பெண் சக்தி

ரெட் வைன் தாய்க்கும் சேய்க்கும் நல்லது!? : அவ(ள்) நம்பிக்கைகள்-11

டாக்டர் சசித்ரா தாமோதரன்

நம்பிக்கை :

"தூங்கிட்டே இருந்தா, உள்ளே குழந்தையும் தூங்கிடும்..!"

உண்மை :

கர்ப்பிணிக்கு, ஆரோக்கியமான உணவு எவ்வளவு அவசியமான ஒன்றோ, அதேபோல தூக்கமும் மிக அவசியமான ஒன்றாகும்.

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சராசரியாக இரவில் 8 மணிநேரம் உறங்குவதுடன், பகலில் 2 மணிநேர ஓய்வும், 20- 30 நிமிடங்கள் nap எனப்படும் பூனைத்தூக்கமும் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். உண்மையில், சரியான நிலையில், சரியான அளவிலான தூக்கம், தாயின் உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் மறுநாள் புத்துணர்வுடன் செயல்படவும் உதவுகிறது.

தாயைப் போலவே அவரது வயிற்றுக்குள் வளரும் குழந்தையும் தூங்கி விழிக்கும் என்றாலும், உண்மையில் அதற்குத் தாயின் உறக்க விழிப்பு நேரத்துடன் எவ்வித தொடர்பும் இல்லை. தாய் உறங்குகையில் குழந்தை விழித்திருப்பதும், தாய் விழித்திருக்கையில் குழந்தை உறங்குவது என்று நிகழ்வதும் நடக்கும்.

ஆனால், தாய் நன்கு உறங்கும்போது அவர் உடலில் அதிகம் சுரக்கும் மெலடோனின் ஹார்மோன் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள், கரு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதுடன், கருச்சிதைவு, கர்ப்பகால இரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தடுக்கிறது என்பதால் தூக்கம் தாய்க்கு மிகவும் முக்கியம்!

நம்பிக்கை :

"கர்ப்பகாலத்தில் தூக்கமின்மைக்கு, ரெட் வைன் நன்கு உதவும்... குழந்தைக்கும் நல்லது."

உண்மை :

ரெட் வைன் மட்டுமல்ல, எந்தவொரு மதுபானமும் தாய்க்கும், சேய்க்கும் நன்மைகளைத் தருவதில்லை. மாறாகத் தாய்க்கு வயிற்று அழற்சி, செரிமானமின்மை, தலைவலி, போதைக்கு அடிமையாகும் நிலை ஆகியவற்றை ஏற்படுத்தும். மதுபானங்கள், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இன்னும் அதிக பாதிப்புகளையே ஏற்படுத்துகின்றன.

Fetal Alcohol Syndrome என அழைக்கப்படும் இந்த நிலையில், வளர்ச்சிக் குறைபாடுகள், அறிவுத்திறன் குறைபாடுகள், இருதய மற்றும் சிறுநீரக பாதிப்புகள், கண், காது பாதிப்புகள் போன்றவை காணப்படுகின்றன என்பதால், ரெட் வைன் உட்பட அனைத்து மதுபானங்களையும் கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டும்.

மாறாக, இரவில் தூக்கமின்றி தவிக்கும் கர்ப்பிணிகள் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். அவை:

தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துக் கொள்வது.

இரவில் கொழுப்பு, மசாலா, காரம் மிகுந்த உணவு வகைகள் மற்றும் காபி குளிர்பானங்களையும் தவிர்ப்பது.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு சிறிய வாக்கிங், சூடான பால், வெதுவெதுப்பான நீரில் குளியல்.

இவற்றைப் பின்பற்றினாலே போதும்... இரவு தூக்கம் தானாக வரும்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
SCROLL FOR NEXT