சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரம் 
மாநிலம்

பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகராட்சி... கழிவுநீர் ஓடைகளை தூர்வாரும் பணிகள் தீவிரம்!

கே.காமராஜ்

சென்னையில் பருவமழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மாநகராட்சிக்குட்பட்ட 33 கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

சென்னை பெருநகர மாநகராட்சி 200 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோளிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களில் 33 கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைந்துள்ளன. இவற்றின் மூலம் மழைக் காலங்களின் போது மழை நீர் கடலுக்கு செல்ல ஏதுவாக உள்ளது.

சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரம்

ஆனால் இந்த கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகள் தேக்கம் காரணமாக மழைக்காலங்களின்போது தண்ணீர் கடலுக்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து விடுகிறது. இதனைத் தடுப்பதற்காக பருவமழைக்கு முன்னதாகவே அவற்றை தூர்வாரும் பணிகள் துவங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என்பதால், அதற்கு முன்னதாக இந்த பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரம்

இந்த முறை விரைவாகவே தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு இருப்பதால், பாதிப்புகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகளுக்காக ஒரு மண்டலத்திற்கு 50 லட்சம் வீதம் 7.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த புகைப்படங்களை மாநகராட்சி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT