அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
மாநிலம்

இலங்கைக்கு முதல் கட்டமாக ரூ.8 கோடி மதிப்பில் மருந்துப் பொருட்கள்!

காமதேனு

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு முதல்கட்டமாக 8 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு மருத்துவம், உணவு, அத்தியாவசியப் பொருட்களின் தேவைக்குத் தமிழகம் நேசக்கரம் நீட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்கான மருந்துப் பொருட்களை பண்டல் போடும் பணி, சென்னை அண்ணா நகரில் உள்ள மருந்து குடோனில் நடைபெற்றுவருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பால் பவுடர், அரிசி மற்றும் 28 கோடி ரூபாய்க்கான மருந்துப் பொருட்களை வழங்குவதற்கான ஆணைகள் பெறப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அதற்கான பணிகளைச் செய்துவருகிறது. அறுவை சிகிச்சைப் பொருட்கள், சிறப்பு மருந்துகள், 137 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றை இதில் வழங்க உள்ளோம். இதில் முதல் தவணையாக 8 கோடியே 87 லட்சத்து 90 ஆயிரத்து 593 ரூபாய் மதிப்பில் மருந்துப் பொருட்களை வழங்கத் தயாராக உள்ளோம். மீதமுள்ள மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, இரண்டாம் தவணையாக வழங்கப்படும்.

தற்போது தமிழகம் இலங்கைக்கு வழங்கும் 55 வகையான மருந்துகளில் 7 குளிர்சாதன வசதியிலும், மற்றவை சாதாரண முறையிலும் கொண்டு செல்லக் கூடியவை. பேக்கிங் செய்து முடிக்கப்பட்டுவிட்டதால் இவை விரைவில் அனுப்பிவைக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT