சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 
மாநிலம்

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி மனு!

வ.வைரப்பெருமாள்

சவுக்கு சங்கர் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, உயர் நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் ஆசிரியர் பிளிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது பல்வேறு புகார்கள் தொடர்பாக அவர் மீது அடுத்தடுத்து ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சவுக்கு சங்கர் வழக்கு

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து அவரது தாயார் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில், சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிபதி பாலாஜி மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது. முன்னதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும்போது, சவுக்கு சங்கர் வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என கூறி, தன்னை அதிகாரமிக்க நபர்கள் சந்தித்து கூறியதாக தெரிவித்திருந்தார்.

சிபிஐ விசாரணை

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளித்துள்ளார். இதன் காரணமாக சவுக்கு சங்கர் வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT