பெகாசஸ் ஸ்பைவேர்: வேவு பார்க்கும் நவீன பூதம்

பெகாசஸ் ஸ்பைவேர்: வேவு பார்க்கும் நவீன பூதம்

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

இந்தியாவைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது பெகாசஸ் பூதம். செல்போன் மூலம் வேவுபார்க்கும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்க்கப்பட்டவர்கள் எனச் சொல்லப்படும் பட்டியலில் ராகுல் காந்தி முதல் தலாய் லாமாவின் ஆலோசகர்கள் வரை, பத்திரிகையாளர்கள் முதல் செயற்பாட்டாளர்கள் வரை, நீதிபதிகள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை என பலரது பெயர்கள் அடிபடுகின்றன. தொடர்ந்து நான்கு நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கிப்போட்ட இவ்விவகாரம் தொடர்பாக, ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் அதிரவைக்கின்றன. மோடியின் துணையுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செல்போனை வேவுபார்க்க நவாஸ் ஷெரீப் திட்டமிட்டதாகக்கூட ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

பெகாசஸின் பின்னணி

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்பான, பெகாசஸ் எனும் ஸ்பைவேர் மென்பொருள்தான் பிரச்சினையின் அடிநாதம். வழக்கமாக அரசு மேற்கொள்ளும் ரகசியக் கண்காணிப்பையும் கடந்து, மிக மிக மோசமான அளவுக்கு உளவு பார்க்கும் மென்பொருள் இது. யார் வேண்டுமானாலும் ஒரு மிஸ்டுகால், குறுஞ்செய்தி, வாட்ஸ்-அப் அழைப்பு என ஏதாவது ஒருவகையில் நம் செல்போனைத் தொடர்புகொண்டு நம் செல்போனில் இந்த ஸ்பைவேரை நிறுவிவிட முடியும்.

வேவு பார்க்கப்படுபவரின் செல்போனில் இருக்கும் ஒளிப்படங்கள், காணொலிகள், தொடர்பு எண்கள், அழைப்பு விவரங்கள், குறுஞ்செய்திகள், செல்லுமிடங்கள், மின்னஞ்சல்கள் உள்ளிட்ட அத்தனைத் தகவல்களையும் பெற முடியும். செல்போன் கேமராவை முடுக்கி காணொலி எடுக்க முடியும். வாட்ஸ்-அப் அழைப்புகளையும் பதிவுசெய்ய முடியும். எல்லா கணக்குகளின் கடவுச்சொற்களையும் தெரிந்துகொள்ள முடியும் - வங்கிக் கணக்கு உட்பட!

இப்படி ஒரு ஸ்பைவேர் தன் செல்போனில் இருப்பதையே நம்மால் கண்டறிய முடியாது. தேவைப்பட்டால் தன்னைத்தானே அகற்றிக்கொள்ளும் ஸ்பைவேர் இது. ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமல்லாமல், அதிகமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஆப்பிள் போன்களிலும் இது தன் ‘வேலை’யைக் காட்டும். அரசுகளுக்கு மட்டும்தான் இந்த ஸ்பைவேர் விற்கப்படுகிறது என்பதுடன், இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் அனுமதியுடன்தான் விற்க முடியும் என்பது மிக முக்கியமான விஷயம்.

பற்றவைத்த நெருப்பு

என்எஸ்ஓ தொடர்பான செய்திகள் 2016-லேயே கவனம் ஈர்த்தன. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளர், மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளர் என இருவரின் செல்போன்களை அந்நிறுவனத்தின் ஸ்பைவேர் வேவு பார்த்ததாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டது. பெகாசஸ் மூலம் 20 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரின் வாட்ஸ்-அப் சம்பாஷணைகள் வேவுபார்க்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக என்எஸ்ஓ நிறுவனத்தின் மீது வாட்ஸ்-அப் சார்பில் அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை, அதே ஆண்டில் செயற்பாட்டாளர்கள், கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் உட்பட பலர் இந்த ஸ்பைவேர் வளையத்தில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை உறுதியளித்தது. எனினும், அப்போது இதுதொடர்பாகப் பெரிய அளவில் எந்த அதிர்வுகளும் எழவில்லை. பலரது நினைவிலிருந்தும் அது மறந்துபோனது.

இந்நிலையில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஃபார்பிடன் ஸ்டோரீஸ் ஆகிய அமைப்புகளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த16 ஊடகங்களும் சேர்ந்து சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா, பஹ்ரைன், மெக்சிகோ, மொராக்கோ, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரின் செல்போன்கள் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாகத் தெரியவந்தது.

இதுவரை இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 1,000 பேரின் செல்போன் எண்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இவற்றில் 300 செல்போன்கள் குறித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 10 எண்களில் பெகாசஸ் ஸ்பைவேர் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் ஒருவர் என்பதும், 10 பேரில் பயங்கரவாதிகள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

இந்த ஸ்பைவேரை தங்களிடமிருந்து வாங்கும் அரசுகள் குறித்தோ, இதன் விலை குறித்தோ எந்தத் தகவலையும் வெளியிட என்எஸ்ஓ நிறுவனம் முன்வரவில்லை. பயங்கரவாதிகள், சமூக விரோதிகளைக் கண்காணிக்க அரசுகளுக்கு விற்பதாக மட்டும் அந்நிறுவனம் சொல்கிறது. ஆனால், பெகாசஸின் பயன்பாடுகள் பயங்கர விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பதை சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பான தகவல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. 2018-ல் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கஷோகி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே அவரது செல்போனிலும் அவரது மனைவியின் செல்போனிலும் பெகாசஸ் ஸ்பைவேரை நுழைத்து வேவு பார்க்கப்பட்டதாக இப்போது செய்திகள் வெளியாகின்றன.

இந்தியாவில் எதிர்வினைகள்

இந்தியாவில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில் பெகாசஸ் தொடர்பான தகவல் வெளியானது அரசியல் ரீதியான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தேசத்துரோகம் என்றும், தேசப் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இது ஊடகச் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால், இவ்விவகாரம் ஒரு கட்டுக்கதை என்கிற ரீதியில்தான் மத்திய அரசும் பாஜகவினரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். கரோனா பரவலை இந்தியா சிறப்பாகக் கையாண்ட விதத்துக்குப் பழிவாங்கும் வகையில் இப்படியான தகவல் பரப்பப்படுவதாக மத்திய தகவல் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார். எனினும், இது இந்தியாவைக் களங்கப்படுத்தும் முயற்சி என மத்திய அரசும், பாஜகவினரும் சொல்லிவருவதில் வலுவான தர்க்கம் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்தியா மட்டுமல்லாமல், ஏறத்தாழ 50 நாடுகளில் பெகாசஸ் ‘பயன்பாடு’ குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

விசாரணைகள்

அதேவேளையில், வெளியாகியிருக்கும் எண்களின் பட்டியல் தனது தரவுத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டதல்ல என்று கூறியிருக்கும் என்எஸ்ஓ நிறுவனம், கஷோகி படுகொலையில் தங்கள் தொழில்நுட்பத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்திருக்கிறது. இவ்விவகாரத்தில் இஸ்ரேலின் பெயர் அடிபடுவதால், அந்நாட்டு அரசு இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்டோரின் செல்போன்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் வேவுபார்க்கப்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதுதொடர்பான விசாரணைக்கு மெக்ரோன் உத்தரவிட்டிருக்கிறார். என்எஸ்ஓ நிறுவனமும் தன் பங்குக்கு விசாரணை நடத்திவருகிறது. தங்கள் தயாரிப்பைத் தவறாகப் பயன்படுத்தும் நாடுகளுடனான ஒப்பந்தத்தை ரத்துசெய்யப்போவதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற நிலைக் குழு சார்பில் உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஆனால், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், ஊடக அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அரசோ இவ்விவகாரத்தில் தங்கள் தரப்பில் தவறேதும் இல்லை என்று வாதிட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே நாடாளுமன்றம் முடக்கம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரின் அறிக்கை கிழிப்பு என விரும்பத்தகாத விளைவுகளை தேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது. உண்மை வெளிவரும் வரை விவகாரம் மோசமடையும் என்றே தெரிகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in