தண்ணீர் தரும் தலைமை காவலர் மணிகண்ணன்
தண்ணீர் தரும் தலைமை காவலர் மணிகண்ணன்  
உணர்

`இங்கே வாங்க, தாகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள்'- தலைமை காவலரின் மனிதநேயம்

கரு.முத்து

கடலூரில் நெரிசல் மிக்க சாலைகளில் நல்ல வெயில் நேரத்தில் விரைந்து சென்று கொண்டிருக்கும் மக்கள் தங்களுக்கு கடும் வெயிலால் ஏற்பட்ட வறட்சியைப் போக்க தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் தயங்காமல் அங்கு பணியிலிருக்கும் போக்குவரத்துக் காவலர் மணிகண்ணனிடம் கேட்கலாம். அவரது இரு சக்கர வாகனத்தில் 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் தயாராக இருக்கிறது. அவரிடம் கேட்டும் குடிக்கலாம், அல்லது கேட்காமலும் குடிக்கலாம். மக்கள் குடிப்பதற்காகவே அது வைக்கப்பட்டிருக்கிறது.

நெடுஞ்சாலையில் கடும் வெயிலில், நெரிசலான போக்குவரத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்குவது என்பது இருபது ரூபாய் செலவு பிடிக்கக் கூடிய விஷயம். இப்போது உணவகங்கள் டீக்கடைகளில்கூட குடிநீர் வைப்பதில்லை. அனைத்தும் பாட்டில்கள் ஆகிவிட்டதால் அதற்காக தனியாக செலவு செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக கிடைப்பதை சாத்தியமாக்கி இருக்கிறார் தலைமைக் காவலர் மணிகண்ணன்.

காவல்துறையில் 25 ஆண்டுகள் பணி முடித்திருக்கும் மணிகண்ணன், கொஞ்சம் வித்தியாசமான மனிதர். லஞ்சம் தவிர் என்கிற வாசகத்தை தனது இருசக்கர வாகனத்தில் கம்பீரமாக பொறித்து வைத்திருக்கிறவர். போக்குவரத்து பிரிவுக்கு அவர் மாற்றலாகி வந்த பிறகு சாலைகளில் குடிநீருக்கு மக்கள் தவிக்கும் நிலை அவருக்கு உறுத்தியிருக்கிறது. அதனையடுத்தே இந்த மக்களுக்கு தண்ணீர் தந்தால் என்ன என்கிற எண்ணம் தோன்றி 2019 ம் ஆண்டு முதல் தொடங்கியும் விட்டார்.

தனது இருசக்கர வாகனத்தில் குடிநீர் கேனை வைத்து கட்டி, அருகில் எவர்சில்வர் தம்ளர்கள் வைத்திருக்கிறார். கடலூரில் மொத்தம் எட்டு இடங்களில் போக்குவரத்து காவலர்கள் பணி புரிவார்கள். அந்த நாளில் அதில் தனக்கு எந்த இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறதோ அந்த இடத்தில் இந்த இலவச குடிநீர் சேவையை வழங்குகிறார். இதற்காக காலையிலேயே இரண்டு கேன்களை எடுத்துக் கொண்டுபோய் அங்கு வைத்து விடுகிறார். மூன்றாவது கேனை தனது இருசக்கர வாகனத்தில் கட்டி எடுத்துச் சொல்கிறார்.

அவர் பணிபுரியும் இடத்திற்கு அருகில் சாலையின் ஓரமாக இந்த இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. தண்ணீர் தேவைப்படுபவர்கள் தானாகவே பிடித்து குடித்துக் கொள்ளலாம். தயங்கி நிற்பவர்களை தயங்காமல் சென்று குடிக்குமாறு அன்போடு சொல்கிறார்.

மணிகண்ணனின் மனைவி உமாமகேஸ்வரி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரிகிறார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். "நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் நான்கு கேன் ஆகிறது. அது ஒரு பெரிய செலவு இல்லை சார். நாங்க கோயிலுக்கெல்லாம் போக பணம் சேர்த்து வைத்திருப்போம். கரோனா ஆரம்பித்ததிலிருந்து கோயிலுக்கெல்லாம் போறது இல்லை. அந்த பணத்தை இதுக்கு செலவு செய்கிறோம்.

2020-ம் ஆண்டில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குடிநீர் கொடுக்க முடியவில்லை. அதற்கு பதிலாக மூலிகை குடிநீர் கொடுத்தோம். சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீரை காய்ச்சி அதில் புதினா, நெல்லிக்காய், இஞ்சி, எலுமிச்சை உள்ளிட்டவற்றை சேர்த்து ஆற வைத்து சிறிய பாட்டில்களில் அடைத்து அதை காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொடுத்தோம்.

இப்படி இலவச குடிநீர் கொடுப்பதற்கு எங்கள் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் தங்கள் பரிபூரண ஆதரவை வழங்குகிறார்கள். மனதார பாராட்டுகிறார்கள். இதனால் என்னுடைய வேலை பாதிக்கப்படுவதில்லை. பணியை ஒரு பக்கம் நான் பார்த்துக் கொண்டிருப்பேன். இன்னொரு பக்கம் குடிநீர் சேவை தானாகவே நடந்து கொண்டிருக்கும்" என்கிறார் மணிகண்ணன்.

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் மகராசன் இன்னும் பல காலத்திற்கு இந்த சேவையை தொடரட்டும். இவரைப் பார்த்து மேலும் ஒரு சிலராவது இந்த சேவையில் இறங்கட்டும்.

SCROLL FOR NEXT