சுஷ்மிதா உடலுக்கு இறுதிச் சடங்கு
சுஷ்மிதா உடலுக்கு இறுதிச் சடங்கு 
உணர்

இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்... 2 உயிர்களைப் பறிகொடுத்த நிலையிலும் நெகிழ வைத்த மனிதாபிமானம்!

காமதேனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவர், மகள் ஆகியோர் உயிரிழந்த நிலையில் இளம்பெண்ணின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானம் செய்துள்ள செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச்  சேர்ந்தவர் சுப்ரமணி (27). இவர் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு சுஷ்மிதா (26) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் சுப்பிரமணி, புதுக்கோட்டை பெரியார் நகரில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். கடந்த 10-ம் தேதி இரவு புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்று பங்கேற்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தனது வாகனத்தில் முன்னால் மகள் ஹரிணியை அமர்த்திக் கொண்டும், பின்னால் மனைவி சுஷ்மிதாவை அமரவைத்தும் சுப்பிரமணி ஓட்டிக்கொண்டு வீடு நோக்கி திரும்பிச்சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக  எதிரே வந்த ஆம்னி பேருந்து  ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.  இதில் சுப்ரமணி, ஹரிணி ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதில் சுஷ்மிதா பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுயநினைவின்றி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்  அவர் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்ததால் அவர் மூளைச் சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து  சுஷ்மிதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கல்லீரல், இருதயம், தோல், கார்னியா, சிறுநீரகம் உள்ளிட்டவைகள் மருத்துவர்கள் துணையோடு சுஷ்மிதாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு பாதுகாப்புடன் சென்னைக்கு விமானத்தில் அனுப்பப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உயிரிழந்த சுஷ்மிதாவின் சடலம் கணவரின் சொந்த ஊரான விராலிமலையில் அரசு மரியாதையுடன் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மூன்று உயிர்களை இழந்த நிலையிலும் உறவினர்கள் செய்த இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT