தமிழ்ச் சங்கத்தில் ஆரிய மாதா சிலையா?- கச்சை கட்டும் புதிய சர்ச்சை

தமிழ்ச் சங்கத்தில் ஆரிய மாதா சிலையா?- கச்சை கட்டும் புதிய சர்ச்சை

கே.கே.மகேஷ்

மதுரையில் 1981-ல் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது, ``இதே மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும்'' என்று அறிவித்தார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். பிறகு 2008-ல் திமுக ஆட்சியில் அதற்கெனத் தனி பெருந்திட்ட வளாகம் கட்ட 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட இந்தத் திட்டம் ஒரு வழியாக செயல்படுத்தப்பட்டு, 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் திறப்பு விழா கண்டது.

இந்த வளாகம் உண்மையிலேயே தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றவில்லை, ஆள் நடமாட்டமில்லாத பேய் பங்களா போல கிடக்கிறது என்று தமிழறிஞர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், ``வண்டியூர் கண்மாயில் 100 கோடி ரூபாய் செலவில் 126 அடி உயரத்தில் தமிழன்னைக்கு பிரம்மாண்ட சிலை நிறுவப்படும்'' என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா சொன்னதையும் தமிழக அரசு கைவிட்டது.

இந்த நிலையில், உலகத் தமிழ்ச்சங்க வளாகத்திலேயே தமிழன்னை சிலையுடன் கூடிய கவின்மிகு நீரூற்று அமைக்க தமிழக அரசு டெண்டர்விட்டது. 75 கோடி ரூபாய்க்கான இந்தத் திட்டம் குறித்த பூம்புகார் நிறுவனத்தின் அறிவிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ரோம் நகரில் உள்ள ட்ரெவி ஃபவுன்டெய்ன் (Trevi Fountain) போல பளிங்கு கல்லினால் அமைக்கப்பட வேண்டும் என்பது பூம்புகாரின் குறிப்பு. இதனால், ``தமிழக அரசு சார்பில் நிறுவப்படவுள்ள தமிழன்னை சிலையை வடநாட்டினரின் வழக்கப்படி, பளிங்குக்கல்லைப் பயன்படுத்தி வேதகால பிராமணிய முறையைப் பின்பற்றி வடிவமைக்க வேண்டிய தேவை என்ன?'' என்று பாரம்பரிய விஸ்வகர்ம ஸ்தபதிகள் மற்றும் சிற்பிகள் பொது நலச்சங்கம் கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், கண்டனம் தெரிவித்தார். ``தமிழ்நாட்டின் கல்வி, பண்பாடு, வரலாற்றுத் துறைகளில் ஊடுருவி உள்ள சில நச்சுக்கிருமிகள் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு அனைத்தையும் இந்துத்துவமயமாக்க முயன்று வருகின்றன. அதனால்தான் தமிழ் அன்னைக்குப் பதிலாக ஆரிய மாதா சிலை வடித்து சங்கம் வைத்த மதுரையில் நிறுவிடத் துடிக்கிறார்கள்'' என்று காட்டமாக வைகோ அறிக்கை வெளியிட பிரச்சினை பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in