வன்னி அரசு.
வன்னி அரசு. 
மாநிலம்

தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்களைக் கைது செய்யக் கூடாது!

கவிதா குமார்

பசி, பட்டினியோடு இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்களைக் கைது செய்யக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ’காமதேனு’ இணையதளத்திடம் அவர் பேசுகையில், “இலங்கையில் பொருளாதார ரீதியாகத் தற்போது நடக்கும் இரண்டாவது போரிலும் ஈழத் தமிழர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கையைவிட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதுவரை 16 பேர் கடல் வழியாகத் தமிழகம் வந்துள்ளனர். அப்படி வந்த ஆண், பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மறுவாழ்வு முகாம்களில் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்களைக் கைது செய்யக் கூடாது" என்றார்.

மேலும், “ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் ஈழத்தமிழ் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன் பல முகாம்களில் இடநெருக்கடியும் உள்ளது. இந்த நிலையில் பசி, பட்டினியோடு இலங்கையில் இருந்து வருபவர்களை இந்த முகாம்களில் தங்க வைப்பதால் மேலும் இடநெருக்கடி ஏற்படும். எனவே, புதிதாகப் பொருளாதார முகாம்களைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும். அத்துடன் கடற்கரையில் வந்திறங்கும் ஈழத்து உறவுகளை வரவேற்கும் வகையில் அமைச்சர் தலைமையிலான குழுவை அமைத்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்" என்று வன்னி அரசு கூறினார்.

SCROLL FOR NEXT