மாநிலம்

மலக்குழி மரணங்களைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டதா?

கவிதா குமார்

அன்றாடம் தொலைக்காட்சிகளில் எல்லோர் பார்வையில் இருந்தும் தப்பிக்க முடியாத ஒரு விளம்பரம் எது தெரியுமா? " உங்கள் கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா?" என்று ஒரு பிரபல நடிகர் கேட்கும் விளம்பரம் தான் அது. கழிப்பறை சுத்தம் குறித்து கவலைப்படும் இந்த விளம்பர சமூகத்தில் தான், அந்த கழிப்பறை கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலை கொள்ளவில்லையென்ற எதார்த்த நிலையும் உள்ளது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் விஷவாயு தாக்கி நேற்று மூன்று மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, " மாநகராட்சி ஆணையருக்கோ, பொறியாளருக்கோ தகவல் தெரிவிக்காமல் தனியார் நிறுவனம் இரவில் ஆட்களை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. மாநகராட்சிக்கு தெரிந்து இருந்தால் இந்தத் தவறு நடந்து இருக்காது’" என்று பதில் அளித்துள்ளார்.

இது போன்ற ஒவ்வொரு உயிரிழப்பிற்குப் பின்னும், தெரிந்திருந்தால் தவறு நடந்திருக்காது என்ற பதில்கள் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. புறக்கழிப்பறை மற்றும் தண்ணீர் இல்லாத கழிப்பறைப் பயன்பாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று 1993-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த சட்டத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என்று இந்தியா முழுவதும் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டத்தால் 2013-ம் ஆண்டு இந்த சட்டம் திருத்தப்பட்டது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றக்கூடாது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டும். அந்தப் பணியிலிருந்து அவர்களை வேறு பணிக்கு மாற்ற வேண்டும் என அந்த சட்டம் வலியுறுத்தியது. ஆனால், இன்று வரை அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லையென்பது தான் துயரமான உண்மை.

இந்தியா முழுவதும் மலம் அள்ளும் பணியிலோ, செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போதே நடக்கும் உயிரிழப்புகள் குறித்த தேசிய அளவிலான முழுமையான புள்ளி விபரங்கள் இல்லையென்றே சொல்லலாம். ஏனெனில், பல இடங்களில் மலக்குழி மரணங்கள் தொடர்பான வழக்குகள் கூட பதிவு செய்யப்படுவதில்லை. ஆனாலும், மூன்று ஆண்டுகளில் 161 பேர் உயிரிழந்ததாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலைத் தெரிவித்தார். 2019-ம் ஆண்டு 118 பேர், 2020- ம் ஆண்டு 19 பேர், 2021-ம் ஆண்டு 24 பேர் இறந்ததாகவும், 1993-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 971 பேர் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்துள்ளதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஒரு புள்ளி விபரத்தைத் தெரிவித்துள்ளார். இதில் ஐந்தாண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் 52 பேர், தமிழகத்தில் 43 பேர், டெல்லியில் 36 பேர் என 340 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் பிரதமராக மோடி முதல் முறையாக பொறுப்பேற்ற போது காந்தி ஜெயந்தியன்று தூய்மை இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்தார். பொதுக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில்வே நிலையங்கள், பெருந்து நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். இதன் மூலம் குப்பை இல்லாத நாடு என்ற பரப்புரையை அவர் துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக 2021 அக்டோபர் 1-ம் தேதி தூய்மை இந்தியா திட்டம் 2.0 என்ற திட்டத்தை மோடி துவக்கி வைத்தார். குப்பை இல்லா இந்தியாவில் மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை இல்லை என்ற கொள்கை முழக்கமோ, திட்டமோ அவரிடமோ, மத்திய அரசிடமோ இல்லை. இந்திய அளவில் மிகப்பெரிய துறையான ரயில்வேயில், மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இன்னும் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாற்றுப்பணியோ, அவர்களைக் காக்கத் திட்டமோ தூய்மை இந்தியா திட்டத்தில் தீட்டப்படவில்லை.

