மாநிலம்

200%, 500% என்று உயர்த்தியது யார்?- பிரதமருக்கு தமிழக நிதியமைச்சர் பதிலடி

காமதேனு

"8 ஆண்டுகளில் எரிபொருள்கள் மீதான கலால் வரியை 200 சதவீதம் முதல் 500 சதவீதம் வரை உயர்த்தியது யார்?" என்று என்று பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் அடம்பிடிப்பதால், மக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதாகவும் விமர்சித்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி விகிதங்களை பட்டியலிட்டுள்ளார்.

இந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி சுமார் 200 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 500 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் உயர்த்தப்பட்ட கலால் வரி விகிதத்தை 2014-ம் ஆண்டில் இருந்ததுபோல பிரதமர் குறைக்க வேண்டும் என்றும் தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT