சுயநல அரசியலுக்கு தேசத்தை பலி கொடுக்கிறார்கள்!

மம்தா, கெஜ்ரிவாலை விளாசும் விஜயதரணி
சுயநல  அரசியலுக்கு தேசத்தை பலி கொடுக்கிறார்கள்!
விஜயதரணி

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மனதில் பட்டதை எப்போதும் பளிச்சென பேசுபவர் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ-வான விஜயதரணி. மகிளா காங்கிரசின் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் இருக்கும் அவரிடம் 5 மாநில தேர்தலில் காங்கிரசின் தோல்வி குறித்துப் பேசினோம்.

5 மாநிலத் தேர்தலில் காங்கிரசின் தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

4 மாநிலங்களில் தோற்றாலும் நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக வந்திருக்கிறோம். அதிலிருந்து ஆளும்திறனுடன் மேம்பட்டு வருவது குறித்து திட்டமிடவேண்டும். இந்தத் தோல்வியை மறுஆய்வுக்கு உட்படுத்தவும் வேண்டும். இதில் காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறைசொல்வதில் அர்த்தம் இல்லை. சிலகட்சிகளால் மதச்சார்பற்ற வாக்குகள் சிதைக்கப் பட்டிருக்கின்றன. அதனால் தான் பாஜகவுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் தாங்களே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கின்றன. காங்கிரஸோடு கூட்டணி வைத்தால் அதற்கு சிக்கல் ஏற்படும் என சுயநலமாக ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்து, தனித்து நின்று மதச்சார்பற்ற வாக்குகளை பிரித்துவிடுகிறார்கள். அகிலேஷ் யாதவும் இந்த வேலையைத்தான் செய்தார். இதனால் உபியில் எங்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டது அகிலேஷ் தான். அதனால் அவரும் ஆட்சிக்கு வரமுடியாமல் போய்விட்டது.

மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்ட காங்கிரஸ் தானே முனைப்பு காட்டியிருக்க வேண்டும்?

நாங்கள் முயற்சி எடுத்தோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் எவ்வளவோ பேசிப்பார்த்தார்கள். ஆனாலும் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மியைக் கொண்டுவர முடியவில்லை. எனவே இது காங்கிரஸ் கட்சியின் தோல்வியே இல்லை. இது இந்திய மக்களின் தோல்வி. பாஜகவுக்கு எதிரான மனநிலையில் தான் பெருவாரியான மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால் அந்த வாக்குகள் பிரிந்துவிடுகிறது. மாநில அரசியலுக்காக தங்கள் சுயநலத்திற்காக, இந்தக் கட்சிகள் தேசத்தை பாஜகவிடம் பலிகொடுக்கிறார்கள்.

உபியில் இம்முறை பிரியங்கா கடும் உழைப்பைச் செலுத்தியும் காங்கிரஸ் எடுபடவில்லையே?

கடுமையாகத்தான் பிரியங்கா உழைத்தார். 230 பேரணிகளை உபியில் மட்டும் நடத்தினார். ஆனால், அவ்வளவு பெரிய உழைப்பை வாக்குப்பிரிப்பு பலன் இல்லாமல் ஆக்கிவிட்டது. மதசார்பற்ற வாக்குகள் கட்சி ரீதியாகப் பிரிய இடம் கொடுக்காமல், காங்கிரஸோடு கைகோர்த்து தேர்தலைச் சந்தித்திருந்தால் உபியில் அகிலேஷ் யாதவ் ஆட்சி வந்திருக்கும்.

கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் கோவாகூட காங்கிரசுக்குக் கை கொடுக்கவில்லையே?

கோவாவைக் கைப்பற்ற இம்முறை சரியாகவே வியூகம் வகுத்தது. கடந்தமுறை காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்த போதும் பின்வாசல் வழியாக ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இம்முறை அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது என ஏகத்தெளிவில் இருந்தது காங்கிரஸ். வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி, தேர்தலுக்குப் பின் அவர்களை ஒரே விடுதியில் பாதுகாப்பாக தங்கவைத்தது வரை அனைத்தும் சரியாகவே நடந்தது. ஆனாலும் அங்கும் வாக்குப்பிரிப்பு பாஜகவுக்கு சாதகமாகிவிட்டது. ஆம் ஆத்மியின் வாக்குப்பிரிப்பும் நடந்தது. காங்கிரஸில் இருந்து பிரிந்துபோனவர்கள் தனிநபர் செல்வாக்கால் ஜெயித்ததும் நடந்தது. கோவாவின் தோல்வி வேதனையான ஒன்றுதான்.

இப்படியே நீடித்தால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. அதற்கும் காங்கிரஸ் சில வியூகங்களை வகுக்கவேண்டும். திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் மூன்றாவதாக ஒரு நபரை நிறுத்தினால் நிச்சயம் பாஜக வேட்பாளர் ஜெயித்துவிடுவார். இரண்டு அணிகள் களத்தில் நின்றால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கும் இந்தக் கணக்குப் பொருந்தும்.

தமிழகத்தில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி பிரித்த வாக்குகள் எப்படி அதிமுகவுக்கு சாதகமாக இருந்ததோ, அதேசூழல் தான் வாக்குப்பிரிப்பினால் பாஜகவுக்கும் நடக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கி 50 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதனால் திமுக காங்கிரஸ் கட்சியோடு இணைந்து பயணிப்பதில் பரஸ்பரம் எந்தச் சிக்கலும் இல்லை. எங்களைக் கண்டு திமுக அஞ்சவும் இல்லை. ஆனால், எங்களோடு கூட்டணி வைத்தால் அவர்கள் ஆளும் மாநிலங்களில் நாங்கள் செல்வாக்கு பெற்றிவிடுவோம் என ஆம் ஆத்மியும், திரிணமூல் காங்கிரசும் அஞ்சுகின்றன. இந்த நிலை தொடர் அனுமதித்தால் அது பாஜகவுக்கு சாதகமாகவும், ஜனநாயகத்திற்கு பாதகமாகவும் தான் முடியும்.

காங்கிரஸ் கட்சிக்கு எத்தகைய மாற்றங்கள் தேவை என நினைக்கிறீர்கள்?

நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுத்து மாநில அளவில் ஊக்குவிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு வரும். இப்போது புதிய உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது காங்கிரஸ் கட்சி. நானும், தெலங்கானா மாநில பொறுப்பாளராக இந்தப் பணியை முன்னெடுக்கிறேன். இந்தியாவிலேயே இணைய வழியில் அதிகபட்சமாக 20 லட்சம் புதிய உறுப்பினர்களை அம்மாநிலத்தில் சேர்த்துள்ளோம்.

மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி உறுப்பினர் சேர்க்கை நடத்திய பாஜகவை பகடி செய்துவிட்டு இணையவழி உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறீர்களே?

மிஸ்டு கால் கொடுப்பதுபோல் இல்லை இது. இதில் பொய்யாக உறுப்பினர் கணக்குக்காட்ட முடியாது. முதலில் செல்போனில் காங்கிரஸ் கட்சியின் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். நமது அலைபேசி எண்ணைக் கொடுத்து, ஓடிபி மூலம் தான் செயலியையே பதிவிறக்கம் செய்யமுடியும். எம்பி, எம்எல்ஏ, மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் தான் இதை மேலாண்மை செய்வார்கள். காங்கிரசுக்கு இதன் மூலம் புதிய தொண்டர்கள் மட்டுமல்லாது, புதிய இளம் தலைவர்களும் கிடைப்பார்கள். ராகுலும், பிரியங்காவும் எடுத்த நல்லமுயற்சி இது. இதெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காக மாறும் என நம்பிக்கை இருக்கிறது.

காங்கிரசுக்கு வலுவான தலைமை இல்லாததும் தொடர் தோல்விக்கு காரணம் என்கிறார்களே?

விரைவில் தலைமை வரும். அனேகமாக ராகுல்காந்திதான் தலைவராக வருவார். தேசத்திற்காக பாட்டியையும், தந்தையையும் பறிகொடுத்து திருமணமே செய்துகொள்ளாமல் களம் ஆடும் இவரது தேசபக்தி காங்கிரசின் மிகப்பெரிய பலம். ஆனால் ஒன்று, மதச்சார்பற்ற வாக்குகள் பிரியாதிருக்கும் வேலையில் இனி காங்கிரஸ் முனைப்புக்காட்ட வேண்டும். அந்த பொறுப்பும், பொதுநலமும் காங்கிரசுக்கு மட்டுமல்ல சகல கட்சிகளுக்கும் இருக்கவேண்டும். பாஜகவை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் வரவேண்டும். அரசியல் என்பது காலச்சக்கரம் போன்றது. மீண்டும் காங்கிரசின் காலம்வரும்.

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருகுடையின் கீழ் கொண்டு வருவது காங்கிரஸ் கட்சிக்கு சாத்தியமா?

அதைச் சாத்தியம் ஆக்கவேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது. மம்தாவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் அதிகாரத்தின் ருசியை நுகர்ந்துவிட்டார்கள். அலெக்சாண்டரைப் போலத்தான் அரசியல்வாதிகள். கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் ஆளுகையை விரிக்கமுயல்வார்கள். பஞ்சாபை பிடித்ததும், கெஜ்ரிவாலுக்கு இன்னும் நான்கு மாநிலங்களில் வந்துவிடுவோம் எனத்தோன்றும். ஆனால், உண்மை அது அல்ல.

இந்தியாவிலேயே பாஜக எதிர்ப்பில் தீவிரமாக இருக்கும் மாநிலங்கள் பஞ்சாப், தமிழகம், கேரளம் இந்த மூன்றுதான். அதில் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் திமுக அரணாக நிற்கிறது. கேரளத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியும் அங்கு வலுவாக இருக்கிறது. இந்தக் கள யதார்த்தத்தை ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளிடம் காங்கிரஸ் விளக்க வேண்டும். ஆளுமையுடைய நபர்களுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளைக் கொடுக்கவும் தயங்காது முன்வர வேண்டும்.

Related Stories

No stories found.