உணர்

மொத்த டீசல் கொள்முதல் விலை உயர்வால் சாமானியர்களும் பாதிக்கப்படுவார்கள்!

க.பொன்ராஜ்

மொத்தமாக டீசல் வாங்குபவர்களுக்கு லிட்டருக்கு 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசிடம் இருந்து டீசலை மொத்தமாக கொள்முதல் செய்வதை தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலையைக் கடைசியாக கடந்த நவம்பர் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. தினமும் விலையில் மாற்றம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டாலும் ஐந்து மாநிலத் தேர்தலை ஒட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக விலை உயர்த்தப்படவில்லை. கடைசியாக விலை உயர்ந்தபோது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 அமெரிக்க டாலர்களாக கூட இல்லை. ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் கச்சா எண்ணெய் விலை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் இல்லாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 138 டாலர்கள் வரை சென்றது. அந்த விலை ஏற்றத்தை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொண்டு விலையை அதிகரிக்கவில்லை. அதேசமயம், ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் வரை படிப்படியாக உயர்த்தப்படும் என கூறப்பட்டது.

ஆச்சரிமாக வாக்கு எண்ணிக்கை பல நாட்கள் ஆனபோதும் இதுவரை விலை உயர்வு ஏற்றப்படவில்லை. விலை உயர்வின் மூலம் மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கு பதிலாக வரியை குறைக்கலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. இந்த சூழலில், மொத்தமாக விற்கப்படும் டீசலின் விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே, தொழிற்சாலைகள், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைக்கு டீசல் பெரிய அளவில் தேவைப்படும். பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்குச் சென்று சில்லறை விலைக்கு வாங்கி வருவதை விட, பெட்ரோல் நிறுவனங்களிடம் மொத்தமாக ஆர்டர் செய்து இவர்கள் டீசலை வரவழைப்பார்கள். தற்போது விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்ந்து 122 ரூபாயாக மாறி உள்ளதால் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வால் இவர்களின் செலவு 27 விழுக்காடு அளவுக்கு கூடும் என்பதால் வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோரும் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

இந்த முடிவால் மத்திய அரசிடம் இருந்து மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. மாநிலம் முழுவதும் 21,700 அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், மத்திய அரசிடம் இருந்து சுமார் 16 ஆயிரம் லிட்டர் டீசலை தமிழக அரசு தினமும் கொள்முதல் செய்து வந்தது. தற்போது உயர்த்தப்பட்ட விலையில் டீசலை தொடர்ந்து வாங்கினால் தினமும் மூன்றரை கோடி ரூபாய் கூடுதலாக செலவிட வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் நிரப்பிக் கொள்ளுமாறு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் கூட்டத்தை தவிர்க்க, கூட்டமில்லா நேரத்தில் பேருந்துகள் சென்று பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் இந்த முடிவால் ஐஓசி பங்குகளில் டீசல் விரைவாக காலியாகும் என்றாலும், அதனை கையாள போதுமான இருப்பு உள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT