மெல்லச் சரியும் மோடியின் செல்வாக்கு!- என்ன நடக்கிறது பாஜகவில்?

மெல்லச் சரியும் மோடியின் செல்வாக்கு!- என்ன நடக்கிறது பாஜகவில்?

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

செல்வாக்கு மிக்க பிரதமர் என்று போற்றிப் புகழப்பட்ட நரேந்திர மோடி, இன்றைக்குத் தனது வசீகரத்தை இழக்கத் தொடங்கியிருப்பதாகப் பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களவைத் தேர்தல்கள் மட்டுமல்லாமல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக முன்வைத்து வந்தது மோடியின் முகத்தைதான். ஆனாலும், சமீபகாலமாகவே மோடியின் முகத்தில் உற்சாகமும், பெருமித உணர்வும் குறைந்திருப்பதையும், கவலைக்கோடுகள் படரத் தொடங்கியிருப்பதையும் பார்க்க முடிகிறது. ஒருபக்கம், பாஜக வளர்கிறது என்று அக்கட்சித் தலைவர்கள் பெருமிதப்படும் சூழலில், அதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்ட மோடியின் செல்வாக்கு சரிவதாகத் தெரிவது ஏன்?

வளரும் பாஜக

இந்திய ஜனநாயகத்தில் கட்சிக்கும் ஆட்சிக்குமான கோடு மெலிந்துகொண்டே போய், இன்று கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது. “மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் ‘இரட்டை இன்ஜின்’ பலம் கிடைக்கும்” எனச் சொல்லியே, மாநில சட்டபபேரவைத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்கிறது பாஜக. அங்கெல்லாம் போதிய தொகுதிகளில் வெற்றிபெறாவிட்டாலும்கூட, பல வியூகங்கள் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பாஜகவின் ‘செல்வாக்கு' வளர்ந்திருக்கிறது. தென் மாநிலங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் பாஜகவுக்கு ஆதரவாளர்கள் பெருகியிருப்பதையும், கட்சியின் கிளை அமைப்புகள் தோன்றியிருப்பதையும் பார்க்க முடிகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும் இப்படித்தான் கட்சியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. எனினும், மோடியின் காலத்தில் அது வேகம் பெற்றிருக்கிறது என்றே சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

“பாஜகவின் வளர்ச்சி அதன் செயல்பாட்டாலோ, கவர்ச்சியான பிரச்சாரத்தாலோ நிகழ்ந்ததாக நான் கருதவில்லை. இயல்பாகவே மத்தியதர வர்க்கம், இடைநிலைச் சாதிகள் இடையே சாதிய உணர்வும், மத உணர்வும் அதிகரித்திருக்கின்றன. இஸ்லாமியர்கள், பட்டியலினச் சமூகத்தினர் போன்றோருக்கு எதிரான தங்கள் மனநிலைக்குத் தீனி போடும் கட்சியாக அவர்கள் பாஜகவைத்தான் பார்க்கிறார்கள். பாஜக அரசின் செயல்பாட்டில் அவர்களுக்குப் பெரிய மரியாதை இல்லாவிட்டாலும்கூட கட்சியின் இந்தச் சித்தாந்தம் அவர்களை ஈர்த்திருப்பதைக் கள நிலவரங்கள் காட்டுகின்றன” என்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் பார்வையாளருமான சிகாமணி.

வாக்கு வங்கி அரசியல்

“இந்தியாவைப் பொறுத்தவரையில் எல்லா பெரிய கட்சிகளுமே ஒரு முக்கிய வாக்கு வங்கியை வைத்திருக்கின்றன. மக்களை சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் கூறுபோட்டு அதில் ஒரு பெரிய துண்டை தங்களின் நிரந்தர வாக்கு வங்கியாக மாற்றி வைத்திருப்பார்கள். இவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கிறபோது அந்த வாக்கு வங்கிக்கு மேலும் மேலும் தீனி போடுவார்கள். அது முழுமையான மக்களுக்கான ஆட்சியாக இருக்காது.

உதாரணமாக, பாஜகவை எடுத்துக்கொள்வோம். கட்சியின் வாக்கு வங்கி 20 சதவீதம் என்றால், மோடி அலை காரணமாகக் கட்சி சாராத மக்கள் அளித்த கூடுதல் வாக்குகள் 17 சதவீதம் வரையில் பாஜகவுக்குக் கிடைத்தன. இப்படியாகத்தான் 2014-ல் அவர் பிரதமரானார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் நலனைப் பற்றிக் கவலையேபடாமல், இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையிலான சட்டங்களை நிறைவேற்றுவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது போன்ற நடவடிக்கைகளிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறது பாஜக. கரோனா காலத்தில்கூட மக்களைக் காப்பாற்றுவதைவிட ஆங்கில மருத்துவத்துக்குப் பதிலாக ஆயுஸை முன்னிலைப்படுத்துவதிலேயே முனைப்பு காட்டியது மத்திய அரசு. விளைவாக இந்துத்துவர்கள் குஷியடைந்தார்கள். வடமாநிலங்களில் இன்னும் அதிகமானோர் பாஜக அபிமானியாகியிருக்கிறார்கள்” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலாளர்களில் ஒருவரும், ஆந்திர மாநிலப் பொறுப்பாளருமான கிறிஸ்டோபர் திலக்.

“மக்களவைத் தேர்தலுக்காக ஆர்எஸ்எஸ், பாஜக, தேர்தல் வியூக வகுப்பாளர்கள் எல்லாம் சேர்ந்து ஊதிப் பெரிதாக்கிய பிம்பம்தான் மோடி. சினிமா கதாநாயகனைப் போல, ஒரு அவதாரத்தைப் போல அவரைச் சித்தரித்தார்கள். ஆனால், அனைவருக்குமான வளர்ச்சி என்ற மோடி, குறிப்பிட்ட சில பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்கே உழைத்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை, முன்யோசனை இல்லாத பொதுமுடக்கம், கரோனா தடுப்பில் மெத்தனம் என்று அடுத்தடுத்து சறுக்கினார். வாக்களித்த மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டதை இப்போது உணர்கிறார்கள். ஆனாலும்கூட சொல்கிறேன், மோடியின் செல்வாக்கு தான் சரிந்திருக்கிறதே தவிர, பாஜக பலவீனமாகிவிடவில்லை” என்கிறார் கிறிஸ்டோபர்.

கற்பனையின் உச்சம்

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, இந்தக் கூற்றுகளை முற்றிலுமாக மறுக்கிறார். “பாஜக வளர்கிறது, மோடியின் செல்வாக்கு சரிகிறது என்ற கூற்றே வேடிக்கையாக இருக்கிறது. ஆட்சி சிறப்பாக இருப்பதால்தானே கட்சியும் வளர்கிறது? மக்கள் ஆதரவு இல்லாமல் கட்சி வளர முடியாது. எனவே, மோடியின் செல்வாக்கு சரிவதாகச் சொல்வதை உள்நோக்கமுள்ள விமர்சனமாகவே பார்க்கிறேன்.

மோடி சொன்னதைச் செய்யவில்லை என்பதும் தவறான குற்றச்சாட்டு. இதுவரையில் காங்கிரஸ் செய்யத் துணியாத பல அதிரடியான நடவடிக்கைகளை மோடி எடுத்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்று சொன்னதை 100 சதவீதம் பாஜக செய்து முடித்திருக்கிறது. நம்மூரில் ஊதிப் பெரிதாக்கப்பட்டிருந்த ரியல் எஸ்டேட் மதிப்புகள் குறைந்திருப்பதே இதற்கு உதாரணம். உலகம் முழுவதிலும் பொருளாதார மந்தநிலை நிலவுகிறபோது, மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா பொருளாதார ரீதியாகப் பலமாக இருக்கிறது என்றால், அதற்கு மோடியின் ஆட்சியே காரணம். ஆகஸ்ட் மாதத்துக்குள் 50 கோடி தடுப்பூசிகளை இந்தியா தயாரித்திருப்பது வரலாற்றுச் சாதனை. கரோனா தொற்றுக்காலத்திலும்கூட பொருளாதாரத்தை இந்த அரசு சீர்படுத்தியிருக்கிறது. டெல்லியில் ராகுல் காந்தியும், எதிர்க்கட்சிகளும் டிராக்டரும், சைக்கிளும் ஓட்டிவிட்டார்கள் என்பதற்காக மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாகச் சொல்வது கற்பனையின் உச்சம்" என்கிறார் நாராயணன்.

