மாநிலம்

ஆளுநருக்கு எதிராக சட்டம்: வரவேற்கும் கமல்!

காமதேனு

துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமசோதாவை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. பொது பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த மசோதாவை மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்த போதே தமிழகம் இதனை முதலில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நம் அறிக்கையை ஏற்று செயல்பட்ட அரசுக்கு நன்றி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த டுவிட்டர் பதிவுடன் 30.12.2021 அன்று கவர்னரின் அதிகாரத்தை திமுக அரசு மறுவரையறை செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் கேரளா மற்றும் மராட்டியத்தை மேற்கோள்காட்டி வெளியிட்ட அறிக்கையையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT