உணர்

ஒரு வயதை எட்டும் முன் 36 குழந்தைகளில் ஒன்று இறக்கிறது: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

காமதேனு

கடந்த 50 ஆண்டுகளில் குழந்தை இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்துள்ள போதிலும், தற்போதும் இந்தியாவில் ஒவ்வொரு 36 குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவதாக அறிக்கை வெளிவந்துள்ளது.

குழந்தை இறப்பு விகிதம் (IMR) என்பது ஒரு வருடத்தில் ஒவ்வொரு ஆயிரம் பிறப்புகளில் எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்பதனை வரையறுக்கிறது. இது குறித்து இந்தியப் பதிவாளர் ஆணையத்தால் வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, 1971-ல் ஆயிரம் பிறப்புகளுக்கு 129 குழந்தை இறப்புகள் பதிவானதாகவும், தற்போது ஆயிரம் பிறப்புக்கு 28 குழந்தை இறப்புகள் பதிவாகின்றன என்று தெரிவித்துள்ளது, இது அப்போதைய நிலையை விட நான்கில் ஒரு பங்கு குறைவாகும்.

கடந்த 10 ஆண்டுகளில், குழந்தை இறப்பு விகிதம் சுமார் 36 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. அகில இந்திய அளவில் குழந்தை இறப்பு விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 44-லிருந்து 28 ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் இந்த சரிவு 48-லிருந்து 31 ஆகவும், நகர்ப்புறங்களில் இது 29-லிருந்து 19 ஆகவும் குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், தற்போதும்கூட தேசிய அளவில் (கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம்) ஒவ்வொரு 36 குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் இறப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டில், அதிகபட்ச குழந்தை இறப்பு விகிதம் மத்தியப் பிரதேசத்தில் 43 ஆகவும், குறைந்தபட்சமாக மிசோரத்தில் 3 ஆகவும் பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT