பஞ்சாப் பரீட்சை: காங்கிரஸுக்கு வெற்றியா, தோல்வியா?

பஞ்சாப் பரீட்சை: காங்கிரஸுக்கு வெற்றியா, தோல்வியா?

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

பஞ்சாப் காங்கிரஸில், முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் நடந்துவந்த யுத்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. அமரீந்தர் சிங்கின் ஆட்சேபங்கள் புறக்கணிக்கப்பட்டு, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டுவிட்டார். எனினும், விவகாரம் இத்துடன் நின்றுவிடாது என்பதையே அடுத்தடுத்த நகர்வுகள் காட்டுகின்றன.

மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் சித்துவுக்கு, இதுவரை அமரீந்தர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அவர் மீதான பகிரங்க விமர்சனங்களுக்கு சித்துவும் மன்னிப்புக் கோரவில்லை. அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இவை அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிடிவாதக்காரர்

காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவர் என்றாலும் அரசியல் பயணத்தை பாஜகவிலிருந்துதான் தொடங்கினார் சித்து. 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த அவருக்கு அமிர்தசரஸ் தொகுதியை ஒதுக்க பாஜக முன்வராததாலும், சிரோமணி அகாலி தளம் கட்சியுடனான உறவைத் துண்டித்துக்கொள்ள முன்வராததாலும் 2016-ல் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். ஆம் ஆத்மி கட்சியில் அவர் சேரக்கூடும் என்று பேசப்பட்ட நிலையில், பிரசாந்த் கிஷோரின் யோசனையை ஏற்று காங்கிரஸில் இணைந்தார்.

2017 அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்ற சித்து, துணை முதல்வர் பதவிக்காகக் காத்திருந்தார். கிடைக்கவில்லை. அவருக்கு ஒதுக்கப்பட்ட சுற்றுலாத் துறையும், உள்ளாட்சித் துறையும் அவருக்கு உவப்பளிக்கவில்லை. இதையடுத்து முதல்வர் அமரீந்தருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். தேர்தல் வாக்குறுதிகளை அமரீந்தர் நிறைவேற்றவில்லை என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் வைத்தார் சித்து. தொடர்ந்து ட்விட்டரில் அமரீந்தர் அரசை விமர்சித்தார். மோதல் வலுத்ததும், இரு தரப்பும் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைமையைச் சந்தித்து முறையிட்டு வந்தனர். 

மாநிலத் தலைவர் பொறுப்புக்கு சித்து அடிபோடுவதை அமரீந்தர் கடுமையாக எதிர்த்துவந்தார். எனினும் தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டுவிட்டார் சித்து. பிடிவாதக்காரரான அவர் அமரீந்தரின் வேண்டுகோள்களையும், நிபந்தனைகளையும் பல தருணங்களில் புறந்தள்ளியிருக்கிறார். இவை அனைத்துமே அமரீந்தரைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கின்றன.

மன்னிப்பு அரசியல்

இதற்கிடையே அமரீந்தரைச் சமாதானப்படுத்த, பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்டார். டெல்லி தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்பதாக, அமரீந்தர் ஏற்கெனவே குறிப்பிட்டதைச் செய்தியாளர்களிடம் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், அமரீந்தர் இன்றுவரை தகித்துக்கொண்டுதான் இருக்கிறார். தனக்கு எதிராக 150-க்கும் மேற்பட்ட ட்வீட்டுகளை சித்து எழுதியதை ஹரீஷ் ராவத்திடமே அவர் சுட்டிக்காட்டியிருந்தார். சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இன்றுவரை பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், அதற்கான அறிகுறியே சித்துவிடம் இல்லை. சித்து காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்க்கும் ஆளுமைதான் என்றாலும், அமரீந்தரின் அரசைப் பொதுவெளியில் விமர்சித்து பலவீனப்படுத்தியது மன்னிக்க முடியாதது என்று அவரது ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இதுபோதாதென்று, சித்துவை மன்னித்துவிடச் சொல்லி சில மூத்த தலைவர்களே அமரீந்தரை வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

பலனளிக்காத முயற்சிகள்

சித்துவும் அமரீந்தரும் ஜாட் சீக்கியர்கள்; இருவரும் பாட்டியாலாவைச் சேர்ந்தவர்கள். இந்தச் சூழலில் சித்துவுக்கு மாநிலத் தலைவர் பதவி தருவது பிற சமூகத்தினரை அதிருப்தியடைய வைக்கும் என்று தொடர்ந்து அமரீந்தர் வலியுறுத்திவந்தார். இதுவரை தலைவர் பதவிவகித்த சுனில் ஜாகர் ஓர் இந்து. அவரது இடத்தில் இன்னொரு இந்துதான் வர வேண்டும் என்று அமரீந்தர் கருதினார். இந்து மதத்தைச் சேர்ந்த மணீஷ் திவாரிக்குத் தலைவர் பொறுப்பு கிடைக்குமா என்றுகூட ஹேஷ்யங்கள் எழுந்தன. ஆனால், காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதிய அதிருப்தித் தலைகளான ‘ஜி23’ தலைவர்களில் மணீஷும் ஒருவர் என்பதால், அந்த யோசனையைக் கட்சித் தலைமை கண்டுகொள்ளவே இல்லை.

அதேவேளையில், பிற சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்டியலினத்தைச் சேர்ந்த சுக்வீந்தர் சிங் டைனி உள்ளிட்ட நான்கு பேரைச் செயல் தலைவர்களாக்கியிருக்கிறது காங்கிரஸ். எனினும், செயல் தலைவர்களின் பதவிக்காக அமரீந்தர் பரிந்துரைத்த பெயர்களைக் காங்கிரஸ் தலைமை மறுதலித்துவிட்டது. சொல்லப்போனால், சித்துவின் வியூக வலையை அறுத்தெறிய அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் கட்சித் தலைமையால் முறியடிக்கப்பட்டுவிட்டன. வெள்ளிக்கிழமை (ஜூலை 16) அன்று டெல்லியில் சோனியா காந்தியை சித்து சந்திப்பதற்கு முன்னதாக, அமரீந்தர் அனுப்பிய கடிதம் சோனியாவின் கைக்குக் கிடைத்தது. அதில், சித்துவுக்குத் தலைமைப் பொறுப்பு வழங்கப்படுவதற்கு எதிரான தனது வாதத்தை வலுவாகப் பதிவுசெய்திருந்தார் அமரீந்தர். கட்சியில் பிளவு ஏற்படும் என்றும்கூட எச்சரித்திருந்தார். அதையும் மீறி சித்துவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

ஓரங்கட்டப்படுகிறாரா அமரீந்தர்?

சோனியா காந்தியின் நன்மதிப்பைப் பெற்ற மூத்த தலைவரான அமரீந்தர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் அபிமானத்தைப் பெற்றவர் அல்ல. 2017 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு, அமரீந்தரின் தனிப்பட்ட செல்வாக்குதான் முக்கியப் பங்கு வகித்தது. இன்றுவரை அவருக்கான செல்வாக்கு கணிசமாக இருப்பதால், அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு அவரது சகாயம் தேவைப்படும். அதற்கு சித்துவும் அவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும் என்பதுதான், தற்சமயம் பஞ்சாப் அரசியலில் நிலவும் சூழல்.

ஆனாலும், 80 வயதை நெருங்கும் அமரீந்தரை அடுத்த தேர்தலிலும் முதல்வர் முகமாக முன்னிறுத்த காங்கிரஸ் தலைமை தயங்குவதாகச் சொல்லப்படுகிறது. அவருக்குப் பதிலாக இளமையான, வசீகரமான தலைவரான சித்துவை முதல்வர் வேட்பாளராகக் களமிறக்க திட்டமிடுகிறது காங்கிரஸ். 2017 தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதுதான் அமரீந்தர் மீதான முக்கிய விமர்சனம். சித்துவை முதல்வர் வேட்பாளராக முன்வைப்பதால், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனும் தோற்றத்தையும் வாக்காளர்கள் மத்தியில் உருவாக்க முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம், பஞ்சாபில் காங்கிரஸுக்குச் சாதகமான சூழலைத் தக்கவைத்திருக்கிறது. இப்படியான சூழலில் இது விஷப்பரீட்சையாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

நடப்புகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள முயல்கின்றன. “இனி காமெடி சர்க்கஸ்தான் காங்கிரஸுக்குள் நடக்கும்” என்று மாநில பாஜக விமர்சித்திருக்கிறது. காங்கிரஸில் நடக்கும் நாற்காலிச் சண்டையில் மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறது என்று விமர்சித்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி, 2022 தேர்தலில் காங்கிரஸுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று சூளுரைத்திருக்கிறது.

பஞ்சாப் காங்கிரஸில் கரையைக் கடந்திருக்கும் அரசியல் புயல், ராஜஸ்தான் காங்கிரஸிலும் சலனத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்குத் தாவ முயற்சித்து பின்னர் முடிவை மாற்றிக்கொண்ட சச்சின் பைலட் முகாம், தற்போது சித்து பாணியைக் கைக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்து - அமரீந்தர் மோதல் விவகாரத்தில் இறுதி முடிவை எட்ட காங்கிரஸ் தலைமை நீண்ட காலம் எடுத்துக் கொண்டிருப்பது அதன் தடுமாற்றத்தைக் காட்டுகிறது என்றும், இந்த முடிவை முன்னதாகவே எடுத்திருந்தால் விவகாரம் இந்த அளவுக்கு முற்றிவிட்டிருக்காது என்றும் அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்கள். மொத்தத்தில் பஞ்சாப் கலகம் பலனளிக்குமா, பலவீனமடையச் செய்யுமா என்பதுதான் காங்கிரஸ் முன் தொக்கி நிற்கும் முக்கியக் கேள்வி.

டெய்ல் பீஸ்: இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் நடந்த தேநீர் விருந்தில் அமரீந்தர் சிங்கை சந்தித்திருக்கிறார் சித்து. முன்னதாக இந்த விருந்துக்கு சித்துவுக்கு அமரீந்தர் அழைப்பு விடுக்காதது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தச் சூழலில் சித்துவே நேரடியாக வந்து முதல்வரைச் சந்தித்திருக்கிறார். இது இருவருக்கும் இடையிலான கசப்பைத் தணிக்குமா என்பது போகப் போகத் தெரியும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in