புத்தக உண்டியலுடன்...
புத்தக உண்டியலுடன்...  
உணர்

இது காவல் நூலகம்!

என்.சுவாமிநாதன்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கிறது அந்த நூலகம். புறக்காவல் நிலையத்தை ஒட்டியிருக்கும் அந்த நூலகத்தை தொடங்கி நிர்வகிப்பது காவல் துறையினர்!

வள்ளியூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருக்கும் சாகுல் ஹமீதுதான், ’நமது நூலகம்’ என்ற இந்த நூலகத்தின் பிதாமகன். ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது என்னும் வாசகத்துக்கும் இதன்மூலம் உயிர்கொடுத்திருக்கிறார் சாகுல் ஹமீது.

நூலகத்தின் உள்ளே...

பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பலரும் இப்போது இந்த நூலகத்துக்குப் படையெடுக்கிறார்கள். வரலாறு, ஆன்மிகம், இலக்கியம், பொருளாதாரம் மட்டுமல்லாது போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் இங்கே அணிவகுக்கின்றன. பகுதிவாசிகளால் இது ‘போலீஸ் லைப்ரரி’ என்றே பெருமையோடு அடையாளப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வாளர் சாகுல்ஹமீது காமதேனுவிடம் கூறும்போது, “வாசிப்புப் பழக்கம் குற்றச்சம்பவங்களை குறைக்கும் என ஆழமாக நம்புபவன் நான். புத்தக வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் வகையில் புறக்காவல் நிலையத்தின் அருகிலேயே நூலகம் அமைக்க முடிவுசெய்தேன். இதற்காக வள்ளியூர் சுற்றுவட்டாரத்திலும் ஆங்காங்கே புத்தக உண்டியல் என்னும் பெயரில் ஒரு டப்பாவை வைத்தோம். வீட்டில் தாங்கள் படித்துவிட்டு வைத்திருக்கும் புத்தகங்களை மக்களே அதில்வந்து போட்டார்கள்.

இதேபோல் காவல்நிலையத்திலும்கூட புத்தக உண்டியல் வைத்திருந்தோம். இந்த நூலகத்திற்கு புத்தகம் வழங்க விரும்பினால் காவல் நிலையத்திற்கு போனில் அழைத்துச் சொல்லவும் நம்பர் வழங்கினோம். அப்படி பொதுமக்களிடம் இருந்து அழைப்புவரும்போது நானே அவர்களது வீட்டிற்குப்போய் புத்தகங்களை வாங்கிவந்தேன். நான் இல்லாதபோது சக காவலர்கள் மற்றவர்கள் வாங்கிவந்தனர் ’’ என்றார்.

இந்த நூலகத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும், சேரன்மகா தேவி சார் ஆட்சியர் சிவா கிருஷ்ணமூர்த்தி மட்டும் 500 புத்தகங்களை தன் பங்களிப்பாக வழங்கியிருக்கிறார். மொத்தமாக 4,500 புத்தகங்கள் இப்போது இந்த நூலகத்தில் இருக்கின்றன. நூலகத்துக்குள் 20 இருக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறது.

சாகுல் ஹமீது

தொடர்ந்து நம்மிடம்பேசிய ஆய்வாளர் சாகுல் ஹமீது, “இந்த நூலகத்திற்கான புத்தகங்களை பெறுவது, அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என முழுக்க 4 மாதங்கள் ஆனது. நூலகமாகத் திறந்ததும் அதன் வளர்ச்சியை மக்களே பார்த்துக்கொண்டார்கள். எங்கள் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்தான் இந்த நூலகத்தை திறந்துவைத்தார். இன்னும்கூட பலரும் புத்தகங்களை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நூலகத்தை அதிகம் பேர் பயன்படுத்திக் கொள்வது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

வாசிப்பை நேசிப்பவர்களின் வாழ்க்கை எப்போதுமே வசந்தமாகவே இருக்கும் என்பார்கள். அந்தவகையில் வாசிப்பை நேசிப்பதோடு, மற்றவர்களையும் நேசிக்கத்தூண்டும் ஆய்வாளர் சாகுல்ஹமீதை நாமும் பாராட்டுவோம்.

SCROLL FOR NEXT