மாநிலம்

'இன்னும் 4 வருஷமல்ல அதுக்கப்புறமும் நாமதான்!'

காமதேனு

" ஆட்சி இன்னும் 4 வருஷம் இருக்கிறது. இந்த 4 வருஷம் மட்டுமல்ல. அதுக்குப்புறமும் நாமத்தான் வரப்போகிறோம். எனவே, உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று அவர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், " திறந்த நிலை பல்கலைக்கழகத்திற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதைத் தொடர யுஜிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு பொறியியல் பட்டம் பயில்வதற்கான திட்டம் உருவாக்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "மணப்பாறை, செஞ்சி, அரவக்குறிச்சி, திருமயம், ஸ்ரீபெரும்புதூர், தளி, அந்தியூர், திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும். 41 உறுப்புக்கல்லூரிகள் விரைவில் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.50 கோடி மதிப்பில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறுவர். ஆட்சி இன்னும் 4 வருஷம் இருக்கிறது. இந்த 4 வருஷம் மட்டுமல்ல. அதுக்குப்புறமும் நாமத்தான் வரப்போகிறோம். எனவே, உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT