ராகுலுக்கு நாங்களும் சவாலாய் இருப்போம்- கர்ஜிக்கும் கேரளத்து காம்ரேடுகள்!

ராகுலுக்கு நாங்களும் சவாலாய் இருப்போம்- கர்ஜிக்கும் கேரளத்து காம்ரேடுகள்!

என்.சுவாமிநாதன்

“பிஜேபி மாத்திரமல்லா…காங்கிரஸ்மேயும் வீழ்த்தேண்ட நேரமானு இது. பிஜேபி-யும், காங்கிரஸும் நாணயத்திண்ட இரு வர்சங்கள்...” என செஞ்சட்டை தோழர்கள் கர்ஜிக்கும் பிரச்சார வாகனங்கள் தமிழக எல்லையோரத்து கேரள தேசத்தில் வேகம் காட்டுகின்றன. அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் குமரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழக காம்ரேடுகள்! வயநாடு போட்டி அறிவிப்பால் இப்போது இந்த உறவுக்கும் சேர்த்தே குண்டு வைத்திருக்கிறார் ராகுல்காந்தி!

தமிழக, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள், “இங்கே வாங்க ஜீ போட்டியிடலாம்” எனப் போட்டிபோட்டு அழைத்துக்கொண்டிருக்கையில், கேரளத்துக்குப் போய்விட்டார் ராகுல் காந்தி. வயநாடு தொகுதியில் ராகுல் போட்டி என்ற செய்தி கேரள காங்கிரஸாரை எந்த அளவுக்கு உற்சாகப்படுத்தி இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆளும் இடதுசாரிகளை எரிச்சலடைய வைத்திருக்கிறது. “தென் மாநிலங்களில் ராகுல் போட்டியிட விரும்பினால் பாஜக செல்வாக்குடன் இருக்கும் கர்நாடகத்தில் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட்டிருக்கலாம். அதைவிடுத்து, கேரளத்துக்கு வந்திருப்பது துரதிருஷ்டவசமானது. அவருக்காக ஒருகாலும் வயநாடு தொகுதியில் எங்களது வேட்பாளரை வாபஸ் பெற மாட்டோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி. ராகுல் கேரளத்துக்கு வருவதால் அங்குள்ள 20 தொகுதிகளிலும் இடதுசாரிகளுக்கு சவாலான நிலை ஏற்படும் என்பதும் தோழர்களின் அச்சம்.

``தென் மாநிலங்களை பாஜக அரசு மெத்தனமாகப் புறக்கணித்துவிட்டது. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும் தென் மாநிலங்களையும் காங்கிரஸ் கவனிக்கும் என்பதை உணர்த்தவுமே நான் இங்கு போட்டியிடுகிறேன்” என்கிறார் ராகுல் காந்தி. அவரது இந்த முடிவு தென்னகத்தை காங்கிரஸின் கண் அசைவில் கொண்டுவரும் முயற்சி என்று பேசப்பட்டாலும், “பாஜக நேரடியாகப் போட்டியிடாத ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் ராகுல் பலவீனப்பட்டுவிட்டார் என்றுதானே அர்த்தம்” என்கின்றனர் கேரள அரசியல் நோக்கர்கள். வயநாட்டை ‘ட்ரை ஜங்ஷன்’ என்றே சொல்கின்றனர் கேரள காங்கிரஸ்காரர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in