எடப்பாடியின் பெருந்தன்மை ஸ்டாலினிடம் இல்லை- தளவாய் சுந்தரம் தடாலடி

எடப்பாடியின் பெருந்தன்மை ஸ்டாலினிடம் இல்லை- தளவாய் சுந்தரம் தடாலடி

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி எனத் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை நீள்கின்றன திமுக அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைகள். இந்தச் சூழலில் அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில், சட்ட வல்லுநர் குழுவை நியமித்துள்ளது அக்கட்சித் தலைமை. இந்தக் குழுவில் இடம்பிடித்திருக்கும் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரத்தை ‘காமதேனு’ மின்னிதழுக்காகச் சந்தித்தேன். அவரது பேட்டி:

அதிமுகவில் பல்வேறு அணிகள் இருக்கும் நிலையில், இப்போது கூடுதலாக சட்ட வல்லுநர் குழுவை நியமித்திருப்பது ஏன்?

அதிமுகவினர் மீது பொய்யான வழக்குகளைப் போட ஆளும் தரப்பு ஆயத்தமாகி வருகிறது. அந்த வழக்குகளிலிருந்து அதிமுகவினரைக் காக்கின்ற, அவர்களுக்கு நியாயமான ஆலோசனைகளை வழங்குகின்ற பணியை இந்தக் குழு செய்யும். இதற்கிடையே அதிமுகவில் தொழிற்சங்கத் தேர்தலை மாவட்டம்தோறும் நடத்த ஆயத்தமானோம். ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் தொழிற்சங்கத்திற்குத் தேர்தல் நடத்தக் கூடாது என ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ளவும் சட்ட வல்லுநர் குழு தேவையாக உள்ளது. அதிமுகவினர் மீது போடப்படும் பொய்வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்களை இந்தக் குழு ஒருங்கிணைக்கும்.

அப்படியானால் திமுக பழிவாங்கும் அரசியல் செய்வதாகச் சொல்கிறீர்களா?

அதில் என்ன சந்தேகம்? கோடநாடு விவகாரம் பற்றிப் பேரவையில் பேசும்போது, “எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லை என நிரூபித்துவிட்டு அதிமுகவினர் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்” என்று சொல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்படியானால் வழக்கின் விசாரணையையே அவர் மாற்ற விரும்புகிறார் என்றுதானே அர்த்தம்? இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது சட்டசபையில் ஒரு முதல்வர் இப்படிப் பேசுவதை எப்படிப் புரிந்துகொள்வது? இந்த வழக்கில் பழிவாங்கும் நோக்கத்தோடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரையும் புனையும் முயற்சி நடப்பதாக ‘சாணக்யா’ யூடியூப் சேனலில் சொல்கிறார்கள். அது குறித்துப் பேச முயன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பேசவிடாதபோது, சாதாரண உறுப்பினர்களின் குரலுக்கு இந்த சபையில் என்ன மரியாதை இருக்கும்?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்தபோது திமுகவினரால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆட்சியை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இயங்கினர். அதன் பின்னரும்கூட திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் அதிமுக ஈடுபடவில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் அந்தப் பெருந்தன்மை திமுகவுக்கோ, ஸ்டாலினுக்கோ இல்லவே இல்லை.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு பற்றி..?

கொங்கு மண்டலத்தில் அதிமுக அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது. அதிலும் கோவை மாவட்டத்தில் அதிமுக அமோக வெற்றிபெற்றது. அதை ஜீரணிக்க முடியாமல் வேலுமணி மீது பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். சட்ட வல்லுநர் குழுவை அதிமுக தலைமை நியமித்ததன் தொடக்கப்புள்ளியும் இதுதான்! ரெய்டுகளாலோ, வழக்கு நடவடிக்கைகளாலோ அதிமுகவை முடக்க முடியாது. மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவருகிறார்கள்.

முன்பு திமுக செய்ததைப் போலவே அதிமுகவும் இப்போது வெளிநடப்பு செய்யத் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான விவாதம் இருந்தால்தானே வளர்ச்சி இருக்கும்?

முந்தைய ஆட்சியில் திமுகவினர் வேண்டுமென்றே வெளிநடப்பு செய்தார்கள். இப்போதைய சூழல் அப்படியானது இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பேச முற்படும்போது, ‘தாராளமாகப் பேசட்டும். நாங்கள் பதிவுசெய்து கொள்கிறோம்’ என்பதுதானே ஜனநாயகமாக இருக்க முடியும்? ஆனால், திமுக ஆட்சியில் அந்த ஜனநாயகம் துளியும் இல்லை. நூறு நாள் திமுக ஆட்சியின் வேதனைகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றைத் திமுக அரசு நிறைவேற்றவில்லை. எதைச் சொல்லி வாக்குக் கேட்டார்களோ அதைச் செயல்படுத்தாமல் இருப்பது திமுகவுக்கு புதிதும் அல்லவே! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in