ஒன்றியம் என்று சொல்வது பிரிவினைவாதமா?

ஒன்றியம் என்று சொல்வது பிரிவினைவாதமா?

கே. இராஜகுமார்
rajakumar_y2kin@yahoo.co.in

‘ஒன்றியம்’ எனும் வார்த்தை இன்றைக்குத் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் முன்வைக்கும் வாதங்களைக் கடந்து, வரலாற்று ரீதியான தரவுகளையும் தகவல்களையும் அலசுவதன் மூலம் தீர்க்கமான முடிவை எட்டும் திசையை நோக்கி நாம் அடியெடுத்து வைக்கலாம்.

அரசும் அரசாங்கமும்

இந்தியக் குடிமக்களாகிய நாம் இந்தியாவை ஓர் இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு என நிர்ணயித்திருக்கிறோம் என்றது அரசியல் சாசனத்தின் முகப்புரை. பின்னாளில் அது இறையாண்மையுள்ள, சோசலிச, மதசார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்பதாகத் திருத்தப்பட்டது. இந்தியா, அதாவது பாரதம், அரசுகளின் ஒன்றியமாக (Union of States) இருக்கும் என்கிறது அரசியல் சாசனத்தின் முதல் பகுதி.

இந்திய ஒன்றியம் (Union of India) என்கிற சொல்லாடல் அரசியல் சாசனத்தில் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் கட்டமைப்பைச் சொல்கிறது. ஸ்டேட் (State) என்கிற ஆங்கிலச் சொல், சட்டரீதியான ஓர் அரசைக் குறிக்கிறது. அரசு என்பது ஒரு கருதுகோள். அதைப் பார்க்க முடியாது. அது தானாகவே மக்களை ஆட்சி செய்யாது. ஆதலால், வெளிப்படையான தோற்றமும் இருப்பும் கொண்ட ஓர் அங்கத்தை ஏற்படுத்தி ஆட்சி புரிகிறது அரசு. அதன் பெயர் அரசாங்கம் (Government). அரசு என்பது உயிர் என்றால், அரசாங்கம் அதன் உடல்.

இந்திய அரசியல் சாசனத்தின் 12-ம் பிரிவானது, ஸ்டேட் என்பது இந்தியாவின் அரசாங்கத்தையும் நாடாளுமன்றத்தையும், அரசுகளின் அரசாங்கங்களையும் சட்டப்பேரவைகளையும் குறிக்கும் என்கிறது. ஸ்டேட் என்கிற பதம் தமிழில் மாநிலம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியில் அது ராஜ்ஜியம் என்று அழைக்கப்படுகிறது. ராஜ்ஜியத்துக்கு என்ன பொருள் என்பது எல்லோரும் அறிந்ததே. அறிஞர் அண்ணா அதன் அடிப்படையில்தான் சென்னை மாநிலத்துக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார். அது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதுதான்.

ஆரம்பகால விருப்பங்கள்

சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம். ஒற்றையாட்சி முறையாக விளங்கிய ஆங்கிலேய ஆட்சியில் மாகாணங்களுக்குச் சுயாட்சி வழங்கப்பட்டிருக்கவில்லை. மன்னர்களின் கீழிருந்த சமஸ்தானங்களுக்கும் இறையாண்மையற்ற குறைந்தபட்ச சுயாட்சிதான் வழங்கப்பட்டிருந்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னிலையில் இருந்து, பின்னர் அரசியல் சாசன வரைவிலும் பங்கேற்றவர்களுக்கு, ஆங்கிலேயருக்கு முன்னால் இந்தியத் துணைக்கண்டத்தில் பல நூறு நாடுகள் இருந்தன என்று தெரியும். அதனால், இந்தியா என்கிற ஒன்றுபட்ட அமைப்பு வேண்டும் என்று ஒப்புக்கொண்ட அதேவேளையில், அது சுயாட்சியும் இறையாண்மையும் பெற்ற தனித்த அரசுகளின் தொகுப்பாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவர்களில் பலர் விரும்பினார்கள். அரசியல் சாசன வரைவுப் பணியின் தொடக்கத்தில், இந்தியா என்பது குடியரசுகளின் கூட்டமைப்பாக (Federation of Republics), அதாவது கூட்டாட்சிக் குடியரசாக (Federal Republic) இருக்க வேண்டும் என்றுதான் தீர்மானிக்கப்பட்டது.

ஒன்றியம் எதைக் குறிக்கிறது?

பின்னாட்களில், இந்தியா ஓர் ஒன்றியமாக (Union) இருக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டமைப்பு முறை பிரிந்துபோகிற உரிமையை உள்ளடக்கியது என்பதால், இந்தியா எப்போதும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் ஒன்றியம் என்கிற ஏற்பாட்டை அவர்கள் செய்தார்கள். தனித்தனியான நிலப்பரப்புகள் கொண்ட, இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லும் உரிமையில்லாத அரசுகளின் (States) சேர்க்கை அல்லது ஒன்றிணைப்புதான் ஒன்றியம் (Union of States).

அரசியல் நிர்ணய சபை விவாதங்களின்போது ஒருமுறை, அதன் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், “தனித்தனியான அரசுகள் இருக்கும், அந்த அரசுகள் சேர்ந்து ஒன்றியத்தை உருவாக்கும் என்கிற அனுமானத்தின் அடிப்படையில்தான் அரசியல் சாசனம் முழுவதுமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்.

வாதப் பிரதிவாதங்கள்

இன்று, ஒன்றியம் என அழைக்கும் செயல் பிரிவினைக்கு வித்திடலாம் என்று வாதிடப்படுகிறது. ஒன்றியம் என இந்தியாவை அழைக்க முடிவெடுக்கப்பட்டபோது, அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் அதற்குப் பலத்த எதிர்ப்பு சில உறுப்பினர்களிடமிருந்து கிளம்பியது. ஆனால், இப்போது முன்வைக்கும் பொருளுக்கு நேர் எதிரான வாதங்களை அவர்கள் வைத்தார்கள்.

மவுலானா ஹஸ்ரத் மொஹானி என்கிற உறுப்பினர், ஒன்றியம் என்கிற பதத்தைக் கடுமையாக எதிர்த்தார். “இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கும் செயலானது, அரசியல் அமைப்பு நிர்ணய சபை முதலில் கொடுத்த உறுதிமொழிகளிலிருந்தும் எடுத்த முடிவுகளிலிருந்தும் பின்வாங்குவதைத் தெளிவாகக் காட்டுகிறது. அம்பேத்கர் புதிதாக ஏதோ ஒன்றைச் செய்கிறார். அரசியல் சாசனத்தின் இயல்பையே மாற்றுகிறார். இந்தியா குடியரசுகளின் கூட்டமைப்பாக இருக்கும் என்பது நாம் தொடக்கத்தில் கொண்டிருந்த கருத்தாக இருந்தது. அந்தக் கருத்து யாருக்காவது பிடிக்கவில்லையென்றால், இந்தியா தன்னாட்சிபெற்ற உறுப்புகளின் கூட்டமைப்பாகவாவது இருக்க வேண்டும் என்பதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அம்பேத்கர் இப்போது அரசுகளின் ஒன்றியம் என்று திருத்தியிருக்கிறார். குடியரசு என்கிற சொல்லைப் புறக்கணித்து, அரசு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

ஒன்றியம் எனும் சொல் கூட்டமைப்பு என்ற சொல் தரும் பொருளைத் தரவில்லை. ஒன்றியம் என்பது, ஜெர்மனியின் இளவரசர் பிஸ்மார்க் முன்மொழிந்ததைப் போல, அந்தக் கருத்தைப் பின்னர் கெய்சர் வில்லியம்சும் அதன் பின்னர் அடால்ஃப் ஹிட்லரும் தழுவிக்கொண்டதைப் போல இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்புகிறார். அவர் எல்லா மாகாணங்களையும், குழுக்களையும் அரசுகளையும் ஓர் அமைப்பின் கீழே கொண்டுவர விரும்புகிறார்” என்று மொஹானி வாதிட்டார்.

இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டமைப்பாக இந்தியா உருவாக்கப்பட்டால், வெகுவிரைவில் அவை பிரிந்துசென்றுவிடும் என்று கணித்த அம்பேத்கர், இந்தியாவின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக கூட்டாட்சித் தத்துவத்தின் சில கூறுகளை உள்ளடக்கிய, பிரிந்துசெல்லும் உரிமை இல்லாத இறையாண்மையுடன் கூடிய மாநில அரசுகளின் அரைக் கூட்டமைப்பு (Quasi Federal) என்கிற அளவில் இந்தியாவை ஒன்றியம் என்று வரையறுத்தார். இக்கருத்துக்கு நேரு உறுதுணையாக இருந்தார். பின்னர் அரசியல் நிர்ணய சபை அதை ஏற்றுக்கொண்டது.

கூடவே மொஹானி போன்றவர்களின் அச்சத்தையும் போக்கினார் அம்பேத்கர். “ஒன்றியம் என்பது அரசுகளின் சங்கம் அல்ல, தளர்வான உறவால் இணைக்கப்பட்டதல்ல. அதேபோல அரசுகள் என்பவை ஒன்றியத்திடமிருந்து அதிகாரத்தைப் பெறும் முகமைகள் அல்ல. ஒன்றியமும் அரசுகளும் அரசியல் சாசனத்தால் உருவாக்கப்படுபவை. இரண்டுமே அதனதன் அதிகாரத்தை அரசியல் சாசனத்திடமிருந்துதான் பெறுகின்றன. அதனதன் வரம்பிற்குள் ஒன்று மற்றொன்றைச் சார்ந்திருக்காது. ஒன்றின் அதிகாரம் மற்றதன் அதிகாரத்தோடு ஒத்திசைவானது” என்று அவர் விளக்கினார்.

அரசியல் சாசனம் வழங்கிய தகுதி

சுருக்கமாகப் புரிந்துகொள்வதென்றால், அரசியல் சாசனம் இந்தியாவுக்கு வழங்கியிருக்கிற தகுதிதான் ஒன்றியம் என்பது. அரசியல் சாசனத்தின்படி, இந்தியாவின் அரசாங்கத்தை (Government) இந்திய அரசாங்கம் (Government of India) என்றுதான் அழைக்க வேண்டும். இந்திய அரசு என்று அழைத்தால், அது இந்திய அரசாங்கத்தையும் நாடளுமன்றத்தையும் உள்ளடக்கிய பொருளைத் தரும். அரசுகளின் அரசாங்கத்தை அந்த அரசின் பெயரோடு சேர்த்து அழைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு என்பது அரசியல் சாசனம் வழங்கிய தகுதி. அதனுடைய அரசாங்கத்தின் பெயர் தமிழ்நாடு அரசாங்கம் என்பதுதான். தமிழ்நாடு அரசு என்றழைத்தால், அது தமிழ்நாட்டின் அரசாங்கத்தையும் சட்டப்பேரவையையும் சேர்த்துக் குறிக்கும்.

அசல் அரசியல் சாசனத்தில் மத்திய அரசாங்கம் (Central Government) என்ற சொல்லாடலே இல்லை. பின்னாட்களில் செய்யப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்களின் போது மத்திய அரசாங்கம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவ்வாறு பயன்படுத்துவதென்றால், அதற்கென்று தனியான திருத்தத்தை அரசியல் சாசனத்தில் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமலேயே மத்திய அரசாங்கம் என்ற சொல்லைப் பிற அரசியல் சாசனத் திருத்தங்களின்போது பயன்படுத்துவதற்கான உரிமை நாடாளுமன்றத்துக்கு இருக்கிறதா என்பது தனி விவாதம்.

விவாதங்கள் தொடரட்டும்

இந்த அரசியல் அமைப்பின்கீழ் நாம் வெகுதூரம் நடைபோட்டுவிட்டோம். கூட்டமைப்பை வலியுறுத்திய, தனிநாடு கேட்ட கொள்கைகள் எல்லாம் எப்போதோ கைவிடப்பட்டுவிட்டன. அரசு என்பது மாநிலம் எனப் பழகிவிட்டது. மத்திய அரசு மாநிலங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக மத்தியப் பட்டியலுக்குள் எடுத்துக்கொள்ளப்படும் தருணங்களில் ‘மாநில சுயாட்சி’, ‘மொழிவழித் தேசியம்’ எனும் குரல்கள் எழுகின்றன.

ஒன்றியம் என்கிற அமைப்பு மாநிலங்களின் சுயாட்சியை விழுங்கிவிடும் என்று அச்சப்பட்டது போய், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் கட்சிகள் ஒன்றியம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஒற்றையாட்சியின்கீழ் இந்தியாவை ஆள விரும்புவதாக விமர்சிக்கப்படும் கட்சிகள், ஒன்றியம் என்கிற சொல் பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்கின்றன.

எது குறித்தும் சுதந்திரமாக, ஆக்கபூர்வமாக உரையாடும் உரிமைதான் ஜனநாயகம். உரையாடல்கள் தொடரட்டும்!

கட்டுரையாளர்: பத்திரிகையாளர், வழக்கறிஞர், அலகாபாத் வங்கியின் முதன்மை மேலாளராக (சட்டம்) பணியாற்றியவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in