மாநிலம்

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

காமதேனு

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது, பல முக்கிய கோரிக்கைகளை முதல்வர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

4 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைநகர் டெல்லி சென்றுள்ளார். வரும் 2-ம் தேதி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்கிறார். இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சில நிமிடங்களே நடந்தது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் மோடியை முதல்வர் சந்தித்து பேசினார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, முக்கியமாக இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் வழியாக உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தான கடல் பயணத்தில் பச்சிளங் குழந்தைகளுடன் இலங்கைத் தமிழர்கள் 16 பேர் தமிழகம் வந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் மேலும் தமிழகம் வர வாய்ப்பிருக்கும் நிலையில், தமிழக அரசு உதவ முடிவு செய்துள்ளது.

மேலும், தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும் என்றும் மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியையும் தாமதம் இல்லாமல் தர வேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. நிலுவை தொகையையும் உடனே விடுவிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் டெல்டா விவசாயத்தை பாதிக்கும் வகையில் மேகேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது பற்றியும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற முதல்வர், கர்நாடகாவின் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். அதுபோல கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து செல்வது பற்றியும் பிரதமரிடம் விளக்கி கூறியதோடு, தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதை பற்றியும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தனது கோரிக்கைகள் அனைத்தையும் மனுவாக பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

SCROLL FOR NEXT