மாநிலம்

’பேச்சுவார்த்தைக்குக்கூட அழைக்கவில்லை’ - உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்ற அரசு மருத்துவர்கள்!

காமதேனு

ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இருவரும், இறந்துபோன அரசு மருத்துவரின் மனைவியும் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

பெருமாள் பிள்ளை

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சட்டப் போராட்டக் குழுத் தலைவர் பெருமாள்பிள்ளை காமதேனு இணையத்திடம் கூறுகையில், “அரசு மருத்துவர்களுக்குத் தகுதிக்கேற்ற ஊதியம் தர தமிழ்நாடு அரசு 2009-ம் ஆண்டு அரசாணை எண் 354 வெளியிட்டது. தான் போட்ட அரசாணையைத் தானே பத்தாண்டுகளாகியும் முழுமையாக நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இருந்ததால், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் "அரசாணை 354-ன்படி ஊதியக்கோரிக்கை 6 வாரத்தில் நிறைவேற்றப்படும்" என்ற வாக்குறுதியை எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு அரசு கொடுத்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், போராடிய மருத்துவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாக, பலநூறு கிலோமீட்டர் தொலைவில் பணியிடமாற்றம் செய்து அரசு மருத்துவர்களைப் பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியது தமிழ்நாடு அரசு.

இந்த சூழலில் கடந்த 29-ம் தேதி முதல், பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நானும், அரசு மருத்துவர் நளினி மற்றும் கரோனா பணியில் இறந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யா ஆகிய மூவரும் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டோம். அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354யின்படி, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மேட்டூரில் மருத்துவர் லட்சுமிநரசிம்மன் கல்லறையின் முன்பாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்திவந்தோம்.

போராட்டத்தின் நான்காம் நாளான இன்று காவல் துறையினர் வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எங்களை அனுப்பிவைத்தனர். அங்கு எங்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தமிழக அரசு இதுவரை குறைந்தபட்ச பேச்சுவார்த்தைக்குக்கூட அழைக்கவில்லை என்பது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மீது உள்ள நம்பிக்கையிலும், அனைத்து கட்சி தலைவர்கள், மாவட்ட ஆட்சியர், சேலம் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் சக மருத்துவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறோம்.

இருப்பினும் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். அதேநேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வோம். முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்த நொடியிலும் நம்புகிறோம்.”என்றார்.

SCROLL FOR NEXT