எந்த ஓர் உள்ளூர் அதிகாரியோ வேறு எந்த நபரோ, செப்டிக் டேங்க் அல்லது சாக்கடையில் அபாயகரமான சுத்தம் செய்யும் பணிக்காக எந்த நபரையும் நியமிக்கக் கூடாது என்று 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் சொல்கிறது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்த அபாயகரமான பணியில் ஈடுபட்ட 340 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு அதிகாரி கூட தண்டிக்கப்படவில்லை. காரணம், இப்பணிகள் அனைத்தும் அரசுத்துறையில் இருந்து ஒப்பந்தமுறையில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது தான் காரணம்.

பாதாளச்சாக்கடை மற்றும், கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளில் வேண்டப்பட்ட கட்சிக்காரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கும் முறை தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிறது. இதன் காரணமாக ஒப்பந்த கம்பெனியினர் மீது வழக்குப்பதிவு, அபராதத்துடன் மலக்குழி மரண வழக்குகள் புதைந்து போகின்றன. மலக்குழிக்குள் மனிதன் இறங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது. ஆனாலும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னும் மலக்குழி மரணங்கள் தொடர்கின்றன. கடந்த வாரம் சென்னையில் மூன்று பேர் விஷவாயு தாக்கி இறந்தனர். இந்த வாரம் மதுரையில் மூவர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.

கு,ஜக்கையன்.

இதுகுறித்து ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையனிடம் பேசிய போது, " 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்திலேயே நிறைய குறைபாடுகள் உள்ளன. இதில் தவறு செய்தவர்களுக்கு மூன்று முறை தப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விஷவாயு தாக்கி இறந்தார்கள் என்ற வழக்குகளில் கைது நடவடிக்கை இருப்பதில்லை. இப்படியான மரணங்களில் வழக்குப்பதிவதே அபூர்வமானது. அப்படி வழக்குப்பதிவு செய்தால் கூட அபராதம் கட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். எனவே, இதை தண்டனைக்குரிய சட்டமாக்க வேண்டும். அப்படி செய்தால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும். ஆனால், அப்படி இந்த சட்டம் இல்லை என்பதே எதார்த்தம். எஸ்.சி, எஸ்.டி வழக்கின் போது வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழஙகியதைப் போல தூய்மைப்பணியாளர்களுக்கும் அரசே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால், அப்படி இழப்பீடு வழங்கப்படுவதில்லை. திருச்சியில் நடைபெற்ற திமுக தேர்தல் மாநாட்டில், மனிதக்கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை தடை செய்வோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையிலும் செல்லப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஓராண்டில் அதற்கான முதல் கட்டப்பணி நடைபெறவில்லை. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மலக்குழி அடைப்பை சரி செய்யும் இயந்திரம் வாங்க நிதி ஒதுக்கவில்லை. கும்பகோணம், சேப்பாக்கம், கோவை ஆகியவற்றில் கூட மக்கள் தொகைக்கு ஏற்பட இயந்திரம் வாங்கவில்லை" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " 'இவங்க செய்யலைன்னா யாரு தான் இந்த பணியை செய்யுவாங்க' என்ற பெரும்பான்மை மக்களிடம் இருக்கும் சாதிய மனநிலை தான், தூய்மை பணியாளர்கள் மரணங்களை மிக சாதாரணமாகி விட்டது. வடமாநிலங்களைப் போல தமிழகத்தில் இப்பணியில் உள்ள தொழிலாளர்களிடம் ஒற்றுமை இல்லாதது அவர்களின் கோரிக்கைளை வென்றெடுப்பதில் முட்டுக்கட்டையாக உள்ளது. அது அரசுக்கும் சாதகமாகி விடுகிறது" என்று கூறினார்.

"மலக்குழிக்குள் முற்றிலும் மனிதர்கள் இறங்குவதைத் தடை செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தில் உள்ளதை ஒப்பந்த நிறுவனங்கள் மீறுகின்றன. இந்நிறுவனங்கள் அரசியல் பின்னணியுடன் இருப்பதால் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் தான் விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் இறப்பது தொடர்கதையாக உள்ளது. ராணுவம் போல மனித உயிர்களைக் காப்பது தூய்மைப்பணி. இப்பணிகளை ஒப்பந்த முறையில் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதனை திமுக கொள்கை முடிவாக எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் மலக்குழி மரணங்களைத் தடுக்க முடியும்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT