மாநிலம்

தீவிர புயலாக வலுப்பெற்றது `அசானி'- 15 மாவட்டங்களில் அடமழைக்கு வாய்ப்பு

காமதேனு

வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அதன்தொடர்ச்சியாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அதிகபட்சமாக நேற்று, திருச்சி, மதுரை, ஈரோடு, வேலூர், திருத்தணி பகுதிகளில் 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயில் நிலவியது.

இதற்கிடையே, வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் மெல்ல மெல்ல வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அசானி புயல் தீவிரமாக புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது மேலும் நகர்ந்து நாளை வட ஆந்திரா - ஒரிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT