மாநிலம்

வனத்துக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக் கூடாது!

காமதேனு

"தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக் கூடாது" என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வதால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால், தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், சிபிஐ எஸ்.பி நிர்மலா தேவி, டி.எஸ்.பி சந்தோஷ்குமார் டி.எஸ்.பி ஆகாஷ்குமார் உள்பட நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே தமிழக அரசு, தமிழக வன பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் மற்றும் வைகை அணை நக்ஸல் தடுப்பு படை கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க பரிந்துரைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கேரள அரசு இன்னும் அதிகாரியை பரிந்துரைக்காததால், சிறப்பு புலனாய்வு குழு நியமனம் தொடர்பாக இறுதி முடிவெடுக்க ஏதுவாக வழக்கு விசாரணையை மார்ச் 17 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT