இண்டிகோ விமானம் 
பயணம்

இதென்ன நகரப்பேருந்தா? - நின்றபடியே பயணித்தவரால் பரபரப்பு; டெர்மினலுக்கே திரும்பிய இண்டிகோ விமானம்!

எஸ்.சுமன்

மும்பையிலிருந்து கிளம்ப யத்தனித்த விமானம் ஒன்று, அதில் நின்றபடி பயணித்தவரால் மீண்டும் டெர்மினலுக்கே திரும்பியது.

விமான பயணம் என்பது சாதாரணமாகி வரும்போது, அதில் விசித்திரங்கள் பலவும் அரங்கேறி வருகின்றன. அப்படியான விசித்திரம் ஒன்றுக்கு, இன்று காலை மும்பையிலிருந்து வாராணசிக்கு கிளம்பிய இண்டிகோ விமானம் ஆளானது. விமானம் தனது பறத்தலுக்கு முந்தைய ஓடுதள பாதை பயணத்தை எட்ட இருந்தபோது, விமானத்தின் கடைசி இருக்கையருகே பயணி ஒருவர் நின்றபடி பயணிப்பதை விமான சிப்பந்தி ஒருவர் கண்டறிந்தார்.

விமானப் பயணம்

அவர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, இண்டிகோ விமானம் தனது பறத்தல் முயற்சியை கைவிட்டு மீண்டும் டெர்மினலுக்கே திரும்பியது. நின்றபடி பயணித்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் தவறு வெளிப்பட்டது.

விமான சேவை நிறுவனங்கள், தங்கள் பயணியர் விமானங்கள் காலி இருக்கைகளுடன் பறப்பதை தவிர்க்க சில நேரங்களில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்கும்.

போதிய எண்ணிக்கையில் பயணிகள் திரளாதது, கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்யும் பயணிகள் உள்ளிட்ட காரணங்களினால் பொதுவாக, இந்த கூடுதலாக விற்பனையாகும் டிக்கெட்டுகளால் பிரச்சினைகள் எழுவதில்லை. ஆனால் மும்பையிலிருந்து வாராணசிக்கு இன்று காலை கிளம்பிய இண்டிகோ விமானத்தில், அதன் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்தது. பயணிகளில் ஒருவர் தனக்கான இருக்கை கிடைக்காததில், விமானத்தின் கடைசி வரிசையில் நின்றபடி தத்தளித்துக்கொண்டிருந்தார்.

இண்டிகோ விமானம்

கிட்டத்தட்ட நகரப் பேருந்து போல அந்த இண்டிகோ விமானம், நின்றபடி பயணிப்பவருடன் வானில் பறக்க இருந்தது. விமான நிலையத்தின் டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்கான ’டாக்ஸிங்’ எனப்படும் ஊர்ந்து செல்லும் பயண நேரத்தில், கூடுதல் பயணியை விமான சிப்பந்தி கண்டுகொண்டார்.

இதனால் மீண்டும் டெர்மினலுக்கு திரும்பிய இண்டிகோ விமானம், ஒற்றைப் பயணியை இறக்கிவிட்டு, மீண்டும் ஒருமுறை வழக்கமான சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னரே கிளம்பியது. இதனால் சுமார் ஒரு மணி நேர தாமதத்துக்குப் பின்னரே அந்த விமானம் வாராணசிக்கு கிளம்பியது.

SCROLL FOR NEXT