மாநிலம்

ஆர்ஜே சித்ரா தற்கொலையில் அதிமுகவினருக்கு தொடர்பா?- ஜெயக்குமார் பதில்

ரஜினி

நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 6-வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "கிழக்கு கடற்கரை சாலை என்பது அழகான பெயர், காஷ்மீரில் இருக்கக்கூடியவர்களை கேட்டால் கூட தெரியும். இந்த பரீட்சையமான சாலைக்கு பெயர் மாற்றி இருப்பதை பொதுமக்களே விரும்ப மாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றம் செய்து விடுவார்கள்.

ஓபிஎஸ்சின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப் ஆன்மிக அடிப்படையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அரசியல் தொடர்பு இல்லை என அவரே மறுத்துவிட்டார். சமூக வலைதளங்களில் வந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். தற்பொழுது தமிழகத்தின் நிழல் முதல்வராக மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் இருந்து வருகின்றனர். உதயநிதிக்கு பெரிய பதவியை வழங்குவதற்காக அவரை முன்னிலைப்படுத்தும் விதமாக முன்னேற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர்.

திமுக அமைச்சர்களிடம் மரியாதையை எதிர்ப்பார்க்க முடியாது. திமுக ஜமீன்தார் அரசியல் நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு சட்டம், ஒழுங்கு பிரச்சினை. விலைவாசி உயர்வு என பொதுமக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதன் வெளிப்பாடு இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான். மும்மொழி கொள்கையை மறைமுகமாக திமுக ஆதரித்து வருகிறது. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பச்சோந்தி போல கொள்கையை திமுக மாற்றி வருகிறது.

மாணவர்கள் மோதல், ஆசிரியர்கள் மிரட்டப்படுதல், உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து இருக்கிறது. ஆரம்பத்திலேயே பள்ளிக்கல்வித்துறை தடுத்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. இலங்கை தமிழர்கள் 1.5 லட்சம் பேர் படுகொலைக்கு காரணமான திமுக அரசு தற்போது நிவாரண பொருட்கள் அனுப்பி வேஷமிடுகிறது. அதை பொதுமக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள்" என்றார்.

சின்னத்திரை நடிகை ஆர்ஜே சித்ரா தற்கொலை வழக்கில் அதிமுகவினருக்கு தொடர்பிருப்பதாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், உரிய விசாரணை நடத்தி யாராக இருந்தாலும் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

SCROLL FOR NEXT