கனமழை 
மாநிலம்

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்... மிகக் கனமழை கொட்டும் என அறிவிப்பு!

கவிதா குமார்

வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மிகக்கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (மே 23) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக, அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 24) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், மே 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை (மே 24) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும்.

சூறைக்காற்று

அதன்பிறகு, மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ந் தேதி மாலை நிலவும். இதன் காரணமாக, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மே 26-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு - மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்,

அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மே 25-ம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT