ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி-  சாதித்ததா... சறுக்கியதா?

ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி-  சாதித்ததா... சறுக்கியதா?

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

முதன்முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு, நூறு நாட்களைக் கடந்துவிட்டது. கரோனா இரண்டாம் அலை, தடுமாறும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எனச் சிக்கல்களுக்கு மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. “ஸ்டாலினின் நூறு நாள் ஆட்சி வேதனை” என்று கொந்தளிக்கிறது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக. கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து நழுவுவதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. எல்லா வற்றையும் தாண்டி ஸ்டாலினின் நூறு நாள் ஆட்சிக்குக் கிடைத்திருக்கும் எதிர்வினை என்ன?

எடுத்த எடுப்பில் வேகம்

பொதுவாகவே புதிய அரசின் செயல்பாடுகளை அறிய அவகாசம் அளிப்பார்கள். முதல் ஆறு மாதங்களுக்குக் குறை சொல்ல
மாட்டார்கள். ஆனால், இந்த அனுகூலம் ஸ்டாலினுக்குக் கிடைக்கவில்லை. முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே, கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டியிருந்தது. பதவியேற்பு விழாவை முடித்த கையோடு ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்கும் பணிகளை முடுக்கிவிட வேண்டியிருந்தது.

கோவையில் திமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாததால், கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கோவை புறக்கணிக்கப்படுவதாக அதிமுகவும் பாஜகவும் திமுக அரசு மீது விமர்சனக் கணைகளை வீசின. உடனே கோவைக்கு இரு முறை விசிட் அடித்து விமர்சனத்துக்குப் பதிலளித்தார் ஸ்டாலின். கரோனா வார்டுக்குக் கவச உடை அணிந்து அவர் சென்றது இந்திய அளவில் ஹிட்டானது.

சொன்னதும் செய்ததும்

திமுக அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்பே தொலைநோக்கோடு 10 துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதில், மகளிர் உரிமைத் துறையும் தண்ணீருக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட நீர்வளத் துறையும் ஹைலைட்டாகின. திமுக தனது தேர்தல் அறிக்கையில் 503 வாக்குறுதிகளை அளித்திருந்தது. இதில், கரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், பால் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைவு, உங்கள் தொகுதியில் முதல்வர் துறைஉருவாக்கம், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டு ‘டேக் ஆஃப்’ ஆனார்.

ஸ்டெர்லைட் போராட்ட அவதூறு வழக்குகள் ரத்து, பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து, ப்ளஸ் 2 தேர்வு ரத்து, முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை, கரோனாவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு வைப்புத்தொகை எனக் கடந்த நூறு நாட்களில் பல அறிவிப்புகள் அணிவகுத்தன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியது போன்றவையும் மக்களின் பாராட்டைப் பெற தவறவில்லை. கோயில்களில் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்ட அமல், ஆக்கிரமிப்பில் இருந்த 626 கோடி ரூபாய் மதிப்பிலான 187 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு எனப் பட்டியல் நீள்கிறது. இந்நிலையில், திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அரசியல், பொருளாதார விமர்சகர்கள் என்ன நினைக்கிறார்கள்? பேசினோம்.

முன்மாதிரி நடவடிக்கைகள்

“கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டார். பொருளாதார நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைத்தார். இவை எல்லாம் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்யாதது” என்கிறார் பொருளாதார நிபுணரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஆனந்த் சீனிவாசன்.

மேலும், “தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னேற பல திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையோடு அறிவிக்கப்பட்டுள்ளன. திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் அளிப்பது போன்ற சமூக நலன் சார்ந்த அம்சங்கள் பாராட்டத்தக்கவை. தமிழகத்தின் வருவாய் குறைந்து, சுமை அதிகரித்துள்ள நிலையிலும் கரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரிகள் எதுவும் விதிக்காதது நல்ல விஷயம். குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாகச் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். தமிழகத்துக்குப் பொருளாதார ரீதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதை 4 ஆண்டுகளில் சரிசெய்துவிடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்கிறார் ஆனந்த் சீனிவாசன்.

ஏமாற்றத்தில் முடிந்த எதிர்பார்ப்புகள்

திமுகவின் அறிவிப்புகள் ஒவ்வொன்றையும் அதன் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கொண்டாடினார்கள். அதேவேளையில் தேர்தல் அறிக்கையில் சொல்லியதை நிறைவேற்றாமல் திமுக தப்பிக்கப் பார்க்கிறது என்ற அவச்சொல்லுக்கும் சில அம்சங்கள் காரணமாயின. அதில், நீட் தேர்வு ரத்து விவகாரம் முன்னிலை பிடித்தது. நீண்ட சட்டப் போராட்டத்தின் மூலமே நீட் தேர்வை விலக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியும் என்ற நிலையில், தேர்தலில் திமுகவினர் செய்த அதீதப் பிரச்சாரம் இந்த விஷயத்தில் விமர்சனம் ஏற்பட வழிவகுத்தது எனலாம்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவந்த வேளையில்தான் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிக்கையில் விலைக் குறைப்பு வாக்குறுதியைத் திமுக அளித்தது. ஆனால், “விலை குறைப்புக்கு இப்போது வாய்ப்பில்லை” என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அடித்த பல்டி, பல தரப்பினரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. ஆனால், பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு 3 ரூபாய் விலை குறைப்பு செய்து, அந்த ஏமாற்றத்தைச் சற்று போக்கியிருக்கிறது திமுக அரசு. டீசலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்படாதது இன்னும் ஏமாற்றமாகவே தொடர்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100  ரூபாய் மானியம் அளிக்கும் விஷயத்தில் மாநில அரசின் கையில் அதிகாரம் இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்திருப்பதும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் அளித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் தடுமாற்றம் தெரிகிறது.

ஏற்கெனவே கரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பால் தமிழகம் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை இருப்பது திமுக அரசுக்குப்பெரும் சவால்தான். திமுக அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இந்தக் கடன் சுமை இடையூறாக இருக்கக்கூடும். அதையொட்டியே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையும் இருந்தது. ஆனாலும் “அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதிலிருந்து பின்வாங்க மாட்டோம்” என்று ஸ்டாலின் உறுதியளித் திருக்கிறார். எனினும் விமர்சனங்கள் தொடர்கின்றன.

பெரிய குறைகள் இல்லை

“தமிழகத்தின் பொருளாதார பாதிப்பு என்பது தேர்தலுக்கு முன்பே தெரிந்ததுதான். அது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் அல்ல. தேர்தல் வாக்குறுதிகளை அளித்தபோதே இதெல்லாம் திமுகவுக்கும் தெரிந்திருக்கும். பால் விலைக் குறைப்பு, மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரணம் எனத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் வரவேற்கத்தக்க அம்சங்கள். முக்கியமாக நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்குவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நூறு நாள் ஆட்சி ‘பாசிட்டிவ்’ என்றே சொல்லலாம். சொல்வதற்குப் பெரிய குறைகள் எதுவும் இல்லை” என்கிறார் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன்.

ஒரு புதிய ஆட்சியின் நூறு நாள் என்பது ஓர் மைல்கல் பயணம். பொதுவாக முதல் நூறை எந்த அரசுமே பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசிக் கடந்துவிடும். தொடர்ந்து சீரிய முறையில் செயலாற்றினால்தான் சிறந்த ஆட்சியாக மக்களால் கொண்டாடப்படும். திமுகவிடம் அந்த உறுதிப்பாடு இருக்கிறதா என்பது அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in