மாநிலம்

மின்தடையால் தமிழகம் திடீரென இருளில் மூழ்கியது ஏன்?- அமைச்சர் விளக்கம்

காமதேனு

தமிழகத்தில் நேற்றிரவு திடீரென மின் தடை ஏற்பட்டது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடுகளின் மொட்டை மாடிகளில் மக்கள் தூங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், குழந்தைகள் மிகவும் சிரமத்தை சந்தித்ததோடு, தங்கள் தூக்கத்தை தொலைத்தனர். இந்த திடீர் மின்தடைக்கு என்ன காரணம் என்பது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT