மகளிர் தொழில்முனைவோர்  
பெண் சக்தி

இன்று மகளிர் தொழில்முனைவோர் தினம்; சகலத்திலும் வெற்றிக்கொடி கட்டும் பெண்களை வாழ்த்துவோம்!

காமதேனு

ஒரு ஆண் தொழில்முனைவோராக இருப்பதற்கும், அதையே பெண் செய்வதற்கும் இடையே நிறைந்திருக்கும் வித்தியாசமே, மகளிர் தொழில்முனைவோர் தினத்தை மனமுவந்து கொண்டாடச் செய்கிறது.

பெண்கள் படிக்க முன்வருவதும், பெயருக்காக அன்றி சொந்தக்காலில் நிற்பதற்காக தொடர்ந்து படிப்பதும்; படித்த வழியில் தொழில்முனைவோராக நிற்பதும் அத்தனை எளிதானதல்ல. அதனால்தான், படிக்கும் பெண்களில் பலரும் அந்த படிப்பை அடித்தளமாகக் கொண்டு ஏதேனும் அலுவலகப் பணியோடு தங்களை சுருக்கிக்கொள்ள விரும்புகின்றனர்.

மகளிர் தொழில்முனைவோர்

மாறாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இறங்கி, அத்துறையில் வென்று காட்டும் பெண்கள் ஒப்பீட்டளவில் குறைந்தே காணப்படுகிறார்கள். இதற்கு காரணம் தொழில்துறையில் ஈடுபட விரும்பும் ஆணைவிட பெண்ணுக்கான சவால்கள் இங்கே அதிகரித்து இருப்பதாகும்.

அதில் முதலாவதாக, பெண்ணானவள் குடும்பம் - பணி என இரண்டு பொறுப்புகளையும் தடுமாற்றமின்றி சமாளித்தாக வேண்டும். வீட்டுப் பெரியவர்கள் அல்லது ஆண்களிடம் அனுமதி வாங்க வேண்டும். தொழிலுக்கான முதலீடு, கடன் பெறுவது ஆகியவற்றிலும் ஆண் போலன்றி பெண்கள் சந்திக்கும் சங்கடங்கள் அதிகம். உடல், உடை, கலாச்சாரம், சமூக மதிப்பீடு என பலவிதங்களை சார்ந்தும் மகளிர் தொழில்முனைவோரின் எதிர்காலம் அமைகிறது.

இவற்றையெல்லாம் கடந்தே பெண்கள் தொழில்துறையில் சாதிக்கவும் செய்கிறார்கள். இவர்களை ஊக்குவிக்கவும், மரியாதை செய்யவும், கொண்டாடவும் மகளிர் தொழில்முனைவோர் தினம் உள்ளிட்டவை வழி செய்கின்றன.

மகளிர் தொழில்முனைவோர்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று மகளிர் தொழில்முனைவோர் தினம் கொண்டாடப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மகளிர் தொழில்முனைவோரின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கவும், ஆதரிக்கவும் மற்றும் கொண்டாடவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மிகப்பெரும் நிறுவனங்களை தொடங்கி சாதிப்போர் மட்டுமன்றி, வீட்டில் இருந்தபடியேயும், ஃபிரீலான்சராகவும் தங்களுக்கான தடைகற்களையே படிக்கற்களாக்கி பெண்கள் கடந்து செல்கின்றனர். ஓப்ரா வின்ஃப்ரே, செர் வாங், இந்திரா நூயி, ஃபால்குனி நாயர், வந்தனா லுத்ரா, கிரண் ஷா மஜூம்தார், ஜினா ரைன்ஹார்ட் உள்ளிட்ட வெற்றிகரமான மகளிர் சாதனையாளர்கள், அத்துறையில் காலடி வைக்கும் இதர மகளிருக்கு முன்னுதாரணமாகி உள்ளனர்.

தொழில்முனைவோராக மகளிர் விரும்புவதன் பின்னணியில் பெரும் தேடல் இருக்கிறது. பெண்கள் கையில் சேரும் ஒவ்வொரு ரூபாயும் குடும்பத்துக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் சிந்தாது சிதறாது சேமிக்கப்படுகிறது அல்லது செலவிடப்படுகிறது. சொந்தக்காலில் நிற்பதால் மகளிருக்கு கிடைக்கும் தன்னம்பிக்கை, பொருளாதார சுதந்திரம் உள்ளிட்டவை, அடுத்த தலைமுறை மகளிரை இன்னும் வேகத்துடன் எழச் செய்கிறது.

மகளிர் தொழில்முனைவோர் தினம் என்பது, உலக மகளிர் தொழில்முனைவோர் தின அமைப்பின் சிந்தனையில் உருவானது.இந்த அமைப்பின்தொடர் முயற்சியால், ஆண்டு தோறும் நவம்பர் 19 அன்று மகளிர் தொழில் முனைவோர் தினமாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

மகளிர் தொழில்முனைவோர் தினம்

உலகின் சுமார் 144 நாடுகள் 2014-ம் ஆண்டு முதல் மகளிர் தொழில்முனைவொர் தினத்தை அங்கீகரித்தன. இந்த நாளில் மகளிர் தொழில்முனைவோர் தின முன்னோடிகளை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பெண் தொழில்முனைவோர் 14 சதவீதம் மட்டுமே இருப்பது, இந்தியாவில் மகளிர் தொழில்முனைவோருக்கான இடம் பெருமளவு காலியாக இருப்பதையே காட்டுகிறது.

மகளிர் தொழில்முனைவோர் தினத்தை கொண்டாட விரும்புவோர், ஆண்டுதோறும் சிறப்பாக செயல்பட்ட மகளிர் தொழில்முனைவோருக்கு பரிசுகள் வழங்கலாம். சந்தையில் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ளும் மகளிர் நடத்தும் தொழில்துறை தயாரிப்புகளுக்கு பொதுமக்கள் முன்னுரிமை தரலாம். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவியருக்கு, மகளிர் தொழில்முனைவோரை அறிமுகம் செய்து இளம்வயதினர் உத்வேகம் பெற உதவலாம்.

SCROLL FOR NEXT