மாநிலம்

`வன்முறையில் ஈடுபட்டால் இனி கைதுதான்'- மாணவர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

ரஜினி

மாணவர்கள் இனிமேல் வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் பல்பொருள் அங்காடியில் ஏற்கெனவே காவலர்களுக்கான வரி விலக்குடன் மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து முதல் தளத்தில் புதிதாக சுய சேவை பிரிவு விற்பனை நிலையத்தை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, "காவலருக்கு பெரிய பிரச்சினை ஓய்வு. தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் காவல் துறையினருக்கு ஒருநாள் விடுமுறை என அறிவித்தார். ஆண்டுக்கு 250 காவலர்கள் மரணம் அடைகின்றனர். அதில் குறிப்பாக 50 காவலர்கள் சாலை விபத்தில், 50 காவலர்கள் தற்கொலை செய்தும், மற்றவர்கள் ரம்மி போன்ற சூதாட்டத்தை விளையாடி தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆன்லைன், கிரிப்டோகரன்சி போன்ற விளையாட்டுகள் முறைகேடு நடைபெறுகிறது. பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். ஆன்லைன், ரம்மி பிட்காயின், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட மோசடிகளை விசாரிக்கும் பொறுப்பிலுள்ள காவலர்கள் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது" என்று கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால், "கல்லூரி மாணவர்களின் பிரச்சினை தற்போது பெரிதாக உள்ளது. ரூட் தல பிரச்சினையில் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டும் சென்னையில் நடந்த மூன்று சம்பவங்களில் பச்சையப்பன், நந்தனம், புதுக்கல்லூரி, மாணவர்கள் மீதுதான் தவறு உள்ளது.

மாணவர்கள் பஸ்சில் தொங்கி கொண்டு வருவதையும் பொது மக்களை தொந்தரவு செய்வதை தடுக்கும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்துவதை தடுப்பது குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவர்களின் பெற்றோர்களை கல்லூரிக்கு அழைத்து கல்லூரி பேராசிரியருடன் மாணவர்களை வைத்து அறிவுரை வழங்கினோம். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நடந்த சம்பவத்தில் 10 மாணவர்கள் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பள்ளி, கல்லூரிகளில் உயர்கல்வி துறை மூலமாக பள்ளி திறந்தவுடன் முதல் ஒரு வாரத்தில் இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை நிகழ்த்த செயல்படுத்தவுள்ளோம். மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடாமல் இருந்தது. ஆனால் தொடர்ந்து மாணவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

ராயபுரம் கொலை வழக்கில் தலையை மூன்று நாட்களாக தேடி வருகிறோம். அழுகிய நிலையில் இருப்பதால் கண்டுபிடிப்பதில் சிரமமாகவும், வாய்ப்பு குறைவாகவும் உள்ளது. அதற்காக டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டி உடலின் 6 பாகங்களிலிருந்து டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து உள்ளோம்.

காவல்துறையினர் பொதுமக்களை தாக்குவது தொடர்ச்சியாக உள்ளது என்று கூறமுடியாது. காவல் துறையினரும் தாக்கப்படுகின்றனர். இதுபோன்று தாக்குதல் நடத்தும் காவலர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும். பொதுமக்களை காவலர்கள் தாக்குவதற்கு எந்த உரிமையும் கிடையாது. தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிபி கூறியது போல் காவலர்கள் பொதுமக்களிடம் ஒழுக்கமாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபடாமல் இருப்பது குறித்தான பயிற்சி அளித்து வருகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT