மாநிலம்

தமிழகத்தில் வேகமாக பரவும் விஷக்காய்ச்சல்

காமதேனு

தமிழகம்  முழுவதும்  மக்களுக்கு உடல் வலியுடன் கூடிய கடுமையான காய்ச்சல்  வேகமாக பரவி வருவதால் மக்கள் கடும்  அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடம்  வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பள்ளியில்  மற்ற  சிறுவர்களிடமிருந்து இந்த காய்ச்சல் பரவுகிறது. அது அவர்கள் மூலமாக  குடும்பத்தில் உள்ள  பெரியவர்களுக்கும் பரவி குடும்பத்தினர்  அனைவருக்கும் காய்ச்சல் தொற்றி  விடுகிறது. 

இந்த காய்ச்சல்  உள்ளவர்களுக்கு மார்புப்பகுதி உட்பட உடல் முழுவதும் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.  குறைந்தது இரண்டு தினங்களுக்கு மிக கடுமையான காய்ச்சல் இருக்கிறது.  சிலருக்கு இருமலும் சேர்ந்து கொள்கிறது. இதனால் அவர்கள்  ஒரு வாரத்திற்கு தங்களின் இயல்பு வாழ்க்கையை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

பொதுவாக  வடகிழக்கு பருவமழை  தொடங்கியபின் தான் இவ்வகை திடீர் காய்ச்சல் அதிகரிக்கும்.  ஆனால், இம்முறை  வெப்பச்சலன மழை தொடர்ந்து பெய்ததால் வழக்கத்துக்கு முன்னதாகவே இந்த காய்ச்சல் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதன் பரவல் மிக அதிகமாக உள்ளதால்  மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக  அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒருவகை ஃபுளூ வைரஸ் காய்ச்சல் என்று சொல்லும் மருத்துவர்கள்,   குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளூ காய்ச்சல்’ ஏற்படுகிறது என்கிறார்கள்.

தற்போது பரவும்  இந்த காய்ச்சல் சில நாட்களில் குணமாகிவிடும் என்றாலும், குழந்தைகளுக்கு அதிக அளவில் உபாதையை அளிக்கிறது. ஏற்கெனவே காய்ச்சல் பாதித்தவர்களின்  மூச்சுக்காற்றில் கலந்திருக்கும் சளித் துளிகள் காற்றில் பரவி, அடுத்தவருக்கு காய்ச்சல் தொற்றுகிறது.  எச்சில் (அ) சளியை தொட நேர்வதாலும் இது தொற்றலாம். சுத்தமாக கை கழுவுவது, முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்  இதை தடுக்கலாம்.  காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

கடுமையான பாதிப்பை உண்டாக்கும் இந்த காய்ச்சலை  தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை    எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

SCROLL FOR NEXT