இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்து செல்லும் உறவினர்கள்  
மாநிலம்

இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்! திமுக ஊராட்சி மன்ற தலைவர் அலட்சியம்!

காமதேனு

சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, சுமந்து சென்று அடக்கம் செய்த அவலம் திண்டுக்கல் அருகே நடந்துள்ளது. 

திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடி கிராமம், செட்டியபட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் எவரேனும்  இறந்து விட்டால் அவர்களை அங்குள்ள சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகை ஓரமுள்ள  இடுகாட்டில்  அடக்கம் செய்வது வழக்கம்.

இடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை என்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வழியில் நீரோடை குறுக்கிடுவதால் அதில் இறங்கியே உடலை சுமந்து செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. 

சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைத்துத் தருமாறு தற்போதுள்ள திமுக ஊராட்சி மன்ற தலைவர் மாதவி காமராஜ் மற்றும் இதற்கு முன் இருந்த பல ஊராட்சி தலைவர்களிடமும் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த அழகம்மாள் என்பவர் நேற்று மரணம் அடைந்தார். அழகம்மாளை அடக்கம் செய்வதற்காக, சடலத்தை எடுத்துச் சென்ற அவரது. உறவினர்கள் சந்தனவர்தினி ஆற்றுப் படுகையில் உள்ள குளத்தில்  இடுப்பளவு தண்ணீரில் அழகம்மாளின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

சுடுகாட்டிற்கு உடலைக் கொண்டு செல்ல முடியாத நிலையை மாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT