மாநிலம்

`இதுதான் ஸ்டாலின் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா?'

காமதேனு

விருதுநகரில் இளம்பெணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் மீது கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல், திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "இதுதான் ஸ்டாலின் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா?" என வினா எழுப்பியுள்ளார்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பிய மேலத்தெருவை சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த செந்தில் விநாயகம் தெருவைச் சேர்ந்த ரைஸ் மில்உரிமையாளர் மகனும், திமுகஇளைஞரணி வார்டு அமைப்பாளருமான ஜூனத் அகமது (27), முத்தால் நகரைச் சேர்ந்த மாடசாமி, ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன் ஆகியோரை பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், இதேபோல் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 8 பேரும் வில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில், "விருதுநகரில் இளம்பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு பெருவருத்தம் அடைந்தேன். கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல், திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது. இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT