கலவர பூமியான தென்னாப்பிரிக்கா!- இந்தியர்களுக்குக் குழிபறித்த குப்தா சகோதரர்கள்

கலவர பூமியான தென்னாப்பிரிக்கா!- இந்தியர்களுக்குக் குழிபறித்த குப்தா சகோதரர்கள்

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்ற மோகன்தாஸ் கரம்சந்துக்கு, அங்கு கிடைத்த நிறவெறி கசப்பனுபவம்தான் பின்னாளில் அவரை மகாத்மா காந்தி ஆக்கியது. அவரது அகிம்சை வழியைப் பின்பற்றி தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு முடிவு கட்டினார் நெல்சன் மண்டேலா. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஆதியந்த உறவு அத்தனை ஆழமானது.

ஆனால், அதே தென்னாப்பிரிக்கா கடந்த சில வாரங்களாகக் கலவரத்தால் பற்றி எரிவதன் பின்னணியில், ‘குப்தா பிரதர்ஸ்’ எனும் இந்திய சகோதரர்கள் இருப்பது வேதனை தரும் விஷயம். அந்த வகையில் தென்னாப்பிரிக்கா - இந்தியா எனும் இரு தேசங்களின் ஆத்மார்த்த உறவுப் பாலத்தைக் குலைத்திருக்கிறார்கள் இந்த குப்தா சகோதரர்கள். அந்தப் பின்னணியை முழுவதுமாய் அறிந்துகொள்ள, தென்னாப்பிரிக்க அரசியலிலிருந்தே தொடங்குவோம்.

தோல்வியில் தொடங்கிய ஜூமா

நீண்டநாள் சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலையாகி 1994-ல் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார் நெல்சன் மண்டேலா. அவரது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தேசம் நெடுக அமோக வெற்றி பெற்றபோதும், குவாஜுலு நடால் என்ற மாகாணத்திலிருந்து போட்டியிட்ட ஜேக்கப் ஜூமா என்பவர் தோல்வி அடைந்திருந்தார். ஆனபோதும் அவரது கட்சிப் பணியைப் பாராட்டி கவுரவப் பதவிகள் அளிக்கப்பட்டன.

தான் சார்ந்த ஜுலு இனத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி என்பதாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட ஜூமா, கட்சியிலும் ஆட்சியிலும் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். அடுத்த மூன்றே வருடங்களில் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும், அதற்கடுத்த இரண்டு வருடங்களில் நாட்டின் துணை அதிபர்களில் ஒருவராகவும் அசுர வளர்ச்சி பெற்றார் ஜூமா. ஆப்பிரிக்க தேசங்களில் முதலாவதாக பீடு நடைபோட்ட தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சி, ஜூமா துணை அதிபராக இருந்த ஏழு ஆண்டுகளில் தொடர் ஊழல்களால் பின்னடைவைச் சந்தித்தது.

அதிரவைத்த வழக்கு விசாரணை

பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் பதவி இழக்கும்வரை ஜூமா தனது ஊழல் திருவிளையாடல்களைத் தொடர்ந்தார். எனினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணுக்கு எதிராகவே வழக்கின் போக்கு திரும்பும்படி செய்தார். அந்தப் பெண்ணின் சம்மதத்துடனே உறவு நிகழ்ந்தது, அப்பெண் நடத்தை கெட்டவர், மனநலன் பாதிக்கப்பட்டவர்.. என்றெல்லாம் விசித்திர வாதங்கள் வைக்கப்பட்டன. கடைசியில், இருதரப்பு சம்மதத்துடனே உறவு நிகழ்ந்ததாகத் தீர்மானித்த நீதிமன்றம்,  ‘பாதுகாப்பு உபகரணம் இன்றி உறவு கொண்டதற்கான’ கண்டனம் ஒன்றை மட்டுமே தண்டனையாகச் சுமத்தி ஜூமாவை விடுவித்தது.

பாலியல் வழக்கிலிருந்து தப்பித்த ஜூமாவை, ஊழல் வழக்குகள் வளைத்தபோதும் பிரத்யேக பாணியில் அவற்றை எதிர்கொண்டார். தனது நிதிசார் முடிவுகளுக்கு வலதுகரமாக இருந்த ஷபிர் ஷேக் என்பவர் மீதே எல்லா வழக்குகளையும் எழுத வழிசெய்ததில், அந்த நபர் 15 ஆண்டுகால சிறைத் தண்டனைக்கு ஆளானார். (இந்த ஷேக், பின்னாளில் ஜூமா அதிபரானதும் மருத்துவக் காவல் என்ற பெயரில் விடுதலையானார்).

முதலடி வைத்த குப்தா

அதன் பின்னர் ஜூமா, தனது அரசியல் சதிராட்டத்தின் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார். 2007-ல் கட்சித் தலைவராகவும், அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் அதிபராகவும் வளர்ந்தார். அங்கு தொடங்கி 2018 வரையிலான அவரது ஆட்சிக் காலத்தில் தேசத்தின் எல்லா துறைகளிலும் ஊழலே கொழித்தது. ஊழல் பாதையில் தனக்கு உதவியவர்களை எல்லாம் உயர்த்தி அழகு பார்த்தார். அப்படி உயர்ந்தவர்களில் இந்தியாவின்  ‘குப்தா சகோதரர்கள்’ முக்கியமானவர்கள்.

மேற்கு உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் ஒரு வர்த்தகக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அதுல், அஜய், ராஜேஷ் குப்தாக்கள். சுதந்திர காற்றை சுவாசிக்கத் தயாரான தென்னாப்பிரிக்கா, அதுல் குப்தாவை ஈர்த்தது. புதிய அரசாங்கத்தின் நெகிழ்வான அணுகுமுறையால் எதில் கால் வைத்தாலும் பிழைத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டார் அதுல். தென்னாப்பிரிக்க நகரங்களில் ஓட்டைக் காரில் காலணிகளை அடுக்கி வீதி வீதியாக விற்றபடி, அடுத்தகட்டம் குறித்து அதுல் சிந்திக்கத் தொடங்கினார். தொண்ணூறுகளில் கொடிகட்டிப் பறந்த கம்ப்யூட்டர் சார்ந்த வாய்ப்புகளுக்குத் தென்னாப்பிரிக்காவில் போட்டி இல்லை என்றதும், தம்பிகளை வரவழைத்து ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார். அரசியல்வாதிகளை வரவழைத்து பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி அரசின் ஆர்டர்களை அள்ளினார்.

சூறையாடிய ‘ஜுப்தா’ சகாப்தம்

அந்த ஆர்டர்களுக்காக அரசு, அரசியல் இரண்டிலும் நந்திகளைத் தவிர்த்து முன்னேறிய குப்தா சகோதரர்கள், தங்களுக்கான மூலவர் ஜூமாதான் என்று அடையாளம் கண்டு அவரிடம் சரணடைந்தனர். எதையும் செய்யத் தயங்காத குப்தாக்களின் அணுகுமுறை ஜூமாவுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. இங்கிருந்தே,  ‘ஜு(மா)-(கு)ப்தா’ ஒருங்கிணைந்த  ‘ஜூப்தா’ சகாப்தம் தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது.

அமைச்சர்கள், அதிகாரிகளை வளைப்பதில் குப்தாக்களின் பாணி அலாதியானது. தங்களுக்குச் சரிப்படாதவர்களை ஜூமா ஆசியுடன் களையெடுப்பார்கள். முன்பேர ஒப்பந்தத்துக்கு உடன்படும் நபர்களே நாற்காலிகளை அலங்கரிப்பார்கள். ஜூமா துணை அதிபரானபோது அவரே வியக்கும்படி குப்தா சகோதரர்கள் புகுந்து விளையாடினார்கள். பாலியல் நாட்டம், சுகபோக வாழ்க்கை என ஜூமாவின் பலவீனங்கள் குப்தாக்களுக்கு வசதியாகின. அதைப் பயன்படுத்தி சகலத் துறைகளிலும் தங்கள் வர்த்தக எல்லைகளை வளர்த்துக்கொண்டனர்.

முதல் விஷ வித்து

ஜூமா அதிபரானபோது அரசின் கருவூலத்தை நேரடியாகக்கையாளும் அளவுக்கு குப்தாக்கள் வளர்ந்ததை, ஆளும் கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் ரசிக்கவில்லை. மேலும், இந்திய ரூபாய் மதிப்பில் 300 முதல் 400 கோடிகளில் தேசத்தின் பிரதான பதவிகள் கூறுபோடப்பட்டதாகக் குமுறல் எழுந்தது. குப்தாக்களின் வர்த்தக உறுதுணைக்காக ஏராளமான இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவுக்குக் குடியேறி இருந்தார்கள். அதிகார போதையில் அவர்களில் சிலர், வெள்ளையினத்தவருக்கு நிகரான நிறவெறியுடன் நடந்துகொண்டார்கள். இந்த விஷ வித்து, தென்னாப்பிரிக்க கறுப்பின மக்கள் மனதில் ஆழமாக விழுந்தது. குப்தாக்களின் அசுர வளர்ச்சியின் மீதான தென்னாப்பிரிக்கர்களின் பார்வை அதன் பின்னர் வேறானது.

ஜூமா கைதும் கலவரத் தீயும்

உட்கட்சித் தலைவர்களின் அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் காரணமாக திரண்ட நெருக்கடி நெட்டித் தள்ளியதில், 9 ஆண்டுகால அதிபர் பதவியை ஜூமா ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. அதே கட்சியைச் சேர்ந்த சிரில் ராமபோசா 2018-ல் அதிபரானார். ஆனால், கட்சி பாசத்தில் ஜூமாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு மென்போக்கு கொண்டிருப்பதாக மக்கள் கசப்படைந்தனர். மக்களின் மனப்போக்கை நாடிபிடித்த தலைமை சுதாரித்தது.

தன்னிடமிருந்த ஆவணங்கள் சிலவற்றை முறையாகச் சமர்ப்பிக்காத நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 15 மாத சிறை தண்டனைக்கு ஆளானார் ஜூமா. அவர் மீதான இதர உச்ச வழக்குகள் கிடப்புக்குப் போக இந்த வழக்கில், 2021 ஜூலை 7 அன்று ஜூமா சிறை சென்றார். உடனே அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். இன்னொரு வகையில் வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சீரழிவு, ஊழல் முறைகேடுகள், முத்தாய்ப்பாக பெருந்தொற்று நெருக்கடியை அரசு அலட்சியமாகக் கையாண்டது... எனக் குமுறிக்கொண்டிருந்த பொதுமக்களும் கலவரத்தில் குதித்தனர்.

குறிவைக்கப்பட்ட இந்தியர்கள்

பசியில் சுருண்டிருந்த மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகள், உணவுப் பொருள் சேமிப்பிடங்களைச் சூறையாடி னார்கள். இந்த நெரிசலில் சிக்கி பலர் இறந்ததும், கலவரக்காரர்களின் கோபம் குப்தா சகோதரர்களின் அட்டூழியங்கள் மீது மையம் கொண்டது. பின்னர், அங்கு வசிக்கும் இந்தியர்கள் மீது அந்தக் கோபம் திரும்பியது. தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் இந்தியர்கள் பங்கெடுத்த வரலாறு கலவரக்காரர்களால் பொருட்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, ஜூமா ராஜினாமா என்றதுமே குப்தா குழுமம் அடியோடு சுருட்டிக்கொண்டு அரபு நாடுகளுக்குப் பறந்துவிட்டது. அவர்கள் மீதான கோபத்தில் அப்பாவி இந்தியர்களைக் கலவரக்காரர்கள் காவு வாங்கினார்கள்.

டர்பன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் என இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் தாக்குதல்கள் அதிகரித்தன. கலவரத்தில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களில் இந்தியர்களே அதிகம். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரபூர்வமாக அழுத்தம் கொடுத்த பிறகே, தென்னாப்பிரிக்க ராணுவம் வீதிகளில் இறங்கி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. கலவரத் தீ தற்போதைக்கு மட்டுப்பட்டபோதும் உள்ளுக்குள் இன்னமும் கனன்றுகொண்டிருப்பதால், உயிரச்சத்தில் தென்னாப்பிரிக்க இந்தியர்கள் தத்தளித்துவருகிறார்கள்.

கழுவ முடியாத வரலாற்றுக் கறை 

ஜூமா சார்ந்த கட்சியே தேசத்தை ஆண்டு வருவது, அவருக்கு எதிரான ஊழல் வழக்குகளின் நமுத்த வரலாறு, அரபு மண்ணிலிருந்து ரிமோட் கன்ட்ரோலில் அதிகாரத்தை மீட்கத் துடிக்கும் குப்தா சகோதரர்கள், குறையாத பெருந்தொற்றுப் பரவல்... என தென்னாப்பிரிக்காவின் தற்போதைய சமிக்ஞைகள் எதுவும் ஆரோக்கியமாகத் தென்படவில்லை.

மகாத்மா காந்தியின் வழி நின்று நிறவெறியிலிருந்து விடுபட்டு, முன்மாதிரி ஆப்பிரிக்க தேசமாக வளர்ந்துவந்த தென்னாப்பிரிக்காவின் சரிவுக்கும் இந்தியர்கள் சிலரே காரணமாகியிருப்பது மட்டும் வரலாற்றின் கழுவ முடியாத கறையாக மாறியிருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in