ஆண்டாள் கோயில் 
மாநிலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொடி மரங்கள், சிலைகள் மாயம்... பரபரப்பு புகார்!

காமதேனு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பழமையான கொடி மரங்கள் மற்றும் கற்சிலைகளை காணவில்லை என கோயில் நிர்வாக அதிகாரி புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டாள் கோயில்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது ஆண்டாள் - ரெங்கமன்னார் ஆலயம். 108 திவ்வியதேசங்களில் ஒன்றாகவும், ஆண்டாள் தாயார் அவதரித்த தலமாகவும் இந்த கோயில் விளங்குகிறது. அதோடு, தமிழ்நாடு அரசின் சின்னமாகவும், இந்த ஆலயத்தின் கோபுரம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிப்பூர விழாவும், மார்கழி உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெறும்.

இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, கோயில் பராமரிப்பு பணிகள், மேற்கொள்ளப்பட்டு பழைய கொடிமரங்கள் அகற்றப்பட்டு, புதிய கொடிமரங்கள் அமைக்கப்பட்டன. பழைய கொடிமரங்கள் கோயிலுக்கு உள்ளேயே வைக்கப்பட்டது.

ஆண்டாள் கோயில்

இந்நிலையில், அகற்றப்பட்ட பழைய கொடி மரங்கள் மற்றும் இரண்டு யானை சிலைகள் மாயமானதாகக் கோயில் நிர்வாக அலுவலர் ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ஆண்டாள் கோயிலில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது, 3 கொடி மரங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. பழைய கொடி மரங்கள் கோயில் உள்ளேயே வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அதில் 2 கொடி மரங்கள் தற்போது மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதோடு, கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தின் வாயிலில் இருந்த இரண்டு யானை சிலைகளும் மாயமாகியுள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டாள் கோயில் கொடிமரம்

மேலும், இவற்றைக் கடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, காணாமல் போன கொடிமரம் மற்றும் சிலைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், காணாமல் போன 2 கொடி மரங்கள் கோயிலுக்கு வெள்ளை அடிக்கும் பணிக்காக வந்த ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் மாரிமுத்து ஆகிய இருவரும் லாரி மூலம் வெளியே எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் கடத்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT