அந்த இன்னோவா காரை இப்ப யாரு வெச்சிருக்கா?

அந்த இன்னோவா காரை இப்ப யாரு வெச்சிருக்கா?

கே.கே.மகேஷ்

தேர்தல் நெருங்க நெருங்க, சாதாரண குடிமக்களும்கூட அரசியல் விமர்சகர்களாக அவதாரம் எடுத்து டீக்கடை முதல் தியேட்டர் வரைக்கும் உபி நிலவரம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். குடும்ப வாட்ஸ் - அப் குரூப்கூட, சட்டசபையாக மாறி வேட்டி சட்டைகள் கிழிகின்றன. ஆனால், ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்திய தமிழருவி மணியனும், கமல்ஹாசன் கட்சியில் மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனும் எந்த வம்பு தும்பிலும் சிக்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார்கள்.

“இந்த நேரத்துல ஒரு அரசியல்வாதி எப்படி நிம்மதியா இருக்கலாம். எனக்கொரு பேட்டி தரக்கூடாதா?” என்று பேராசியர் கு.ஞானசம்பந்தனைத் தொடர்பு கொண்டேன். “அய்யய்யோ, நான் அரசியல்லேயே இல்லையே!” என்று பெரிய குண்டாகப் போட்டார் அவர். “என்னங்கய்யா சொல்றீங்க... கமல் கட்சி தொடங்கினப்ப உயர்மட்ட குழு உறுப்பினரா இருந்தீங்க. அப்புறம் அதைக் கலைச்சுட்டு உங்கள கட்சியின் மாநிலத் துணைத் தலைவரா நியமிச்சாரே உலக நாயகன்?” என்று கேட்டேன்.

“அது ஒண்ணும் இல்ல தம்பி... எந்த விஷயத்தைச் செய்தாலும் அவருக்கு என் ஞாபகம் வந்திடும். ஒரு நல்ல புத்தகம் படிச்சாலும் சரி, நல்ல உணவு சாப்பிட்டாலும் சரி என்கிட்ட போன் போட்டு, ‘இதைப் படிங்க, இதைச் சாப்பிடுங்க’னு பரிந்துரை செய்வார். அப்படித்தான் அவரது புதிய முயற்சியில் என்னையும் இணைத்துக்கொண்டார். நமக்குத்தான் யாரையும் வையவும் முடியாது, யாராவது வஞ்சா கேட்டுக்கவும் முடியாதா... பிறகெப்படி அரசியல்ல தாக்குப்பிடிக்க முடியும்? அதனால, ‘எனக்கு இந்தப் பதவி வேண்டாம். விலகிக்கிறேன்’னு சொன்னேன். ‘ஏன்?’னு கேட்டாரு, ‘நான் ஜெயா டிவி-யில 19 வருஷமா, ‘சிந்திக்க சில செய்திகள்’னு சொல்லிக்கிட்டு இருக்கேன். அந்தம்மாகிட்ட கேட்ருந்தா எப்பவோ எனக்கு பதவி தந்திருப்பாங்க. நமக்கு அது சரிப்பட்டு வராது சார்’னு சொன்னேன். ‘சரி, நீங்க விலகியிருங்க. ஆனா, விலகினதா காட்டிக்க வேண்டாம்’னு சொல்லிட்டாரு. நான் பாட்டுக்கு பட்டிமன்றம், சினிமான்னு பிஸியா இருக்கேன்” என்று சிரித்தார் ஞானசம்பந்தன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in