ஆட்சியரிடம் விருதுபெறும் மருத்துவர் இந்துமதி
ஆட்சியரிடம் விருதுபெறும் மருத்துவர் இந்துமதி 
பெண் சக்தி

சேவையில் சிறந்த மருத்துவர்

கரு.முத்து

அரசு பெண் மருத்துவர் ஒருவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறந்த சேவைக்கான விருதை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவனையில் குடும்ப நலத்துறையில் பணிபுரிகிறார் மருத்துவர் இந்துமதிவிஜய். நான்காண்டுகளாக இங்கு பணிபுரியும் அவர் மகப்பேறு பிரிவில் அர்ப்பணிப்போடு பணிபுரிந்து வருகிறார். தினம்தோறும் ஏராளமான ஏழைப்பெண்களுக்கு அங்கு பிரசவங்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் சுகப்பிரசவத்தையே ஊக்குவிக்கும் இந்துமதி தேவைப்படுகிறவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்தும் பிரசவங்கள் பார்க்கிறார்.பேறுகாலத்திற்கு பிறகான தொடர் கவனிப்புக்களையும், சிகிச்சைகளையும் அவர் சிறப்பாக செய்து வருகிறார். அதனால் அவருக்கு சிறப்பான சேவைக்கான விருது கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்டது.

அதேபோல அடுத்தாண்டு 2020 லும் சிறப்பான சேவைக்கான விருது அவருக்கே சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. இவ்விருதுகளால் ஊக்கம் பெற்ற மருத்துவர் இந்துமதிவிஜய் சாமானிய மக்களுக்கான மருத்துவசேவையில் இன்னும் கூடுதலாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அதன்விளைவாக இந்த ஆண்டும் சிறப்பான சேவையாற்றியதற்கான விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திர தினத்தன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் கே.பாலசுப்ரமணியம் அவருக்கு விருது வழங்கி பாராட்டினார்.

மக்களுக்கான பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறவர்கள் நிச்சயம் அடையாளம் காணப்படுவார்கள், அரசால் அங்கீகரிக்கப்படுவார்கள் என்பதற்கு சிறந்த சான்றாக விளங்குகிறார் இம்மருத்துவர்.

SCROLL FOR NEXT