‘தேசம் அழிவைச் சந்திக்கிறது’

ஆனால், மார்க்சிஸ்ட் எம்பி-யான சு.வெங்கடேசன் இதை வேறொரு கோணத்தில் பார்க்கிறார். “2021 மே 13 அன்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழ் ஒரு செய்தியை வெளியிட்டது. ‘கோவிட் 19 பேரழிவு ஒன்றே போதும், நரேந்திர மோடியின் பிம்பத்தைத் தகர்த்தெறிய’ என்று அந்த செய்திக் கட்டுரை விரிவாக விளக்குகிறது. மிக அதிகபட்சமாக நாளொன்றுக்கு 4 லட்சம் பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது; தடுப்பூசிகள் பற்றாக்குறை தேசத்தையே துரத்தியது; மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன; ஆக்ஸிஜன் இல்லாமல் நாடே மூச்சுத்திணறியது; சுடுகாடுகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் எரிந்துகொண்டே இருந்தன; இந்தியாவில் மிகப் பெரிய நகரங்களின் வான்வெளி மனித உடல்களின் சோக நினைவுகளைச் சுமந்தவாறு கரும்புகை மண்டலமாய் காட்சியளித்தது.

கரோனா தொற்றால் உயிரிழந்த மனித உடல்களால் புனித கங்கை நதியை நிறைத்தது மோடியின் ஆசி பெற்ற உத்தர பிரதேச அரசு. குஜராத் மாடல் என்று மார்தட்டிய மோடியின் சொந்த மாநிலத்தில் எரிப்பதற்கு இடமில்லாமல் சடலங்கள் வீதிகளில் கிடத்தப்பட்டிருந்தன. இப்போதும்கூட நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி என்ற திட்டத்தை அறிவிக்க மறுத்து வருகிறது மத்திய அரசு. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவற்றால் அழித்தொழிக்கப்பட்டிருந்த இந்தியாவின் சிறு-குறு நடுத்தரத் தொழில்கள், திட்டமிடப்படாத ஊரடங்குகளாலும் கொடூரமான பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளாலும் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. மோடியின் கூட்டாளிகளான பெரும் கார்ப்பரேட்டுகள் மட்டுமே இதில் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த தேசமும்அழிவின் பிடியில் சிக்கியிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக பெகாசஸ் வேவு மென்பொருள் விவகாரமும் நாட்டைத் துரத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பெகாசஸ் வேவு மென்பொருள் மூலமாக மோடி அரசு எட்டிப்பார்க்கிறது; கண்காணிக்கிறது. அரசுக்கு எதிராகச் சிந்தித்தால்கூட உபா உள்ளிட்ட கொடிய ஆள்தூக்கிச் சட்டங்களால் விலங்குபூட்டி சிறையில் அடைக்கிறது. இதுபற்றி நாடாளுமன்றமே கொந்தளிக்கிறபோதும் உண்மையைப் பேசவோ விசாரணை நடத்தவோ அரசு மறுக்கிறது.

ஒவ்வொரு சாமானியரும் இதையெல்லாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏழு ஆண்டுகள் கழித்து ஒட்டுமொத்த நாடும் மீண்டும் அசைபோடத் தொடங்கியிருக்கிறது. தேர்தல்களில் மோடியின் உருவப்படத்தைப் போடுவதற்கு அவரது கட்சியினரே தயங்குகிறார்கள். மோடியின் பிம்பம் தகர்ந்து தொங்குகிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?" என்கிறார் சு.வெங்கடேசன்.

2014 மக்களவைத் தேர்தலில் மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 17.15 கோடி. அதுவே 2019 தேர்தலில் 22.90 கோடியாக உயர்ந்தது. 2024-ல் மீண்டும் மக்களவைத் தேர்தல் வருகிறது. மூன்றாவது முறையும் மோடியே பிரதமர் வேட்பாளராக முன்மொழியப் போகிறதா பாஜக அல்லது அத்வானி வழியில் மோடியை ஓரங்கட்டப்போகிறார்களா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை, மோடிதான் மீண்டும் பிரதமர் வேட்பாளர் என்றால். அப்போது தெரிந்துவிடும் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதா, வளர்ந்துள்ளதா என்று!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in