சாதிவாரிக் கணக்கெடுப்பு- சரித்திரப் பின்னணியும் நிதர்சனமும்

சாதிவாரிக் கணக்கெடுப்பு- சரித்திரப் பின்னணியும் நிதர்சனமும்

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் 127-வது சட்டத் திருத்த மசோதா, ஆகஸ்ட் 10-ல் மக்களவையில் ஏகமனதாக நிறைவேறியிருக்கிறது.

பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாடாளுமன்றம் ஒவ்வொரு நாளும் அமளியைச் சந்தித்துவந்த நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாளில் மட்டும் அனைத்து உறுப்பினர்களும் அமைதியாக ஒத்துழைத்தது முக்கியத்துவம் பெறுகிறது. அன்றைய விவாதத்தின்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய கோரிக்கைகளும் மிகுந்த கவனம் பெற்றிருக்கின்றன.

சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதா தளம், அப்னா தளம், இந்தியக் குடியரசுக் கட்சி (அ) ஆகிய கட்சிகளும் இதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தன. ஆனால், இவ்விஷயத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னமும் பிடிவாதம் காட்டுவது கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

முரண்படும் பாஜக அரசு

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அனைத்துச் சமூகத்தினரும் தத்தமது எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதுதான், சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்துபவர்களின் முக்கிய நோக்கம். 1951 முதல், பட்டியலின / பழங்குடியின சமூகத்தினர் குறித்த தரவுகள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறித்த தரவுகள் வெளியிடப்படுவதில்லை.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, சமூக-பொருளாதார அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டன. பல்வேறு காரணங்களுக்காக அந்தத் தரவுகளைக்கூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியிடவில்லை. இன்றைக்கு மோடி தலைமையிலான பாஜக அரசு இவ்விஷயத்தில் இன்னும் மோசமாக நடந்துகொள்கிறது.

“பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் குறித்த தரவுகள் இருக்கின்றனவா?” என மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ஹாஜி ஃபாசிலூர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சமூக நீதித் துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக், “2011-ல் சமூக-பொருளாதார அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, தரவுகள் சரியாகச் சேகரிக்கப்படவில்லை. மேலும், அந்தத் தரவுகள் காலாவதியானவை” என்று சொன்னார். ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாகப் பேசிய மத்திய உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், பட்டியலின / பழங்குடி சமூகத்தினர் தவிர பிற சமூகத்தினர் குறித்து சாதிவாரியாகக் கணக்கெடுப்பதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட தரவுகளை வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன் என கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ராஜ்நாத் சிங் உள் துறை அமைச்சராக இருந்தபோது, 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும் என்று உறுதியளித்திருந்ததையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. 2015-ல் சாதி பெயர்களை வகைப்படுத்த நிதி ஆயோக் அமைத்த நிபுணர் குழு, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளையே பயன்படுத்தின என்று நீதியரசர் வங்கலா ஈஸ்வரய்யா போன்றோர் குறிப்பிடுகிறார்கள்.

காங்கிரஸின் நிலைப்பாடு

இதற்கு முன்பு, 1931-ல்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது இந்திய நிலப்பரப்புடன் இன்றைய பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் இணைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால், சமூகத்தில் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் என அரசு கருதியது. அரசு மட்டுமல்ல, முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த தலைவர்களைப் பிரதானமாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்தது. குறிப்பாக, ஏ.ஓ.ஹியூம் எனும் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி ஒருகட்டத்தில் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த தலைவர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்ததையும் இதன் பின்னணியில் பொருத்திப் பார்க்கலாம்.

இப்போதும்கூட, இவ்விஷயத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாடு இதுதான் எனத் தெளிவாகக் கூறிவிடவில்லை. நாடாளுமன்ற விவாதத்தில் அபிஷேக் மனு சிங்வி சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாகப் பேசினாலும், கட்சித் தலைமை இன்னமும் இதுதொடர்பாக உறுதியான கோரிக்கையை முன்வைக்கவில்லை. இவ்விஷயத்தில் காங்கிரஸ் மீது நீண்டகாலமாகவே விமர்சனங்கள் உண்டு.

“2011 கணக்கெடுப்புக்கு முன்னர் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தனிப்பட்ட முறையில் அரசுக்கு மீண்டும் வலியுறுத்தினேன். பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புக்குச் சாதகமாக வேறு சில குரல்களும் அப்போது எழுந்தன. ஆனால், அப்போதைய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் அதற்கு தடைச்சுவர் எழுப்பிவிட்டார். சில தலைவர்களும் அறிஞர்களும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக சாதிக் குழுக்களின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரினார்கள். அது ப.சிதம்பரத்துக்கு வசதியாகப் போய்விட்டது. அதை ஒரு காரணமாகக் காட்டி பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான எனது அறிவுறுத்தலை ஏற்க மறுத்துவிட்டார்” என மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் ‘சமூகநீதிக்கான அறப்போர்’ நூலில் காட்டமாகவே பதிவுசெய்திருக்கிறார்.

பாஜக தயங்குவது ஏன்?

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மோடி அரசு விரும்புகிறது என்றே அக்கட்சியைச் சேர்ந்த சங்கமித்ரா மவுரியா கூறினாலும், இதுகுறித்து பாஜக இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. முன்னேறிய வகுப்பினருக்கு ஆதரவான கட்சி எனும் பிம்பத்தை உடைத்து அனைத்துத் தரப்பினருக்குமான கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாஜக நீண்டகாலமாகவே முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எழுந்திருக்கும் அழுத்தத்தை அக்கட்சி சமாளித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பாஜகவில் ஆங்காங்கே ஆதரவுக் குரல் ஒலித்தாலும், அக்கட்சியில் இருக்கும் முன்னேறிய வகுப்பினர், அதை விரும்பவில்லை என்பது வெளிப்படை. சாதிவாரியாகக் கணக்கெடுப்பது நாட்டின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என பாஜக ஆதரவு ஊடகங்களும் பரப்புரையில் ஈடுபட்டிருக்கின்றன. இத்தனைக்கும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனும் குரலை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது பாஜக எழுப்பியிருக்கிறது என்பதுதான் விநோதம்!

அரசு மனம் மாறுமா?

மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்டோர் 50 சதவீதம் எனும் அளவில் இருக்கிறார்கள் என மண்டல் கமிஷன் பதிவுசெய்திருக்கிறது. எனினும், எண்ணிக்கை அதைவிட மிக அதிகமாகவே இருக்கும் என சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவான அரசியல் கட்சிகளும், செயற்பாட்டாளர்களும் சொல்கிறார்கள். தற்போது, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அவர்களுக்கு 50 சதவீதத்துக்கும் மேல் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகள் விரும்புகின்றன. இதற்குச் சாதிவாரிக் கணக்கெடுப்புதான் தீர்வு என்றும் பலர் நம்புகிறார்கள்.

அனைத்து சாதியினரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அவர்கள் அடைந்திருக்கும் நிலை குறித்த உண்மைத் தகவல்களைப் பெறும்போதுதான் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என எல்லா அம்சங்களிலும் அதிகாரபூர்வமாக சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சியை அரசால் எடுக்க முடியும். நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் துல்லியமான நடைமுறையைச் சாத்தியப்படுத்த முடியும். சமூக அடுக்கில் ஒவ்வொரு சாதியினரும் வைக்கப்பட்டிருக்கும் விதம் குறித்த தெளிவான சித்திரத்தையும் சாதிவாரிக் கணக்கெடுப்பால் வழங்க முடியும். அரசு என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in