மாநிலம்

`தவறு செய்தவர்கள் தொழிலே செய்ய முடியாது'- கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் அமைச்சர் அதிரடி

காமதேனு

"திருப்புதல் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலுக்குரிய முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்படும்" என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கோட்டூர்புரதில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், இன்றும் நாளையும் நடைபெறும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கூட்டத்தில் அமைச்சருடன், கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உட்பட கல்வி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள், திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 12-ம் வகுப்பில் 8,37,317 மாணவர்களும், 10-ம் வகுப்பில் 9,55,474 மாணவர்களும், 11-ம் வகுப்பில் 8,83,884 மாணவர்கள் என மொத்தம் 26,76,675 மாணவர்கள் மே மாதம் பொதுத்தேர்வுகளை எழுதவுள்ளனர். கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தொழில் செய்ய முடியாதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வித்தாள்களை அச்சிட்டவர்கள் தரப்பில் இருந்து வெளியாகியிருக்கலாம் எனவும் தகவல் உள்ளது. அது குறித்தும் விசாரித்து வருவதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுப்போம்.

தமிழகத்தில் பாழடைந்த பள்ளிக்கட்டிடங்களில் ஏற்கெனவே 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீதம் இருக்கக்கூடிய கட்டிடங்களும் இடிக்கப்படும். அந்த பள்ளி வளாகங்களில் பயின்று வந்த மாணவர்கள் அருகாமையிலுள்ள வாடகை கட்டிடங்களில் அவர்கள் கல்வி பயில்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு தயாராக அரப்பள்ளி மாணவர்களுக்கு Hi Tech lab வாயிலாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாநில புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அதற்குரிய குழு அமைக்கப்படும்.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை டெல்லி துணை முதல்வர் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் முன்னெடுத்து வரும் திட்டங்களுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வரவேற்புகள் குவிந்து வருகின்றன. டெல்லி மாநிலத்தில் 1100 பள்ளிகளே உள்ளது. நம்மிடம் 38,000 பள்ளிகள் உள்ளது. அப்படியே அங்கிருப்பதை கொண்டு வந்துவிடமுடியாது. நல்ல திட்டங்களை ஏற்றுக்கொள்வோம்.

தேர்வு நேரத்தில் 3,500 பறக்கும் படைகள் அமைக்கப்படவுள்ளன. மாணவர்களை பரிசோதிக்கிறோம் என்ற வகையில் மாணவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம். அமைச்சராக பதவி ஏற்றதன் பின் நடைபெறும் முதல் பொதுத் தேர்வு இது. பொதுத்தேர்வு என்பது எனக்கு பொதுத் தேர்தலுக்கு சமம். பொதுத்தேர்வை பொறுத்தவரையில் எந்தவித சச்சரவுகளுக்கும் இடமின்றி பொதுத்தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT