்டது. போதை வஸ்துகள் ஒருபக்கம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஆனால், மாவட்ட எஸ்பிக்களிடம் பழைய கஞ்சா வியாபாரிகளின் பட்டியலைக் கேட்டுப்பெற்று, அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகப் பொய்யாக ஒரு கணக்கைக் காட்டி கைது செய்கிறார்கள். பள்ளிக்கூடங்களின் அருகில் கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுக்கிறார். அப்படியென்றால், பள்ளிக்கூடப் பகுதிகளிலேயே சர்வ சாதாரணமாக கஞ்சா புழக்கம் இருப்பதாகத்தானே அர்த்தம். திமுக நிர்வாகிகளின் அராஜகமும் எல்லா இடங்களிலும் தலைதூக்கிவிட்டது. ஆளுநரிடமும் இதையெல்லாம் தான் புகாராகக் கொடுத்தோம்.

ஆளுநர் என்ன சொன்னார்?

எங்கள் கோரிக்கைகளையும் ஆட்சிக்கு எதிரானப் புகார்களையும் பொறுமையாகக் கேட்டார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் ‘கோ பேக் மோடி’ கோஷமிட்ட திமுக, இப்போது பிரதமரின் வருகையை வரவேற்கிறது. பாஜகவிடம் பணிவு காட்டும் திமுகவின் இந்த அணுகுமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆளும்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும் பேசுவது திமுகவுக்கு புதிது அல்ல. நிதி ஆயோக் தரவரிசைப் பட்டியலில் சுகாதாரத்தில் கடந்த 2019-2020 -ம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகம்2-ம் இடத்துக்கு வந்தது. கேரளம் முதலிடத்தில் இருந்தது. 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு 60 சதவீத நிதியும், முந்தைய அதிமுக அரசு 40 சதவீத நிதியும் ஒதுக்கியது அனைவருக்குமே தெரியும். அதிமுக அரசின் சாதனைகளையே தங்களுடைய சாதனைபோல் மார்தட்டிக் கொள்ளும் நிலையில் திமுக பின்தங்கி இருக்கிறது.

நாங்கள் ஆட்சியில் இருக்கும்போதும் இப்போதும் மோடி தான் பிரதமர். திமுக எதிர்ப்பு காட்டிய நீட் பிரச்சினையும் அப்படியே தான் இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் சொல்லி அப்போது ‘கோ பேக்’ சொன்னவர்கள் இப்போது, ‘அவர் நாட்டின் பிரதமர்’ எனப் பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கையில், கவுண்டமணி ஒரு படத்தில் பேசும் ‘உலக மகா நடிப்புடா சாமி’ என்னும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராக இருக்கிறதா?

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை ஆளும்கட்சி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஆள் பலம், பணபலம் என அத்தனையையும் ஆளும்கட்சி பிரயோகிக்கும். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. ஜனநாயகத்தை நம்புபவர்கள். மதிப்பவர்களும்கூட.

ஜெயலலிதா காலத்தில் அதிமுக ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்களை அடிக்கடி நடத்தும். ஆனால் இப்போது, பாஜக தான் எதிர்க்கட்சி போல் தோற்றம் அளிக்கிறதே?

ஏன்... கடந்தவாரம் கூட மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக போராட்டம் நடத்தியதே. முன்புபோல் தினம் ஆர்ப்பாட்டம், போராட்டம் இல்லையே எனக் கேட்கிறீர்கள். ஒன்றரை கோடித் தொண்டர்களைக் கொண்ட பேரியக்கம் அதிமுக. ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தால் அலைகடலென திரளும் தொண்டர்களே எங்கள் பலம். ஆனால், இப்போது கரோனா காலத்தில் போராட்டம் நடத்த அனுமதி கிடைப்பதில் பெரிய சிக்கல்கள் இருக்கிறது. அதனால் அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து விமர்சித்து வருகிறோம். பொதுவெளியில் நாங்கள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம். திமுகவின் அரசியல் பழிவாங்கல்களுக்கு அஞ்சாமல் ஜெயலலிதா காட்டிய வழியில் நடைபோடுகிறோம்.

திமுக ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்?

ஏதேதோ மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி திமுக வெற்றி பெற்றிருப்பதை சாமானியர்களும் உணரத் தொடங்கி விட்டார்கள். நாளுக்கு நாள் இந்த ஆட்சியியின் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. 8 மாதத்திலேயே இந்த புலம்பல்கள் என்றால், இந்த ஆட்சி முடிவதற்குள் திமுக மக்களின் மனதைவிட்டே அகன்றுவிடும். என்னைக் கேட்டால், நூற்றுக்கு 5 மதிப்பெண்கூட கொடுக்க முடியாத அவல ஆட்சிதான் இந்த திமுக ஆட்சி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in