
குள.சண்முகசுந்தரம்
“தமிழக காங்கிரஸ் தலைவரை மாத்தப் போறாங்க” குஷ்புவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கடந்த ஒரு வருட காலமாக இந்த அலாரத்தை அடித்துக் கொண்டே இருந்தார்கள். இப்போதுதான் அவர்களுக்குக் கதவு திறந்திருக்கிறது. தலைவர் பதவியிலிருந்த அரசர் இறக்கப்பட்டு அழகிரி அமரவைக்கப்பட்டிருக்கிறார்!
எப்போது வேண்டுமானாலும் இது நடக்கலாம் என காங்கிரஸ் கட்சிக்குள் எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்ததால் திருநாவுக்கரசர் நீக்கம் யாருக்கும் திகிலை உண்டாக்கவில்லை. ஆனால், அழகிரி நியமனம்தான் அனைவருக்கும் திகைப்பை உண்டாக்கி இருக்கிறது. ஏனென்றால்... எந்தக் கட்டத்திலும் தலைவர் பதவிக்கான பந்தயத்தில் பேசப்படாதவர் அழகிரி. அவர் எப்படி இந்த இடத்துக்கு வந்தார் எனக் கேட்டால் முப்பது வருடத்துக்கு முந்தைய சரித்திரம் திரும்பியிருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்!
அதென்ன சரித்திரம்? இந்திரா காந்தி காலம் தொட்டு ராஜீவ் காந்தி காலம் வரைக்கும் தொடர்ந்து 12 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக இருந்தார் ஜி.கே.மூப்பனார்.