உலக புன்னகை தினம்!

காமதேனு

சமூக வலைதளங்களில் இன்றைக்கு, நாம் அதிகமாகப் பயன்படுத்துவது மஞ்சள் நிற ஸ்மைலியாகத்தான் இருக்கும். இதை 1963-ம் ஆண்டிலேயே ஒருவர் உருவாக்கியிருக்கிறார் என்றால் நம்ப முடியுமா?

ஆமாம்... ஹார்வி பால் என்பவர்தான், மஞ்சள் ஸ்மைலி முகத்தை உருவாக்கினார். வணிகக் கலைஞரான இவர், ஸ்டேட் மியூச்சுவல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன பிரச்சாரத்திற்காக ’ஸ்மைலி ஃபேஸ்’ எனும் டிசைனை உருவாக்கினார்.

அப்போது, இந்தச் சின்னம், நல்ல எண்ணத்துடன் தொடர்புகொண்டதாகவும் மக்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதைக் கண்டு அவர் மகிழ்ந்தார்.

ஆனால் சில காலம் கழித்து, அது வணிகமயாமனது கண்டு கலங்கிப் போனார். இதனுடைய உண்மையான அர்த்தம் வெளிப்படாமல் போகிறதே... என வருந்தினார்.

அப்போதுதான் ‘உலக புன்னகை தினம்’ என்று ஒரு நாளைக் கொண்டு வர முடிவு செய்தார். ’’உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு வருடத்தில் ஒரேயொரு நாளையேனும் புன்னகைக்கும், கருணைச் செயல்களுக்கும் ஒதுக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.

2001-ல் ஹார்வி மறைந்தார். அவரின் பெயரையும் நினைவையும் அவரின் நல்லெண்ணத்தையும் போற்றும் வகையில், ’ஹார்வி பால் வேர்ல்ட் ஸ்மைல் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினமாகக் கொண்டாடி வருகிறது.