சானியா மிர்சா 
பெண் சக்தி

HBD Sania Mirza; இந்திய டென்னிஸின் ஒளிரும் அடையாளம்: சானியா மிர்சாவின் பிறந்தநாள் இன்று!

காமதேனு

இந்திய டென்னிஸ் விளையாட்டின் அடையாளமாகத் திகழ்ந்த சானியா மிர்சாவின் 37வது பிறந்தநாள் இன்று.

இன்று விளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் எண்ணற்ற பெண்களின் ரோல் மாடலாக இருப்பவர் சானியா மிர்சா. 1986 நவம்பர் 15-ம் தேதி மும்பையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சானியாவுக்கு சிறுவயது முதலே டென்னிஸ் என்றால் மிகப்பெரிய விருப்பம். இதனால் பள்ளியில் படிக்கும்போதே துடிப்புடன் விளையாடி, டென்னிஸ் விளையாட்டில் ஒளிர்ந்தார். 2002-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 16 வயதில் தனது முதல் பட்டத்தை அவர் வென்றார்.

சானியா மிர்சா

சானியா மிர்சா தனது 17 வயதில் 2003-ல் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுத்தார். அதன்பின்னர் பல போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியாவின் அசைக்க முடியாத டென்னிஸ் நட்சத்திரம் என்ற அடையாளத்தை ஈட்டினார். 2003-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை இந்திய டென்னிஸின் அடையாளமாக, நம்பிக்கையாக வலம் வந்தார்.

உலகின் ஒற்றையர் தரவரிசையில் 27வது இடத்தை அடைந்தார். இந்திய வீராங்கனை ஒருவர் உலக தரவரிசையில் இத்தகைய உயர்ந்த இடத்தை பிடித்தது இதுவே அதிகபட்ச நிலையாக இருக்கிறது.

இரட்டையர் டென்னிஸில் அவர் 43 டபிள்யூடிஏ பட்டங்களை வென்றுள்ள அவர், 2015-ல் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். இதில் ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் அடங்கும். கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். மார்ட்டினா ஹிங்கிஸுடன் ஒரே ஆண்டில் விம்பிள்டன், யுஎஸ் ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றார்.

டபிள்யூடிஏ இரட்டையர் பிரிவில் 23 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2022-ல் கூட, செக் குடியரசின் லூசி ஹ்ரடேக்காவுடன் க்ளே கோர்ட்டில் இரண்டு பிள்யூடிஏ இறுதிப் போட்டிகளில் பங்கேற்றார்.

சானியா மிர்சா

இந்திய டென்னிஸ் வரலாறு என்று எடுத்துக்கொண்டால் ராமநாதன் கிருஷ்ணன், லியாண்டர் பயஸ், ரமேஷ் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ், சோம்தேவ் தேவ்வர்மன், மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா என ஆண்களின் பட்டியல் மட்டுமே நீள்கிறது. மகளிர் பிரிவில் ருஷ்மி சக்கரவர்த்தி போன்ற சிலரே இருந்தனர். ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் உலக அளவில் சாதித்தனர். ஆனால், மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலை இருந்தது.

அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்த தேவதையாக மாறினார் சானியா மிர்சா. முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சானியாவுக்கு டென்னிஸ் விளையாட அவரது சமூகமே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதையெல்லாம் மீறி உலக அரங்கில் டென்னிஸ் தேவதையாக ஜொலித்தார். தொடக்கத்தில் ஒற்றையர் பிரிவில் ஆர்வம் காட்டிய சானியா, அதன் பின்னர் தனது களத்தை இரட்டையர் பிரிவுக்கு மாற்றினார்.

சானியா மிர்சா

2009-ல் ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையரில் பட்டம், 2012-ல் பிரெஞ்சு ஓபன், 2014-ல் அமெரிக்க ஓபனில் பட்டம், 2015-ல் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு, 2015-ல் அமெரிக்க ஓபன், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றியிருக்கிறார்.

2002-ல் ஆசிய விளையாட்டில் கலப்பு இரட்டையரில் வெண்கலம், 2006-ல் ஒற்றையரில் வெள்ளி, கலப்பு இரட்டையரில் தங்கம், மகளிர் அணி பிரிவில் வெள்ளி, 2010-ல் ஒற்றையர் போட்டியில் வெண்கலம், கலப்பு இரட்டையரில் வெள்ளி, 2014 மகளிர் இரட்டையரில் வெண்கலம், கலப்பு இரட்டையரில் தங்கம், காமன்வெல்த் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என அவரது பதக்கப் பட்டியல் நீள்கிறது.

சானியா மிர்சா

மத்திய அரசு இவருக்கு 2004-ல் அர்ஜுனா விருதும், 2006-ல் பத்மஸ்ரீ விருதும், 2015-ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், 2016-ல் பத்ம பூஷண் விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது. 2016 ரியோ ஒலிம்பிக்கில், அவரும் ரோஹன் போபண்ணாவும் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் ராஜீவ் ராம் ஆகியோருக்கு எதிராக அரையிறுதியில் விளையாடியபோது, அவர் ஒலிம்பிக் பதக்கத்தைப் பெறுவதற்கு வெகு அருகே சென்று இறுதியில் தோல்வியடைந்தார். 4 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றாலும் பதக்கம் வெல்லாத குறை இவருக்கு உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது கணவர் ஷோயப் மாலிக் (பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்) , மகன் இஹானுடன் வசித்து வருகிறார்.

கணவர், குழந்தையுடன் சானியா மிர்சா

ஓய்வு பெற்றபோது சானியா மிர்சா கூறிய வார்த்தைகள் இவைதான், “இளம் பெண்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் நினைப்பதை செய்யக்கூடாது என்று யாரும் உங்களை தடுக்க அனுமதிக்காதீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று மற்றவர்கள் உங்களுக்காக முடிவெடுக்க கூடாது” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

சாதிக்க விரும்பும் பெண்களின் ஒளிரும் நட்சத்திரமான சானியா மிர்சாவின் பிறந்தநாள் இன்று.

SCROLL FOR NEXT