சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்  hindu
மாநிலம்

நீர்நிலை இடங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது!

காமதேனு

‘ஆக்கிரமிப்புகளை தடுக்க நீர்நிலை தொடர்பான இடங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது’ என்றும் ‘பத்திரப்பதிவு செய்வதற்கு முன், ஆக்கிரமிப்பு இடமில்லை என சான்று பெறுவது கட்டாயம்’ என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 47 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதேபோல நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், அகற்றவும் வருவாய்த் துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் விதமாக சட்டத்திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்ல ஆக்கிரமிப்பாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டத்தில் பிரிவுகள் சேர்க்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தெரிவிக்க நேரிடும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது அதிகாரிகளின் கடமை. ஒருவேளை அகற்றப்பட்ட நீர்நிலைகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், “ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத் துறையினர் நீர்நிலைகள் தொடர்பான இடங்களை எந்தப் பதிவும் செய்யக்கூடாது. ஆக்கிரமிப்பு இல்லை என்ற சான்று பெற்றால் மட்டுமே சொத்து வரி, மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். பத்திரப்பதிவு கோரும் கட்டிடங்கள் நீர்நிலையில் இல்லை என ஆய்வு செய்து உறுதிசெய்ய வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு ஒப்புதல் அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தால் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT